புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2012


த.தே.கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது! ஹக்கீம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்தப் பயத்தை எமது சமூகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு நாம் பயன்படுத்த வேண்டும். என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார். 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவான பிரச்சாரக்கூட்டமொன்று கிண்ணியாவில் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் மௌலவி எஸ்.எல்.எம். ஹஸன் (அஷ்ஹரி) தலைமையில் கிண்ணியா ஹஸனாத் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் பேசுகையில்,
எங்களுடைய கட்சிதான் மிகப்பெரிய அளவில் பிளவுபட்ட இயக்கமாக இருக்கின்றது. ஒவ்வொரு தேர்தலிலும் ஏதோ கட்சியில் பதவிகளுக்காக சேர்ந்து கொள்வதாக இருக்கின்றனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்ற இயக்கம் தனித்து போட்டிடுவது என்ற முக்கிய தீர்மானத்திற்கு வந்த காரணம் முஸ்லிம் சமுதாயத்தை நீண்ட சந்தேக கண்ணோட்டத்தில் பார்ப்பது, எடுத்ததற்கெல்லாம் எங்களைப் பார்த்து நீங்கள் வந்தான் வரத்தான் என்ற ரீதியில் பார்ப்பது போன்றவையாகும்.
எங்களது ஆன்மீக நடவடிக்கைகளில் வழிந்து வந்து குந்தகம் விளைவிக்கின்ற ஒரு காலம் இது. இன்று நிறைய அநீதி, அநியாயங்கள் நடக்கின்றன. இதைக் தட்டிக் கேட்பதற்கு இயலாத அரசியல் சமநிலையில்லாத நிலையில் இருக்கின்றோம்.
நாங்கள் அரசாங்கத்தில் இணைந்திருக்கின்றோம், ஆட்சியாளரிடம் பங்காளியாகவும் இருக்கின்றோம். சிலர் எங்களிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 'நீங்கள் இன்னும் முஸ்லிம் காங்கிரஸ் தானே, அரசாங்கத்தில் தானே இருக்கின்றீர்கள் வெற்றி பெற்ற பின்னரும் மீண்டும் போய் அரசாங்கத்தில்தானே இருக்கப் போகின்றீர்கள் ?' என்று கேட்கிறார்கள்.
இது பற்றி தெளிவாக விளக்கத்தை சொல்ல வேண்டும். இன்று இச்சமூகம் மத்திய அரசில் இருந்து கொண்டு பேரம் பேசும் நிலை மாற வேண்டும்.
இன்று எமது கட்சியாளர்கள் அணிகளாக பிரிந்து சென்று ஆளுந்தரப்பில் அமைச்சராக பதவியில் இருக்கின்றார்கள். இந்த கிழக்கு மாகாணத்திலே இந்த தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று அதை சர்வதேச சமூகத்திற்கு காட்ட வேண்டும் என அரசாங்கம் பார்க்கின்றது.
இந்த தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் ஆட்சியை தீர்மானிக்க வேண்டும். முஸ்லிம்களின் வாக்குத்தான் அரசாங்கத்தையும் தீர்மானிக்கும் என்பதும் அரசாங்கத்துக்கும் தெரியும். ஆனால், அது முஸ்லிம்களுடைய அதிகபட்ச ஆசனங்களை கொண்டதாக இருக்க வேண்டும்.
முன்கூட்டியே மாகாண சபையை கலைத்து விட்டனர். கலைத்து விட்டும் கதைப்பதற்கு அரசாங்கம் எங்களை கூப்பிடவில்லை. நானே வழியே போய் கதைத்தேன். எங்களுக்கொரு தார்மீக கடமையிருக்கின்றது. அரசாங்கத்துடன் இணைந்து தேர்தல் குறித்து முடிவெடுப்பதற்கு.
நாங்கள் இந்த நிலைமையில் அரசாங்கத்துடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால் மக்கள் மத்தியில் பெரும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். இந்தக் கட்சியை ஓடு காய பயன்படுத்தப் பார்த்தார்கள். இந்த வகையில் நாம் மிகப் பக்குவமாக நேர்மையாக, சினேகபூர்வமாக நடவடிக்கை எடுத்து அவர்களை விட்டு விலகி வர சந்தர்ப்பமாக அமைந்தது.
தேர்தல் முடிந்த பின்னரும் என்ன நடக்கும்? நீங்கள் இந்த அரசாங்கத்திற்குத் தானே முட்டுக் கொடுக்கப் போகின்றீர்கள் என்று எம்மிடம் கேள்வி கேட்கின்றார்கள்.
கிழக்கின் தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக இந்த முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும். இது மும்முனைப் போட்டியாக இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு இங்கு சந்தர்ப்பமில்லை. ஆளும் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவையே இம்மூன்று தரப்புகளாகும். 
நாம் இது பற்றி இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டியிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் இனவாதமாக பேசுகிறது எனவும் அரசாங்கம் அதிருப்தியோடு உள்ளது எனவும் கூறுகிறார்கள். இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இணைந்த ஆட்சியை அமைக்கும் என நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்' என்றார்.

ad

ad