புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2011







டில்லி செல்ல கருணாநிதி திட்டம்?

First Published : 20 May 2011 05:56:22 PM IST

Last Updated : 20 May 2011 06:15:28 PM IST

சென்னை, மே 20: கனிமொழியைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கனிமொழியின் தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி, இது தொடர்பாக புதுதில்லி செல்ல முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருணாநிதி எந்நேரமும் புதுதில்லி செல்ல வாய்ப்புள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்கள் கருணாநிதியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். எனினும், ஒரு தந்தைக்குரிய மனநிலையில் தான் இருப்பதாக கூறினார்.
                                      திகார் சிறையில் கனிமொழி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் வைக்கப்பட்டனர்.
 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மாதம் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
 

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சி.பி.ஐ.உத்தரவுப்படி கனிமொழி எம்.பி.யும், சரத்குமாரும் கடந்த 6-ந் தேதி டெல்லி சிறப்பு கோர்ட்டில் அஜரானார்கள்.

கனிமொழி சார்பில் ஆஜரான பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி வாதாடுகையில், ஸ்பெக்டரம் முறைகேடுக்கும், கனிமொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். 
ஆனால் சிபிஐ தரப்பு, கனிமொழிக்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கும் தொடர்பு உண்டு என்று வாதிட்டது.

பிறகு கனிமொழி, சரத்குமார் இருவரும், தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என்று கூறி முன்ஜாமீன் மனு செய்தனர். அந்த மனு மீது 14-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி சைனி கூறி இருந்தார்.   ஆனால் உத்தரவு நகல்கள் தயாராகாததால் அன்று தீர்ப்பு வழங்காமல் 20-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இதனால் கனிமொழி கடந்த 5 நாட்களாக சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.

தீர்ப்பு நாளான இன்று அவர் 9.30 மணிக்கெல்லாம் பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டுக்கு வந்து விட்டார். 10 மணிக்கு அவர் கோர்ட்டில் ஆஜரானார். மேலும் கனிமொழி முன்ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி சைனி அறிவித்தார். 

2.30க்கு நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார்.   கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கனிமொழி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மதியம் 2.30 மணியளவில் பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் கனிமொழிக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் அங்கிருந்து 3.30 மணியளவில் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

பெண் என்பதால் தனி வேனிலும், சரத்குமார் ஒரு வேனிலும் அழைத்துச் செல்லப்பட்டனர். சிறையில் கனிமொழிக்கு பெண்களுக்கான தனி அறை ஒதுக்க அறிவுறுத்தப்பட்டது. 

கனிமொழிக்கு வீட்டில் இருந்து மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கனிமொழி திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பாக தன் மகன் ஆதித்யா மற்றும் கணவர் அரவிந்தனுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
 

நெடியவன் விசாரணை: மர்மக் கதை போன்ற உளவுத்துறை பின்னணி!

E-mailஅச்சிடுகPDF
வெளிநாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்போதைய தலைவராக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டுவந்த நெடியவன், நோர்வேயில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

நெடியவனின் இயற்பெயர் பேரின்பநாயகம் சிவபரன். நெடியவன் விசாரணை செய்யப்பட்டுள்ள விபரத்தை நோர்வேயின் தொலைக்காட்சி சேவையான TV-2 இன்று காலை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

நோர்வேயில் வைத்து விசாரிக்கப்பட்டாலும், நெதர்லாந்து உளவுப் பிரிவினரின் வேண்டுகோளின் பேரிலேயே நெடியவன் விசாரிக்கப்பட்டுள்ளார்.

நோர்வே பொலீஸ் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மில்லியன் கணக்கிலான யூரோ பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாகவே இவர் விசாரிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

இந்தப் பண விவகாரம் தொடர்பாக சிலர் ஏற்கனவே நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதுபற்றிய முக்கிய வழக்கு ஒன்றும் நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது. இந்த விவகாரம் முதலில் வெளியே தெரியவந்தது, கடந்த வருடம் (2010) ஏப்ரல் மாதத்தில்தான்.

அப்போதுதான் நெதர்லாந்தில் இதனுடன் தொடர்பான முதல் கைதுகள் இடம்பெற்றன. ஆனால் அதற்கு முன்னரே, பின்னணியில் பல காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

விறுவிறுப்பான மர்ம நாவல் போன்ற அந்த விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். ஆரம்பத்தில் நெதர்லாந்து பொலீஸ்தான் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருந்தது.

