புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2012


வெள்ளவத்தை மூவர் படுகொலை! கொட்டகலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வந்த இயமன்
அன்று பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. கூடுகளில் கண்ணயர்ந்து கொண்டிருந்த பறவைகள் இரை தேடுவதற்காக சிறகுகளை உல்லாசமாக விரித்து பறக்கத் தொடங்கின. ஊர்க் குருவிகளும் தமது சின்னஞ்சிறு சிறகுகளை அடித்தன.
இருள் கௌவிக்கொண்டிருந்த வானம் சூரிய ஒளிக்கதிர்களைக் கண்டு மெல்லமாய் ஓடி ஒளிந்து கொண்டிருக்கையில் அழகிய கார் ஒன்று அந்த வீட்டு வாசலில் சர்ர்..என்று பிரேக் அடித்து நின்றது.
மகனே வாடாப்பா! அம்மாவின் ஆனந்தக் கண்ணீர் ஆரத்தழுவி வரவழைக்க தந்தையும் பூரித்து நிற்கையில் ஒரேயொரு தங்கையும் அண்ணாவை கட்டியணைத்து அன்போடு வரவேற்றாள்.
அந்த மூவரும் ஒரே கட்டிலில் நிரந்தரமாக உறங்குவார்கள் என்று ஒருகணம் கூட எண்ணிப் பார்க்கவில்லை. அவர்கள்.
ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி இராணியப்பு தோட்டத்துக்குச் சென்று தலைமறைவாகியிருக்கும் சந்தேகநபரான மரணமடைந்துள்ள பெற்றோரின் மகனே அவர்களை 12ம் திகதி கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார்.
முன்னேஸ்வரத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறிய அவ் விளைஞன் பெற்றோரையும் தங்கையையும் கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார்.
இவ்வாறு கொழும்புக்கு அழைத்து வந்த மூவரையும் வெள்ளவத்தை இராமகிருஷ்ண டெரஸ் பகுதியில் தான் தங்கியிருந்த தற்காலிக வீட்டில் தங்க வைத்துள்ளார்.
குறித்த மூவரையும் வெள்ளவத்தையில் தங்க வைத்த 26 வயதுடைய அந்த இளைஞன் கடந்த 16 ம் திகதி வியாழக்கிழமையன்று மீண்டும் கொட்டகலை இராணியப்பு தோட்டத்துக்கு சென்றுள்ளார்.
வெள்ளை நிற வான் ஒன்றில் மற்றுமொரு நபருடனேயே அவ்விளைஞன் அன்றைய தினம் அங்கு சென்றுள்ளார்.
பெற்றோர் மற்றும் தங்கையை கொழும்புக்கு அழைத்துச் சென்ற இளைஞன் அவர்களுடன் மீண்டும் வராமையினால் அது தொடர்பாக அயலவர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர்.
அதன்போது அவர்கள் அடுத்த புதன்கிழமை வருவார்கள் என அயலவர்களிடம் தெரிவித்த அவ் விளைஞன் தன்னுடன் வந்துள்ள சாரதிக்கு தேநீர் கொஞ்சம் தருமாறு அயல்வீட்டு பெண்ணொருவரிடம் கேட்டதுடன் தனது வீட்டுக்குள் சென்றுள்ளார்.
இவ்வாறு வீட்டுக்குள் சென்ற அவ்விளைஞன் சுமார் 1 மணித்தியாலமாக அங்கு இருந்ததுடன் பின்னர் அதேவானில் திரும்பிச் சென்றுள்ளார்.
அன்று ஆகஸ்ட் மாதம் 18 ம் திகதி சனிக்கிழமை. கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணா டெரஸ் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வெள்ளவத்தை பொலிஸாருக்குத் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ்வாறு பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுடன் அந்த தகவலை வழங்கிய நபரினூடாக சம்பவ இடத்துக்கு வெள்ளவத்தைப் பொலிஸார் விரைந்தனர்.
துர்நாற்றம் வீசியதென்பது உண்மைதான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பொலிஸாருக்கு அடுத்த கணமே அதிர்ச்சி காத்திருந்தது. மர்மமான முறையில் கொல்லப்பட்ட நிலையில் தாய்,தந்தை மற்றும் அவர்களுடைய மகள் ஆகிய மூவரும் ஒரே கட்டிலில் போடப்பட்டு படுக்கை விரிப்பால் மூடப்பட்டிருந்தது.
அத்தோடு அச்சடலங்களிலிருந்து உடனடியாக துர்நாற்றம் வீசுவதை யாரும் அறிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக சடலங்களின் மீது பூச்சிவில்லைகள் தூவப்பட்டும் வாசனைத் திரவியங்கள் தெளிக்கப்பட்டும் இருந்ததை பொலிஸாரால் அவதானிக்க முடிந்தது.
ஆகஸ்ட் மாதம் 12 ம் திகதி கொட்டகலை பத்தனை, இராணியப்பு தோட்டத்திலிருந்து 60 வயதுடைய குமாரசுவாமி (ஓய்வுபெற்ற சாரதி), அவருடைய மனைவியான 58 வயதுடைய ஐயப்பன் பிரேமி மற்றும் அவர்களுடைய மகளான 23 வயதுடைய அனித்த பிரியா ஆகிய மூவரும் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான நிலையிலேயே கடந்த 18ம் திகதி சனிக்கிழமை வெள்ளவத்தை டெரஸ் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தாய்,தந்தை மற்றும் மகள் ஆகிய மூவரும் துர்நாற்றம் வீசும் நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களை கொழும்புக்கு அழைத்துவந்த இளைஞன் காணவில்லை என்பதனால் பொலிஸார் அவ்விளைஞன் மீது சந்தேகம் கொண்டு அவரைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த சடலங்கள் மீது பூச்சிவில்லைகள் தூவப்பட்டிருந்ததும் வாசனைத் திரவியங்கள் தெளிக்கப்பட்டிருந்ததும் ஏன்? என்ற