புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2012

அடித்துத் துன்புறுத்தி மண்டை உடைந்த நிலையில் மனைவியைப் பூட்டி வைத்திருந்தார் கணவன்; வீட்டுக்கு வந்து தையல் போட்டார் ஆஸ்பத்திரி தொழிலாளி இருவரும் தற்போது மறியலில்; எழுவைதீவில் சம்பவம்

ஒருவார காலமாக வீட்டில் வைத்து மனைவியை அடித்துத் துன்புறுத்திய கணவன், மனைவிக்கு மண்டை உடைந்த போதும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லாது வைத்தியசாலைத் தொழிலாளி ஒருவரை அழைத்து வந்து அவர் மூலமாக மருந்து கட்டி தையலும் போட்டு
தொடர்ந்தும் வீட்டிலேயே தடுத்து வைத்துள்ளார். தலையில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்து உயிர் பிரியும் தறுவாயில் பொலிஸாரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மனைவி.
 
மனைவியைத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவனையும், தகுதியில்லாது சிகிச்சை செய்தது மட்டுமன்றி வன்முறைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியசாலைத் தொழிலாளியையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
எழுவைதீவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
 
குடும்பத்தகராறு காரணமாகவே ஒருவார காலமாக தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியின் மண்டை உடைந்து விட்டது. ஆனால் மனைவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவில்லை. அதனால் அவரது நிலைமை மோசமடைந்தது. 
 
அதனால் எழுவைதீவு வைத்தியசாலை தொழிலாளி ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்து சிகிச்சை செய்யும்படி கேட்டுள்ளார். தொழிலாளிக்கு அது குறித்த எவ்வித தகுதியும் இல்லாத போதும் முன்வந்து மருந்து கட்டியுள்ளார். மண்டை உடைந்ததனால் அந்தப் பகுதிக்கு தையலும் போட்டுள்ளார்.
 
அதன் பின்னரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படாததனாலும் சிகிச்சை தவறானதாக இருந்ததனாலும் தலையில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்து "கொதி' ஏற்பட்டதோடு நோயாளியும் ஆபத்தான நிலைக்குச் சென்று விட்டார். 
 
சம்பவம் தொடர்பில் தகவலறிந்து கொண்டவர்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்த பின்னரே அங்கு சென்ற பொலிஸார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவியை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
 
அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர் தற்போது உயிர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்தும் வைத்தியசாலை விடுதியில் வைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதேவேளை, மனைவியைத் துன்புறுத்திய குற்றச் சாட்டில் அவரது கணவன் பொலிஸாரால் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். ஆரம்ப விசாரணைகளின் பின்னர் வீட்டுக்குச் சென்று தகுதியில்லையென்று தெரிந்தும் மருந்து கட்டி தையல் போட்டது மட்டுமன்றி வன்முறைக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச் சாட்டில் வைத்தியசாலைத் தொழிலாளியையும் கைது செய்தனர்.
 
 இருவரையும் ஊர்காவற்றுறை நீதிவான் ஆர்.எஸ்.மகேந்திராஜா விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.               

ad

ad