நெதர்லாந்துப் பிரஜை ஒருவர், ரொத்தர்டாம் பொலீஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு செய்திருந்தார். குறிப்பிட்ட ஒரு நபர், தம்மை வற்புறுத்தி பண வசூல் செய்கின்றார் என்பதே அந்த முறைப்பாடு.

அடுத்த சில தினங்களில், இதேபோல வேறு சில முறைப்பாடுகளும் வெவ்வேறு பொலீஸ் நிலையங்களில் பதிவாகின. இந்தப் பதிவுகள் நெதர்லாந்தின் வெவ்வேறு நகரங்களிலும் பதிவாகியிருந்தன.

இந்தப் பதிவுகள் நெதர்லாந்து பொலீஸ் இலாகாவுக்கு ‘தலைக்குள் மணியடிக்க’ வைத்தது! இது ஒரு தனிப்பட்ட கொடுக்கல்-வாங்கல் அல்ல, ஒருவிதமான பணச் சேகரிப்பு என்பது அவர்களுக்குப் புரிந்தது. அவர்கள் தமக்குக் கிடைத்திருந்த சில ‘பணச் சேகரிப்பு’ தொடர்பான விபரங்களை ஆராய்ந்தபோது, சில வில்லங்கமான தகவல்கள் கிடைத்தன.

இவை சாதாரண பணப்பரிமாற்றங்கள் அல்ல என்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன. ஆனால், நெதர்லாந்து பொலீஸ் யாரையும் கைது செய்யவில்லை.

வற்புறுத்தி பணம் சேகரிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரை, சுதந்திரமாக வெளியே திரிய விட்டிருந்தது நெதர்லாந்து பொலீஸ். ஆனால் அவரது நடமாட்டங்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டன. இது மாதக்கணக்கில் நடந்தது.

இந்தக் கண்காணிப்பு ஒருபக்கமாக நடந்து கொண்டிருக்க, தமது விசாரணையை ரகசியமாக விஸ்தரித்தது நெதர்லாந்து பொலீஸ். அந்த விசாரணைகளில், பணச் சேகரிப்பு நடைபெறுவது உறுதியாகியது.

இந்தப் பணம் போய்ச் சேர்ந்த இடம், நெதர்லாந்துக்கு வெளியே, விடுதலைப்புலிகள் அமைப்பின் அலுவலகம் ஒன்றுக்கு என்ற விபரமும் கிடைத்தது. விடுதலைப்புலிகள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2006ம் ஆண்டே பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டு, தடைசெய்யப்பட்டிருந்தது.

நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளில் ஒன்று. இதனால், இந்தப் பணப் பரிமாற்றங்கள், தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கான ‘நிதி சேகரிப்பு’ என்ற வகைக்குள் வந்தது. விஷயம் ‘பெரியது’ என்று தெரிய வந்ததும் நெதர்லாந்து பொலீஸ் இலாகா, இந்த விவகாரம் தமது சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்து கொண்டது.

அதையடுத்து தாம் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் நெதர்லாந்து உளவுப்பிரிவு ஒன்றிடம் ஒப்படைத்தது பொலீஸ் இலாகா.

மற்றைய நாடுகளைப் போலவே, நெதர்லாந்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட உளவுப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் நெதர்லாந்து தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான உளவுப் பிரிவின் கைகளிலேயே இந்த விபரங்கள் போய்ச் சேர்ந்தன.

டச் மொழியில் Algemene Inlichtingen- en Veiligheidsdienst (AIVD) என்று அழைக்கப்படும் இந்த உளவுப்பிரிவின் தலைமையகம், Zoetermeer என்ற இடத்தில் உள்ளது. AIVD, தமது பாணியில் மேலதிக விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கியது.

நெதர்லாந்திலிருந்த சில தொலைபேசி இலக்கங்கள் அவர்களது கண்காணிப்புக்குள் வந்தன.

அந்தத் தொலைபேசி இலக்கங்களுக்கு வந்த சில அழைப்புகள் அவர்களை ஆச்சரியப்பட வைத்தன. சில வெளிநாடுகளில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளில், நெதர்லாந்தில் நடைபெறும் பணப் பரிமாற்றங்கள் பற்றி அவ்வளவாக பேசப்படவில்லை.

