புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2012

ஈழத்தமிழரை அழிக்க துணைநின்ற காங்கிரஸ் கட்சியை மக்களவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்!- சீமான்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 08:45.48 AM GMT ]
இலங்கையில் தமிழின அழிப்பை முழுமையாக செய்து முடிக்கத் துணை நின்ற காங்கிரஸ் கட்சியை விரைவில் வர இருக்கிற மக்களவைத் தேர்தலில் முற்றிலுமாக அழித்தொழிக்கத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்தார்.
இது தொடர்பில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய இலங்கைக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் நோக்குடன், இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா தலைமையில் 108 பேர் கொண்ட இந்திய தொழில் முனைவோர் குழு இன்றைக்கு கொழும்பு செல்கிறது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் தற்போது 4.5 பில்லியன் டாலர்களாக உள்ள இரு நாட்டு வர்த்தகத்தை 9 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதும், இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே நிலவிவரும் இராணுவ உறவை மேலும் பலப்படுத்தும் திட்டத்துடன் இக்குழுவின் பயணம் இருக்கும் என்று மத்திய வர்த்தக அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வமாக அறவிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக அமைச்சகமும், இந்திய தொழில் கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்து மேற்கொள்ளும் இந்த பயணம், ஒட்டுமொத்தமாக தமிழர்களை அவமதிக்கும் நடவடிக்கையாகும்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போரை தொடங்கிய ராஜபக்சவின் இன வாத அரசுக்கு எல்லா வகையிலும் உதவி, தமிழின அழிப்பை முழுமையாக செய்து முடிக்கத் துணை நின்ற மத்திய காங்கிரஸ் அரசு, கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கை அரசுடன் தனது உறவை பலப்படுத்திக்கொள்ள தமிழர் நலனை பகடையாக்கி வருகிறது.
தமிழர்களின் நலனை, அவர்களுக்கு அரசியல் சம உரிமை பெற்றுத் தருவோம் என்று கூறிக்கொண்டு, இலங்கை தமிழர் சிக்கலில் தலையிட்ட மத்திய அரசு, இதுவரை ஈழத் தமிழர்களுக்கு பெற்றுத் தந்த உரிமை என்ன? ஒன்றுமில்லை.
ஆனால், தமிழினத்தை அழிக்கத் துணை நின்றதன் மூலம் இலங்கை அரசுடன் உருவாக்கிக்கொண்ட நட்பை பயன்படுத்தி, இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் அங்கு தொழில் தொடங்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இப்படிப்பட்ட ஒரு முயற்சியைத்தான் இரண்டாண்டுகளுக்கு முன்னர், சர்வதேச திரைப்பட விழாவின் மூலம் முன்னெடுக்க முயற்சித்தது. அதனை நாம் தமிழர் கட்சியும், தமிழின உணர்வு அமைப்புகளும் இணைந்து போராடி முறியடித்தன. இப்போது மீண்டும் ஒரு முயற்சியை இந்திய வர்த்தக அமைச்சர் மேற்கொள்கிறார்.
இலங்கையின் தமிழினத்தை அழித்தொழித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்திய அரசு வாக்களித்தது வெறும் கண்துடைப்பு என்பதை மத்திய அரசின் இப்படிப்பட்ட தமிழின துரோக நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. இதனை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
மத்திய அரசு என்பது கடந்த காலங்களிலும் தமிழினத்திற்கு எதிராகவே செயல்பட்டது, இதற்கு மேலும் அதன் போக்கு தமிழினத்திற்கு எதிராகவே இருக்கப்போகிறது என்பதற்கு இந்த வர்த்தகப் பயணம் மேலும் ஒரு சான்று.
மத்திய ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சித் தலைமையிலான கூட்டணி அரசை அகற்றாமல், தமிழினத்திற்கு விடிவு பிறக்காது என்பதை கருத்தில் கொண்டு, மக்களவைத் தேர்தலுக்காக தமிழ் மக்கள் காத்திருக்க வேண்டும். தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வியுறச் செய்தனர்.
விரைவில் வர இருக்கிற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக அழித்தொழிக்கத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ad

ad