பொலிஸாரின் நியாயமான சந்தேகத்துடன் அந்த இளைஞனை காணப்படாமையினாலுமே அவர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அத்தோடு பெற்றோர், தங்கை, ஆகிய மூவரையும் கொழும்புக்கு அழைத்து வந்தவர் ஏன் தனியாக கொட்டகலை இராணியப்பு தோட்டத்திலுள்ள அவரது வீட்டுக்குச் செல்ல வேண்டும்? அது மாத்திரமன்றி அங்கு சென்ற நபர் வீட்டின் அலுமாரி உள்ளிட்ட பல இடங்களில் ஏதோ தேடியதற்கான தடயங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க கடந்த 16ம் திகதி இராணியப்பு தோட்டத்துக்குச் சென்ற அவ்விளைஞன் சுமார் 1 மணித்தியாலயம் மாத்திரமே அங்கு தங்கியிருந்துவிட்டு மீண்டும் திரும்பியுள்ளார்.
இவ்வாறான காரணங்களை மையமாக வைத்தே இந்த முக்கொலையுடன் அவ்விளைஞனுக்கு தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதேவேளை குறித்த குடும்பமானது மிகவும் அமைதியான குடும்பம் எனவும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வந்ததாகவும் அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சந்தேக நபரான இளைஞன் மிகவும் சாதுவானவர் எனவும் சிறுவர்களுடன் நகைச்சுவையாகப் பேசி விளையாடக்கூடிய இயல்பான சுபாவம் கொண்டவர் எனவும் இந்த கொலை மர்மமானதாகவே இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு குறித்த இளைஞன் கொழும்புப் பகுதியிலுள்ள நபர் ஒருவரிடம் ஒருதொகை பணம் கடனாக பெற்றுள்ளமை தற்போது தெரியவந்துள்ளதுடன் இதுபோன்று இன்னும் யார் யாரிடம் கடன் பெற்றுள்ளார் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு கடன் கொடுத்த நபரிடமும் அவ்விளைஞனின் காதலியிடமும் மேலும் பலரிடமும் வெள்ளவத்தைப் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக பத்தனை பொலிஸார் ஒருபக்கம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை, வெள்ளவத்தைப் பொலிஸாரும் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர அடங்கலான விசேட சட்ட வைத்திய குழுவினரால் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்ட மூன்று சடலங்களும் மரண விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மூன்று சடலங்களினதும் உடற்பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கும்வரை குறித்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோரின் மரணம் தொடர்பில் உறுதியாக எதனையும் தெரிவிக்க முடியாது எனவும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரும் வெள்ளவத்தைப் பொலிஸாரும் இணைந்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சட்டவைத்திய அதிகாரிகளின் விசாரணைகளை அடுத்து மூன்று சடலங்களும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் கொஹுவளை பொதுமயானத்தில் குறித்த சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
தாய்,தந்தை,மகள் ஆகிய மூவரின் மரணங்களும் இன்னும் மர்மமாகவே உள்ளன. யாரால் இந்த படுபாதக செயல் புரியப்பட்டுள்ளது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
தன்னைப் பெற்றெடுத்து, உதிரத்தை பாலாக ஊட்டி, அதனோடு பாசத்தையும் சேர்த்து வளர்த்த அன்னையையும் அன்பும் அரவணைப்பும் காட்டி வளர்த்த தந்தையையும் அன்புக்கினிய சகோதரியையும் குறித்த இளைஞன் கொலை செய்திருப்பாரா? ஏன்ற கேள்வி ஒருபுறமிருக்க அப்படி அவரால் அந்தக் கொலைகள் செய்யப்படவில்லையென்றால் வேறு யாரால் அது புரியப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
எது எப்படியோ இந்த மூவரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பது மாத்திரம் கிடைக்கப்பெற்ற மற்றும் இந்தச் சம்பவத்தின் பின்னணியை வைத்துப் பார்க்கின்றபோது புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.
அதாவது, தற்கொலை செய்துகொள்வதாயின் மூவரும் ஒரே கட்டிலில் நேராக படுக்கச் செய்தவாறு எப்படி இருக்க முடியும், படுக்கை விரிப்பால் ஒரே மாதிரி எவ்வாறு போர்த்திக்கொள்ள முடியும்? அப்படியே அவர்களே தற்கொலை செய்துகொண்டிருந்தால் உடல் மீது எப்படி பூச்சிவில்லைகளும் வாசனைத் திரவியங்களும் போடப்பட்டிருக்க முடியும்? எனவே இது ஒரு கொலையாகத்தான் இருக்கும் என்று அனுமானித்துக்கொள்ள முடிகிறது.
யார் செய்திருந்தாலும் இந்தச் செயல் மிகவும் கொடூரமானதும் வேதனை மிக்கதுமான செயலே.
எனவே குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஏன்? எதனால்? இவ்வாறான அருவருக்கத்தக்க சிந்தித்துப் பார்க்கக் கூட முடியாத கொடூரங்கள் நாள்தோறும் நடக்கின்றன என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

ad

ad