ஆனால், அந்தந்த வெளிநாடுகளில் நடைபெற்ற பணப்பரிமாற்றங்கள் பற்றிய கணக்குகள், நெதர்லாந்து தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இது AIVDக்கு முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், போகப்போக, வெளிநாட்டுப் பணச் சேகரிப்புக் கணக்குகளும் நெதர்லாந்திலுள்ள ஒரு நபருக்குத் தெரிவிக்கப்படுகின்றது என்று புரிந்து போனது.

அந்த நபர் சர்வதேச அளவில் பணச்சேகரிப்புக் கணக்குகளைக் கையாளும் நபராக இருக்கலாம் எனவும் ஊகிக்கப்பட்டது. இது நடைபெற்றுக்கொண்டு இருக்கையில், வெளிநாடுகளில் இருந்து பணம் பற்றிய கணக்குகள் மாத்திரமே நெதர்லாந்துக்குள் வருகின்றன, ஆனால், பணம் வருவதில்லை என்பது கவனிக்கப்பட்டது.

மாறாக, நெதர்லாந்தில் சேகரிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி, நெதர்லாந்துக்கு வெளியே செல்வது தெரியவந்தது. இதிலிருந்து, பணம் கணக்குப் பார்க்கப்படும் இடம்தான் நெதர்லாந்து என்றும், பணம் போய்ச்சேரும் இடம் நெதர்லாந்துக்கு வெளியே இருக்கிறது என்றும் ஊகித்தது உளவுத்துறை.

அதையடுத்து, சில வெளிநாட்டு உளவுத்துறைகளிடமிருந்தும் இந்தப் பணப்பரிமாற்றங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டது AIVD. இந்த வகையில் AIVD தொடர்புகொண்ட வெளிநாட்டு உளவுத்துறைகளில் ஒன்று, ஜேர்மன் உளவுத்துறையான Bundesnachrichtendienst (BND) அவர்களும் கிட்டத்தட்ட இதேபோன்ற பணப்பரிமாற்றங்கள் தொடர்பான தகவல் சேகரிப்பில் இருந்தது அப்போது தெரியவந்தது.

நெதர்லாந்து உளவுத்துறையும், ஜேர்மன் உளவுத்துறையும் தத்தமது கையிலுள்ள தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொண்டனர். அப்போதுதான், முதன்முதலில் இந்த விவகாரத்துக்கு ஒரு முழு உருவம் கிடைக்கத் தொடங்கியது.

பணப்பரிமாற்றத்தின் ஜேர்மனித் தொடர்புகள் பற்றிய விபரங்கள் கிடைத்தன. நெதர்லாந்து உளவுத்துறை சம்மந்தப்பட்ட ஆட்களை வெளியே சுதந்திரமாக உலாவவிட்டு விபரங்களைச் சேகரித்ததுபோலச் செயற்படவில்லை ஜேர்மன் உளவுத்துறை.

அவர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கிவிட்டனர். கடந்த வருடம் மார்ச் மாத முதல் வாரத்தில், ஜேர்மன் உளவுப்பிரிவினர் ஜேர்மனியிலுள்ள மொத்தம் 8 இடங்களை ஒரேநேரத்தில் சுற்றி வளைத்தனர். இந்த 8 இடங்களில், தமிழர் தொடர்பு மையம் ஒன்றின் அலுவலகமும் அடக்கம்.

இந்தச் சுற்றிவளைப்பில் ஜேர்மன் பிரஜாவுரிமை பெற்றவர்கள் உட்பட, 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஜேர்மன் கைதுகளுடன், நெதர்லாந்தில் விஷயங்கள் கொஞ்சம் குழம்பிப் போயின. தங்களால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஆட்கள் உடனடியாகவே வெளித் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டதை AIVD கவனித்தது.

இனியும் இவர்களை வெளியே விட்டு வைத்திருப்பதால், மேலதிக தகவல்கள் கிடைக்கப் போவதில்லை என்பதும் புரிந்து போனது. இதன் பின்னரே, AIVD தனது வேட்டையைத் தொடங்கியது. ஏப்ரல் மாதம், நான்காவது வாரம்.

