புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2012


டெசோ: கனவா? தீர்வா?இளந்தமிழன்
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு தருமா? இல்லை, அவை வெறும் காகிதப் புலிகள்தாமா?


இரண்டு கழகங்களுக்கிடையிலான ஈகோ பிரச்சினையில், தங்கம் விலை போல நிமிடத்திற்கு நிமிடம் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த டெசோ மாநாடு இறுதியில் இனிதே நடந்தேறிவிட்டது. ‘இனிதே’ என்றுதான் சொல்ல வேண்டும். வீர வசனங்களோ, கசப்புணர்வு கசியும் விமர்சனங்களோ அதிகம் இல்லாமல் முகமன்களோடும், புகழாரங்களோடும் முடிந்த அந்த மாநாடு 14 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. அந்தத் தீர்மானங்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு தருமா? இல்லை, அவை வெறும் காகிதப் புலிகள்தாமா?

இந்தத் தீர்மானங்களில் சில, ஐக்கிய நாடுகள் சபை சில செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்டுகின்றன, வற்புறுத்துகின்றன. சில மத்திய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்கள்.இரண்டு வகையான தீர்மானங்களும் உயரிய நோக்கங்கள் கொண்டவை. ஆனால், அவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு.

ஐ.நா. சபை மனித உரிமை ஆணையம் நிறைவேற்றிய தீர்மானத்தை, இலங்கை அரசு உறுதியுடன் நிறைவேற்றுகிறதா என்பதைக் கண்காணிக்க, மேற்பார்வைக் குழு ஒன்றை ஐ.நா. சபை அமைக்க வேண்டும் என்கிறது ஒரு தீர்மானம்.

மார்ச் மாதம் 22ம் தேதி ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 24 நாடுகளின் ஆதரவையும், 15 நாடுகளின் எதிர்ப்பையும் பெற்று நிறைவேறியது. அந்தத் தீர்மானத்தில் அமெரிக்கா மூன்று விஷயங்களை வலியுறுத்தியது.

அவை: 1. சர்வதேச மனித உரிமைச் சட்ட மீறல்களை இலங்கை அரசு எவ்விதம் கையாளப் போகிறது? 2. இலங்கை அரசே அமைத்த LLRC விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை அது எப்படி அமல்படுத்தப்போகிறது? 3. ஐ.நா.வின் மனித உரிமை அலுவலகம் இலங்கை அரசுக்கு ஆலோசனைகளும், உதவிகளும் அளிக்க வேண்டும், அதை இலங்கை அரசு ஏற்க வேண்டும்.  

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் ஹைகமிஷனர், ஓராண்டுக்குப் பின், அதாவது 2013 மார்ச் மாதம் வாக்கில் மனித உரிமை ஆணையத்திற்கு இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தியது என அறிக்கை அளிக்க வேண்டும். அதனால், ஏற்கெனவே இலங்கை அரசை இது தொடர்பாக வற்புறுத்தி வருகிறது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.

அதற்கும் முன்பாக 2010ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன், இதே மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி, இலங்கையுடனான வர்த்தகத்திற்கு இருந்த முன்னுரிமையை விலக்கிக் கொண்டது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. ஆகியவற்றின் நிர்பந்தத்திற்குப் பணியாத இலங்கை அரசா, டெசோவின் தீர்மானத்தைக் கண்டு மிரண்டுவிடப் போகிறது?

‘இலங்கைத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்து கொள்ள, ஐ.நா. சபையில் இந்திய அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும்’ என்பது  நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களில் ஒன்று. இதை ஒரு முக்கியமான தீர்மானம் எனக் கருதுகிறார் கருணாநிதி. "இதை விட இந்திய அரசுக்கு எந்த வகையில் அழுத்தம் கொடுக்க முடியும் எனத் தெரியவில்லை?" என்று மாநாட்டில் பேசுகையில் கருணாநிதி கேட்டுள்ளார்.

கிழக்குத் தைமூரில் நடந்ததைப் போல, தெற்கு சூடானில் நடந்ததைப் போல இலங்கையிலும் Referendum என்று சொல்லப்படும் ஒரு கருத்தாய்வை நடத்த இந்தியா ஐ.நா. மூலம் முயற்சி எடுக்க வேண்டும் என்பதைத்தான் இந்தத் தீர்மானம் குறிப்பிடுகிறது என நினைக்கிறேன். ஆனால்,அது போன்ற கருத்தாய்விற்கான முயற்சியை இந்தியா ஒருபோதும் மேற்கொள்ள முன்வராது. காரணம்: காஷ்மீர்.

1947ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது காஷ்மீர் தொடர்பாக இரு நாடுகளின் படைகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டபோது ஐ.நா. தலையிட்டது. 1949ம் ஆண்டு அர்ஜெண்டினா, பெல்ஜியம், கொலம்பியா, செக்கோஸ்லோவாக்கியா, அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளைக் கொண்ட ஒரு குழுவை காஷ்மீர் பிரச்சினையைக் கையாள அமைத்தது. அந்தக் குழு காஷ்மீரின் எதிர்காலமென்ன என்பதை மக்களே முடிவு செய்யட்டும். அதை அறிந்துகொள்ள கருத்தாய்வு நடத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. ஆனால், இந்தியா இன்றுவரை அதை ஏற்கவில்லை.

