புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2012


இலங்கையின் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க எட்டு ஆலோசனைகளை வழங்கிய சுப்ரமணியம் சுவாமி
அரசியலமைப்பின் 13+ திருத்தத்தில், முதலமைச்சர்களுக்கு பொது ஒழுங்கைப் பேணுவதில் அதிகாரம் வழங்கும் சரத்துக்களைச் சேர்க்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்றுவந்த இரண்டாவது இராணுவ செயலமர்வின் இறுதி நாள் இன்றாகும். இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுப்ரமணியம் சுவாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சிங்கள பெரும்பான்மையினருக்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இரு தரப்பினரும் ஏற்கக்கூடிய ஆலோசனைகள் என்ற அடிப்படையில் இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு அவரால் 8 ஆலோசனைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

01. நல்லிணக்கத்துக்கான முன்மொழிவுகள் வெளியிலிருந்து திணிக்கப்பட முடியாது. இது பங்குதாரர்கள் யாவரினதும் பங்குபற்றலுடன் இலங்கையில் உருவாக வேண்டும். அத்துடன், இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் எவையும் இலங்கை மீது தீர்வினைத் திணிக்க முடியாது.

02. நாடாளுமன்றத்தில் ஓரளவு ஏற்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 13 + திருத்தத்தின் அடிப்படையில் இறு தீர்வுக்கான ஆலோசனைகள் அமைய வேண்டும்.

03. மாகாணங்களின் ஒன்றியமாக இலங்கை அமையும் வகையில் அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும். மத்திய அரசாங்கத்துக்கும் மாகாணங்களுக்கும் தனித்தனியான அதிகாரங்கள் மற்றும் பொது அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டும்.

04. இலங்கை அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறையில் அமைய வேண்டும். ஒன்றியம், மாகாணம் ஒன்றின் அரசாங்கத்தைக் கலைக்கும் நிர்வாகத்தை பொறுப்பேற்கும் ஏற்பாடு இந்த அரசியலமைப்பில் இருக்க வேண்டும்.

05. பொது ஒழுங்கைப் பேணுவதற்கு மாகாண அரசாங்கத் தலைவரின் கீழ் மாகாண பொலிஸ் அமையும். ஆனால், ஒன்றியத்தின் அதாவது மத்திய அரசாங்கத்தின் கீழ் றிசேர்வ் பொலிஸும் ஆயுதப் படைகளும் இருக்கும்.

06. மத்திய அரசு அல்லது ஒன்றியம் விசேட மாவட்ட நீதவான்களை நியமிக்கும். இந்த நீதவான்களுக்கு மாகாணங்களின் நீதவான் வழங்கிய தீர்ப்புக்களை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் இருக்கும். இவ்வாறாக புதிய அரசியலமைப்பில் நீதித்துறை அமையும்.

07. இலங்கை அரசு சமய சார்பற்றதாக இருக்கும். இலங்கை பௌத்த நாடாயினும் சகல சமயங்களையும் பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும்.

08. தமிழ், சிங்கள சமுதாயங்கள் ஓரின பரம்பரை அடியிலிருந்து தோன்றியவர்கள். வரலாறு, கலாசாரத்தால் இணைந்தவர்கள். இரு மொழி எழுத்துக்களும் பிராமி அடிப்படையிலானவை. சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளின் பொதுப் பாரம்பரியங்கள் தமிழ், சிங்கள மக்களிடையே காணப்படுகின்றன.
போன்ற 8 ஆலோசனைகளை வழங்கினார் சுப்ரமணியம் சுவாமி.

எனவே, தமிழர்களை சிங்களவர் பெரும்பான்மையாக உள்ள இடங்களிலும் சிங்களவர்களை தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களிலும் குடியேற்ற வேண்டும். இதை அரசாங்கம் ஊக்குவிப்புக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளால் ஊக்குவிக்க வேண்டும். நிச்சயமாக இதில் அரசாங்கத்தின் நெருக்குவாரம் இருக்கக்கூடாது.

இதுவே அடைய வேண்டிய இறுதி ஐக்கியமான நிலையாகும் என அவர் தனது 8 ஆலோசனைகளையும் பட்டியலிட்டுள்ளார்.
இதனையடுத்து தொடர்ந்தும் உரையாற்றிய சுப்ரமணியம் சுவாமி கூறுகையில்,

'பயங்கரவாதத்தை தோற்கடித்த பெருமை, அதற்கு தேவையான அரசியல் தலைமையை வழங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரியது. இலங்கை இராணுவம் சாதித்த உலகின் வரலாற்றுச் சாதனையான வெற்றியை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

ஆரம்ப காலத்திலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்டு வந்தது. அத்துடன் அவ்வியக்கம் ஒப்பந்த அடிப்படையில் கொலைகளையும் செய்துள்ளது.

இப்போதைய இந்திய அரசாங்கம் போலன்றி இனிமேல் அமையக்கூடிய நல்லதொரு அரசாங்கம் சகோதர தேசமான இலங்கைக்கு தன் அன்பையும் ஆதரவையும் வழங்கும். அப்போது தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் உள்ள தீய சக்திகளால் மீண்டும் தலைதூக்க முடியாது போகும்.

இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தமையை விரும்பவில்லை. இந்தியாவின் இந்த தீர்மானத்தை எண்ணி வருந்துகின்றேன்.

யுத்தத்துக்கு எதிரான இலங்கையின் வெற்றியைத் திசைத்திருப்ப பலர் முயற்சிக்கின்றனர். ஆனால், தமிழ் மக்கள் இந்த வெற்றியினால் கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தை உணர்வுபூர்வமான அனுபவித்து வருகின்றார்கள். அவர்கள் தற்போதைய நிலைமையை எண்ணி மகிழ்கிறார்கள்.

ஜனநாயகத்துக்காகப் பாடுபட்ட தமிழ்த் தலைவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தது. தரை, வான் மற்றும் கடல் மார்க்கமான தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவுக்கு புலிகள் இயக்கம் பலம்பெற்றிருந்தது. இந்த பலம் இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது.

ஆனால் இலங்கைப் படையினரின் யுத்த வெற்றியால் இன்று இலங்கையைப் போன்றே இந்தியாவும் புலிகளின் அச்சுறுத்தலின்றி சுதந்திரமாகச் செயற்படுகின்றது. தமிழர்களைப் போன்று சிங்களவர்களும் மிகவும் தைரியமாக இந்தியாவுக்கு வந்து செல்கின்ற நிலைமை இன்று உருவாகியுள்ளது' என்றார்.

ad

ad