புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2012

பள்ளிவாசல்களில் தொழுவதற்கு வழி செய்யாத அரசுக்கு வாக்களிக்கக் கூடாது!- அஸாத் சாலி
இன்று முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து அவர்களுடைய பள்ளிவாசலில் சுதந்திரமாக அவர்களுடைய தொழுகைகளை நிறைவேற்ற வழிசெய்து தராத இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அஸாத் சாலி தெரிவித்தார்.
நேற்று வெள்ளி மாலை 22வது ஸூஹதாக்கள் தினத்தன்று காத்தான்குடி ஜக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்:
கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு இன்னும் ஒரு வருட காலம் எஞ்சியிருந்தும் அதற்கு முன்னால் தேர்தல் வைப்பதானது முஸ்லிம்களிடையே எங்களுக்கு ஆதரவு உள்ளது என அரசாங்கம் காட்டுவதற்காகும்.
இன்று முஸ்லிம்களுடைய புனித ஸ்தலங்களான பள்ளிவாசல்களில் சுதந்திரமாக தொழ முடியாதுள்ள நிலை காணப்படுகின்றது.
அநுராதபுரத்திலிருந்து தம்புள்ளை தெஹிவளை பலாங்கொடை மூதூர் ஜந்து நாட்களுக்கு முன் ராஜகிரிய உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் பள்ளிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்தோரை வெளியில் போட்டு பள்ளிவாசல் மூடப்படுகின்ற நிலை பெரும்பான்மை சமூகத்தினால் எமக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான கட்டங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்களாகிய நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்.
தம்புள்ளை பிரச்சினை நடைபெறுவதற்கு முந்திய நாள் வியாழக்கிழமை காலை 06.00மணியளவில் நான் ஜனாதிபதியிடம் தொடர்பு கொண்டு நாளை தம்புள்ளயில் ஜூம்மாத் தொழ முடியாத சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது எனக்கூறிய போது உங்களுக்கு எல்லா நேரமும் பள்ளி கட்டுவதுதான் எனக்கூறி புறந்தள்ளிவிட்டார்.
அப்போது நான் உங்களுக்கு தவறான தகவல் தந்துள்ளார்கள்.அந்தப்பகுதியில் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் என்ன நடந்தது. இப்பள்ளி எப்போது உருவானது என கேட்டுப்பாருங்கள் என ஜகாதிபதியிடம் கூறினேன்.
அப்போது அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் கேட்டதற்கு இது எனது தந்தை பாட்டன் காலத்திலிருந்து சுமார் 65வருட காலம் பழமை வாய்ந்த பள்ளி என ஜனாதிபதியிடம் அமைச்சர் பதில் சொன்னார்.
இதற்குக் கூட அரசாங்கம் எவ்வித தீர்வையும் பெற்றுத்தரவில்லை. அன்று தம்புள்ள ரஜமஹா விகாரை விகாராதிபதி முஸ்லிம்களுக்கெதிராக கோஷமிட்டான். ஆனால் அரசாங்கம் அவனை கைது செய்யவில்லை.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவிடம் இது தொடர்பில் அறிவித்ததுடன் இது தொடர்பில் சிறந்ததோர் தீர்வை அரசாங்கத்திடம் பெற்றுத்தருமாறு சொன்னோம்.
ஆனால் இது வரையில் எவ்வித தீர்வையும் அது தொடர்பில் எவ்வித வாக்குறுதியையும் அரசாங்கம் ஜம்மியதுல் உலமாவிற்கு பெற்றுத் தரவில்லை. இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கா நாம் வாக்களிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் இன்னும் பல பிரச்சினைகளை எதிர் நோக்க இருக்கிறார்கள்.எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான கூழ்நிலைகளில் முஸ்லிம்கள் அவர்களுக்குள்ளேயே பல கூறுகளாக பிரிந்து செயற்படாமல் ஒற்றுமையாக எல்லோரும் இணைந்து உங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றும் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களிக்க முன்வர வேண்டும்.
அவ்வாறு வருகின்ற சந்தர்ப்பத்தில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை இந்த முஸ்லிம் காங்கிரஸ் உங்களுக்கு பெற்றுத் தருமென கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான அஸாத் சாலி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் ஸ்ரீ.ல.மு.கா பிரதித்தலைவரும் மாகாண முதனடமை வேட்பாளருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் கூட்டுறவுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஸீர் சேகுதாவூத் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ.ல.மு.கா மட்டு வேட்பாளருமான யூ.எல்.எம்.முபீன் காத்தான்குடி ஜக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் அல்பா நஸார் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ad

ad