இன்று இலங்கையில் கருத்தாய்வு நடத்த வேண்டும் என ஒரு தீர்மானத்தை முன்மொழியுமானால், உடனே இலங்கை அல்லது பாகிஸ்தான் காஷ்மீரில் கருத்தாய்வு நடத்த வேண்டும் என எதிர்த் தீர்மானம் கொண்டு வரலாம். ஏற்கெனவே முன்பு ஒரு முறை தமிழக அரசியல்வாதிகள் கருத்தாய்வு பற்றிக் குரல் எழுப்பியபோது, முதலில் காஷ்மீரிலும், பின் திராவிட நாடு வேண்டுமா எனத் தென் மாநிலங்களிலும் இந்தியா கருத்தாய்வு நடத்தட்டும் என இலங்கையின் மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவாக்க சூடான பதிலடி கொடுத்தார்.

ஒருவேளை, இலங்கை ஐ.நா.வில் அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் எல்லா உலக நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கும் எனச் சொல்ல முடியாது. ஐ.நா. மனித உரிமை ஆணையத் தீர்மானத்தில் ரஷ்யாவும் சீனாவும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. சீனா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அண்டை நாடுகள் எல்லாம் இந்தியாவிற்கு எதிரான ஓர் அணியாகத் திரள்வதை இந்தியா விரும்பாது. எனவே இந்தத் தீர்மானமும் வெறும் காகிதக் கணைதான். இதைத்தான் இந்திய அரசுக்கு வைக்கும் உச்சபட்ச அழுத்தம் எனக் கருணாநிதி சொல்கிறார். வேறு எப்படி அழுத்தம் கொடுப்பது என்றும் கேட்கிறார். வேறு எப்படி அழுத்தம் கொடுப்பது என்பதை அவர் மம்தாவிடமும், சரத்பவாரிடமும்தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் அல்லது மன்மோகன் சிங் அரசு அமைக்கும்போது தனக்கு வேண்டிய அமைச்சகங்களைத் தனக்கு வேண்டியவர்களுக்குப் பெற்றுத் தர என்ன செய்தோம் என்று அவரே தனது நினைவடுக்கில் தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.

மத்திய அரசையும் வற்புறுத்தி சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கச்சத் தீவை மீட்க வேண்டும் என்பது அதில் ஒன்று. இதை வலியுறுத்துவதற்கு சென்னை ஒ.எம்.சி.ஏ. மைதானத்தில் மாநாடு தேவையில்லை. கருணாநிதியின் கட்சியும் மத்திய அரசில் அங்கம் வகிக்கிறது. அதன் மத்திய அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் இதை வலியுறுத்தலாம். அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தலாம் அல்லது யாரைக் கேட்டுக் கொடுத்தாய் என ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கும் வழக்கில் தன்னையும் ஒரு வாதியாகச் சேர்த்துக்கொள்ள மனுச் செய்யலாம். இதையெல்லாம் விட்டு இங்கு தீர்மானமும் அங்கு சலாமும் போடுவதால், தீவு திரும்பி வந்து விடாது.

இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து குடியேறியவர்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என மத்திய அரசைக் கோருகிறது இன்னொரு தீர்மானம். அசாம் எரிந்து கொண்டிருக்கும்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானத்திற்கு மத்திய அரசு எப்படி எதிர்வினையாற்றும் என்பது சின்னக் குழந்தையால்கூட ஊகிக்க முடியும்.

மாநாடு கூட்டுவதும், தீர்மானம் போடுவதும், அவை நிறைவேற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருந்து விட்டு பல வருடங்கள் கழித்து நாங்கள் அன்றைக்கே தீர்மானம் போட்டோம் என வரலாறு பேசுவதும் திமுகவிற்கு வாடிக்கை. ஒரு தீர்மானம் போட்டால், அதை நடைமுறைப்படுத்திவிட்டுத்தான் ஓயும் என்ற நிலை என்றும் திமுகவிடம் இருந்ததில்லை. அதன் மாநில சுயாட்சித் தீர்மானங்கள் ஒரு தலைசிறந்த உதாரணம். இந்தத் தீர்மானங்களும் அப்படி ஆனால், ஆச்சரியப்பட ஏதுமில்லை.