நெதர்லாந்து உளவுத்துறை ஒரே நேரத்தில் மொத்தம் 16 இடங்களைச் சுற்றிவளைத்தது. இதில் 7 பேர் கைதாகினர். கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கள், டி.வி.டிக்கள், போட்டோக்கள் உட்பட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ரொக்கப் பணமாக 40,000 யூரோக்களும் எடுக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில், விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு பிரதான கணக்காளரும், நெதர்லாந்துத் தலைவரும் அடக்கம் என்று கூறப்பட்டது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் மகளிர் அமைப்பு, தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் நெதர்லாந்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டது. இந்தக் கட்டத்தில், விவகாரம் நெதர்லாந்து நீதிமன்றத்துக்குச் சென்றது.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதி சேகரித்தல் தொடர்பான வழக்கு பதிவாகியது. வழக்கு ஒருபுறத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க, AIVD இந்த விவகாரத்தில் மேலதிக உளவுத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தது. காரணம், இந்தப் பணப்பரிமாற்றங்கள், ஒரு சர்வதேச வலையமைப்பாகச் செயற்பட்ட தகவல்கள் அவர்களிடம் கிடைத்திருந்தன.

அதேநேரத்தில் ஜேர்மனியில் BND, தமது விசாரணை வட்டத்துக்குள் இருந்தவர்களை விசாரித்து, இந்த வலையமைப்பின் பரிமாணங்களைப் புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தது.. அவர்களது விசாரணையில் வித்தியாசமான தகவல் ஒன்று கிடைத்தது. அது என்னவென்றால், ஜேர்மனியில் பணச் சேகரிப்புடன் தொடர்புடைய ஒருவர், யுத்தம் முடிவடைந்தபின் தம்வசமிருந்த பணத்துடன் ஜேர்மனியைவிட்டு வெளியேறிவிட்டார் என்பது.

அவருக்கு வலைவிரித்த ஜேர்மன் உளவுத்துறை, அவர் ஆபிரிக்காவில் மடகாஸ்கரில் தன்னிடமுள்ள பணத்துடன் செட்டிலாகிவிட்டதைத் தெரிந்து கொண்டது. BND கோரியதையடுத்து அந்த நபர் மடகாஸ்காரிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

ஜேர்மன் பிரஜையான அவர் டியூசல்டோஃப் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, அவரைக் கைது செய்து தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டது BND. நெதர்லாந்து உளவுத்துறையிடம் இந்த சர்வதேச வலையமைப்பு தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கத் தொடங்கின.

பிரிட்டன், சுவிஸ், கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், நோர்வே உட்பட சில நாடுகளில் இந்த வலையமைப்பில் இணைக்கப்பட்டிருந்த தகவல்கள் அவர்களிடம் இருந்தன. அந்த நாடுகளின் உளவுத் துறைகளின் ஒத்துழைப்பு கோரப்பட்டது. AIVDயின் அதிகாரிகள் இந்த நாடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேகரிக்கப்பட்ட பணத்துக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தபோது, இவர்களால் விசாரிக்கப்பட்ட அனைவருமே ஒரே திசையை நோக்கித்தான் கையைக் காட்டியிருக்கிறார்கள். “All roads lead to Rome” என்று சொல்வதைப்போல, எல்லாத் தகவல்களும் நோர்வேயில் வசிக்கும் நெடியவன் என்ற நபரை நோக்கியே இருந்திருக்கின்றன.

அதையடுத்தே நெடியவனை விசாரிக்கும் முடிவு நெதர்லாந்தில் எடுக்கப்பட்டது. நோர்வேயின் உதவியும் கோரப்பட்டது. சட்டரீதியான இந்த விவகாரத்தில் நெதர்லாந்துக்கு உதவ, நோர்வேக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. கடந்த புதன்கிழமை (மே 18ம் தேதி) உலகின் வெவ்வேறு நகரங்களிலும் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன.

இவற்றில் பல நெடியவனின் தலைமையிலான குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டவை என்று கூறப்பட்டது. இந்த நிகழ்வுகள் நடைபெற்ற அதே மே 18ம் தேதி, நெடியவன் ஒஸ்லோவில் விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்! நெதர்லாந்திலிருந்து இந்த விசாரணைக்கென்று விசேடமாக ஒரு நீதிபதியும், ஆறு டிஃபென்ஸ் அட்டேர்னிகளும் நோர்வே சென்றிருந்தனர்.

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில், மூடிய அறைக்குள் நெடியவன் மீதான விசாரணைகள் நடைபெற்றன. விசாரணைகள் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டன.

விசாரணையின்பின் என்ன நடக்கும்? தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவாரா? விசாரணையில் என்ன விபரங்கள் வெளிவரும்? வேறு யாராவது, வேறு நாடுகளில் வைத்து விசாரிக்கப்படுவார்களா? இவைதான் இன்று மில்லியன் டொலர் கேள்விகள். 

கருத்துகள் இல்லை:

ad

ad