புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2012


ஐ.நா என்றால் மகிந்தவுக்கு அலேர்ஜிக்: த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் கருணாகரம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழினமும் ஒருமுகமாக வாக்களித்தால் வரலாற்றுச் சாதனையாவதோடு, சர்வதேச சமூகத்தின் அழுத்தம் இலங்கை பேரினவாதத்தின் மீது அதிகரிப்பதனூடாக எமது இன விடுதலைக்கு உந்துசக்தியாகவும் அமையும் என த.தே. கூட்டமைப்பின் வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, துறைநீலாவணையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த மூன்று தசாப்த கால அகிம்சைப் போராட்டம், மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டம் என்பன சர்வதேசத்தின் சரியான புரிதலின்றி அவர்களின் பின்புலச் சதிகளின் மூலம் முள்ளிவாய்க்காலோடு மண்ணாகியது.
கடந்த கால விடுதலைப் போராட்டங்களின் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்களும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் உதவியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலம் நாம் வகுத்த தந்திரோபாயங்களும் அன்று எம்மை புரிந்துகொள்ளாத சர்வதேச சமூகம் குறிப்பாக, ஐக்கிய அமேரிக்கா, ஐரோப்பிய சமூகம் உட்பட மேற்குலகம் மற்றும் ஐ.நா உட்பட அதன் நிறுவனங்கள் இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தரத்தை விடவும் கேவலமாக கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றார்கள் என்பதை ஐயம் திரிபுற புரிந்து கொண்டுள்ளன.
இதன் விளைவே ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அதன் அண்மைக் கால நடவடிக்கைகளுமாகும். ஐ.நா என்றாலோ இதன் கிளை நிறுவனங்கள் என்றாலோ மகிந்தவுக்கு அலேர்ஜிக்.
நவநீதம்பிள்ளை என்றாலோ நடுங்குகின்றார் பீரிஸ். இடையிடையே தனது பங்கிற்கு உணவு உண்டுகொண்டே உண்ணாவிரதமிருந்து பேரினவாதிகளை உசுப்பேற்றுகின்றார் விமல் வீரவன்ச. இதற்கு சற்றும் சளைக்காது தனது ஏகாதிபத்திய எதிர்ப்பை காட்டுகின்றார் எல்லாவல மேதானந்த தேரர்.
பொய்யான பரப்புரைகளை சர்வதேசத்திற்கு கூறும் நவீன கோயாபல்ஸ் மகிந்த சமரசேகர என்று மகிந்தவின் பட்டாளங்கள் எடுத்துக்கூறும் எதையும் இன்று சர்வதேச சமூகம் நம்பத் தயாரில்லை. சர்வதேசத்தின் காய் நகர்த்தல்களால் கதிகலங்கியுள்ளது பேரினவாதம்.
போலிப் பரப்புரைகள் மூலம் சர்வதேசத்தை ஏமாற்றும் இந்த அரசுக்கு தமிழ்த் தேசியத்தின் பற்றுறுதியிலிருந்து இம்மியளவும் எம் தமிழினம் விலகவில்லை என்பதை கிழக்கு மாகாணசபைத் தேர்தல் ஊடாக சர்வதேச சமூகத்திற்கு உரைக்க வேண்டியது நம் வரலாற்றுக் கடமை.
வழமையாக தேர்தல் என்றாலே அடாவடி, அராஜகம், கணணி மோசடி, ஆமாம் சாமி போடும் துணைக் கட்சிகள் என்ற பின்னணியில் இலகு வெற்றியை எண்ணிய மகிந்தவை திடீரென மாற்றம் பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கள நிலவரம் கிலி கொள்ள வைத்துள்ளது.
இன்றைய கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கள நிலவரம் முற்றுமுழுதாக நம் தமிழ்க்கூட்டமைப்பிற்கு சாதகமாகவேயுள்ளது. பேரினவாதம் கூறும் பித்தலாட்ட புள்ளிவிபரங்களால் எம் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது.
இக்கள நிலவரத்தை சாதகமாக மாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் சமூகத்தின் கைகளிலேயே உள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் நீங்கள் வாக்களிக்க விரும்பாமல் இருக்கலாம். ஒன்றை மட்டும் உங்களுக்கு கூற விரும்புகின்றேன். நீங்கள் உங்கள் ஒரு வாக்கினை அளிக்கவில்லை என்பது பேரினவாதத்திற்கு ஒரு வாக்கனை பெற்றுக் கொடுக்கின்றீர்கள் என்றே பொருள்படும்.
எனது உயிரினும் மேலான தமிழ்ச் சமூகமே! கடந்த காலங்களில் நம் தமிழ்ச் சமூகத்தின் வாக்களிப்பு வீதம் மிகவும் மந்தமாகவே இருந்தது. குறிப்பாக நகரப் புறத்தில் இம் மந்தநிலை மிகவும் அதிகமாகும் என்பதை கடந்த கால புள்ளிவிபரங்கள் உணர்த்துகின்றன.
நாம் சரியான நேரத்தில் சரியான தீர்மானம் எடுக்க வேண்டிய நிலையில் நிற்கின்றோம். அதேவேளை நாளை நம் கையில் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது உங்கள் கடமை என்பதை நினைவூட்டுகின்றேன்.

ad

ad