மாநாட்டின் தீர்மானங்கள் நடைமுறைக்கு வர வேண்டுமானால், மத்தியில் ஆளும் காங்கிரசின் எண்ணங்களும் திமுகவின் கருத்துக்களும் இலங்கைப் பிரச்சினையில் ஒரே நேர்கோட்டில் வர வேண்டும். ஆனால், அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. தனி ஈழம் பற்றிப் பேசுகிற மாநாடல்ல, மறுவாழ்வு, புனரமைப்பு போன்ற விஷங்களைப் பேசுகிறமாநாடுதான் என்ற போதிலும்கூட காங்கிரஸ் இந்த மாநாட்டைப் புறக்கணித்து விட்டது. அது  மட்டுமல்ல, மத்திய அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் அல்லாத அமைச்சர்கள் பங்கேற்பதைக்கூட அது விரும்பவில்லை. அதனால், சரத் பவாரும் பாரூக் அப்துல்லாவும் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார்கள். தனித் தமிழ் ஈழம் என்ற தீர்மானம் கூடாது என்று மத்திய அரசு வற்புறுத்தியதாகச் செய்திகள் கசிந்தன. ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்த சில நிபந்தனைகளின் பேரில்தான் அனுமதி அளித்தது. இலங்கையிலிருந்து பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு விசா கொடுக்கவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிர ஆர்வம் காட்டி, அதன் பொருட்டுச் சிறைக்கும் சென்ற பழ.நெடுமாறன், வைகோ, சீமான், தியாகு போன்றவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. இலங்கைப் பிரச்சினை குறித்துப் பேசி வருகிற மருத்துவர் ராமதாசையும் மாநாட்டில் காணோம். இலங்கைத் தமிழர்கள், ‘நாடு கடந்த அரசு’ என்ற ஓர் அமைப்பை நடத்தி வருகிறார்கள். அதற்குத் தமிழ்நாட்டிலிருந்தும் பிரதிநிதி ஒருவர் உண்டு. அவர் சென்னையிலேயே வசிக்கிறார். அவரும்கூட இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.

‘தனி ஈழம் தன் நிறைவேறாத கனவு, அதற்குப் போராடப் போகிறேன்’ என்கிறார் கருணாநிதி. உண்மையிலேயே அவர் அப்படி விரும்புகிறார் என்றால், முதலில் அவர் தமிழ்நாட்டு அரசியல் சக்திகளிடையே ஓர் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். தமிழ் ஈழம் குறித்துப் பேசி வருகிற நெடுமாறன், வைகோ போன்ற தலைவர்களை அழைத்துப் பேச வேண்டும். அடுத்த கட்டமாக உலகத் தமிழர்களிடையே ஓர் ஒருங்கிணைப்பைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். ஆனால், இவற்றிற்கெல்லாம் அவரது கட்சி காங்கிரசுடன் வைத்திருக்கும் உறவு தடையாக இருக்கும்.

ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறவே திமுக இந்த மாநாட்டை நடத்தியுள்ளதாக, மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை நவ சம சமாஜ் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணரத்தின கூறியுள்ளார்.  "இலங்கையில் 2009ல் இறுதிப்போர் நடைபெற்றபோது தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார் என்பது உண்மைதான். அதே சமயம் இப்போது கருணாநிதி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சரியானது என்றே கருதுகிறோம். அதன் காரணமாகவே நான் மாநாட்டில் பங்கேற்கிறேன். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலிருந்து அவர் வெளியேறத் திட்டமிட்டுத்தான் இந்த மாநாட்டை நடத்துவதாகக் கருதுகிறேன்" என்கிறார் அவர் (‘தினமணி’ ஆகஸ்ட் 13).

அப்படியும் நடக்குமோ?


‘‘டெசோ மாநாட்டில் எனக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை’’.: சிவந்தன்
லண்டன் ஒலிம்பிக்ஸில் இலங்கை பங்கேற்பதைக் கண்டித்து சிவந்தன் கோபி  என்ற இலங்கைத் தமிழர் லண்டனில் இருபத்தியோரு நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது போராட்டத்தைக் கைவிடுமாறு கருணாநிதி அறிக்கை மூலம் கேட்டிருந்ததாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக லண்டனிலிருந்த,  ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செய்தியாளர், சிவந்தனை பேட்டி கண்டார். அப்போது டெசோ மாநாடு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாகவும், இம்மாநாட்டின் மூலம் தமிழ் ஈழம் அமையுமா என்கிற கேள்விகள் கேட்கப்பட்டன.  அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த சிவந்தன்,‘டெசோ மாநாட்டில் எனக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. இது எனது தனிப்பட்ட கருத்தாக இருந்தபோதிலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கருத்தும் இதுவாகத்தானிருக்கும் என நம்புகிறேன். எங்களது மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது, அவர்களது பரிதாப நிலையைப் பார்த்த பின்பும் ஒரு முடிவினை எடுக்க முடியாத கலைஞர் கருணாநிதி அவர்கள், தற்போது எங்களுக்கு ஒரு தீர்வுத்திட்டத்தினை பெற்றுத் தருவதாகக் கூறுவதும், ஈழத்திற்கான பிரேரணை கொண்டு வருவதும் தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தோற்றுவித்துள்ளது. எங்களை ஏமாற்றுவதற்கான ஒரு வேலைத் திட்டமாகவே நான் இதனைப் பார்க்கிறேன். இது ஈழத் தமிழர்களுக்கு எதனையும் பெற்றுத் தரப்போவதில்லை’ எனத் தெரிவித்தார்.
நன்றி: இனியொரு வலைத்தளம்

ad

ad