புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2012


ஈழத்தமிழர் செந்தூரன் உயிருக்கு ஆபத்து நோ்ந்தால் தமிழக அரசும், காவல்துறையுமே பொறுப்பு: வைகோ
எந்த நேரத்திலும் செந்தூரன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இந்த ஈழத்தமிழ் இளைஞனை, மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும், அவரது உயிருக்கு ஊறு நேர்ந்தால், அதற்குத் தமிழக அரசும், காவல்துறையும் தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
இன்றோடு 21 ஆவது நாளாக, உணவு அருந்தாமலும், 7 ஆவது நாளாக, சொட்டுத் தண்ணீரும் பருகாமலும் பட்டினிப் போர் நடத்துகின்ற, ஈழத்தமிழ் இளைஞர் செந்தூரன் உடல்நிலை மோசம் அடைந்து உள்ளதால், இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், காவல்துறையினர் கொண்டு போய்ச் சேர்த்துள்ளனர்.
செந்தூரன் உயிரைக் காப்பாற்ற, உண்ணாவிரதத்தைக் கைவிடச் சொல்லி வேண்டிக் கொள்வதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு, நான் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றேன்.
4 ஆவது மாடியில், பொது வார்டில் செந்தூரன் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதன் வெளிக்கதவு பூட்டப்பட்டு, காவல்துறை அதிகாரிகள், காவல் புரிகின்றனர்.
முதலில் எனக்கு அனுமதி மறுத்தனர். வார்டுக்கு வெளியிலேயே நான் காத்திருந்தேன். மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து, 42 நிமிடத்துக்குப் பிறகு, நானும், துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யாவும் சென்று பார்ப்பதற்கு அனுமதித்தனர்.
செந்தூரனிடம் 50 நிமிடங்கள் பேசினேன். எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டார்.
செந்தூரன் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. மூன்று நாள்களாக அவருக்குச் சிறுநீர் பிரியவில்லை. மருத்துவர்கள், தண்ணீர் குடிக்கச் சொல்லியும் அவர் தண்ணீர் பருகவில்லை. வலுக்கட்டாயமாக அவருக்குத் தோளில் சேலைன் ஏற்றி வருகிறார்கள்.
அப்போது, வைகோவிடம் செந்தூரன் கூறியதாவது:
நான் இந்தியாவில் எந்தச் சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், ஆவணங்கள் இன்றி வந்ததாகத்தான் என்னைக் கடந்த 2011 ஜூலை மாதம், 18 ஆம் தேதி, தேவகோட்டையில் கைது செய்து, செங்கல்பட்டு சிறப்பு முகாமில், தமிழக கியூ பிரிவு பொலிஸார் அடைத்தனர்.
ஆறு மாதங்கள் கழித்து, 2012 ஜனவரி 16 ல் தமிழக பொலிஸார் என்னைக் கேரளாவுக்குக் கொண்டு சென்று, நான் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றதாக வழக்குப் பதிவு செய்து, கேரள பொலிஸார் மூலம், கேரளச் சிறையில் அடைத்தனர்.
நான் எர்ணாகுளம், தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தேன். அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றதாகப் போடப்பட்ட வழக்கைத் தவிர, வேறு எந்தக் குற்றச்சாட்டும் என் மீது இல்லாததால், கேரள நீதிபதி, உடனடியாகப் பிணையில் விடுதலை செய்தார்.
அதற்குப் பிறகும், கேரள பொலிஸார் என்னைக் கொண்டு வந்து, தமிழ்நாடு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீண்டும் என்னை, செங்கல்பட்டு முகாமுக்குக் கொண்டு போய் அடைத்தனர்.
ஜூன் 16 முதல், ஜூலை 5 வரை, நானும், அங்கு உள்ள ஈழத் தமிழர்களும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம்.
வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் எங்கள் கோரிக்கையை ஏற்று, திறந்தவெளி முகாமுக்கு விடுதலை செய்வதாக கூறினார்கள்.
ஆனால், வைகோ அவர்களே!, நீங்கள் ஒரு முறைக்கு நான்கு முறை வற்புறுத்திக் கேட்டதால், தட்ட முடியாமல், உண்ணாவிரதத்தை நிறுத்தினேன். நான் எனக்காகப் போராடவில்லை.
ஈழத்தில் சொந்தபந்தங்களை சிங்களவன் செய்த கொலைக்குப் பலிகொடுத்து, மனம் உடைந்து கண்ணீரோடு தமிழ்நாட்டுக்கு வந்த இடத்தில், இப்படி முகாம்களில் அடைக்கப்பட்டதால், பலர் மனநோய்க்கு ஆளாகி விட்டனர்.
தற்போது செங்கல்பட்டு முகாமில் 39 பேரும், பூந்தமல்லியில் 8 பேரும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது போடப்பட்டு உள்ள வழக்குகளில் எந்த உண்மையும் இல்லை.
எனவே, திறந்தவெளி முகாமுக்கு அவர்களை அனுப்பச் சொல்லித்தான், இந்தப் போராட்டத்தை நடத்துகிறேன். இதற்காக, என் உயிர் போவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் மரணமாவது மற்றவர்களை விடுவிக்கட்டும் என்றே போராடுகிறேன்! எனக் கூறினார்.
செந்தூரன், இலங்கையில் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் கண்டியில் இருந்து, மட்டக்களப்புக்குச் சென்று இவரது பெற்றோர் வாழ்ந்தனர்.
இப்போது, அவரது தந்தை உயிரோடு இல்லை. தாயார் சுபதேவி மட்டும் இருக்கிறார். இவருக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் கிடையாது. தாய்க்கு ஒரே மகன்.
ஐந்து நாட்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 21 ம் நாள், செந்தூரனின் அத்தை கமலாதேவி தொலைபேசியில் பேசி, உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொன்னாராம்.
அதற்கு இவர், எவ்வளவோ நம் மக்கள் அங்கே செத்து விட்டார்கள், இங்கு வந்து இப்படி அவதிப்படுகிற நம்ம சனத்துக்காகத்தான் நான் உண்ணாவிரதம் இருக்கிறேன். இதையெல்லாம் நான் உங்களுக்கு ரொம்ப விளங்கப் பண்ண முடியாது. நீங்க நாட்டுக்குப் போங்க என்று சொன்னாராம்.
இதைக் கேட்ட ஒரு மணி நேரத்திற்குள், கமலாதேவிக்கு ஏற்பட்ட மன அதிர்ச்சியால், அடுத்த 48 மணி நேரத்துக்குள் இறந்து போனார். அவரது மரணத்துக்கு, தமிழக அரசும், காவல்துறையும்தான் காரணம் ஆவார்கள்.
உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு, நான் எவ்வளவோ செந்தூரனிடம் வற்புறுத்திக் கேட்டும், அவர் நீதிக்காகப் போராடுகிறேன். உங்க பேச்சைக் கேட்கவில்லையென்று, என்னைத் தப்பாக நினைக்காதீங்க அண்ணா! நான் போராட்டத்தைக் கைவிட மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
எந்த நேரத்திலும் செந்தூரன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இளமையும், அழகும் மிக்க இந்த ஈழத்து இளைஞனை, மரணம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
செந்தூரன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்குத் தமிழக அரசும், காவல்துறையும்தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.
எனவே, செந்தூரனின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவரையும், ஈழத் தமிழர்களையும், சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து, உடனடியாக திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பி வைக்குமாறு, தமிழக அரசைக் வேண்டிக் கொள்கிறேன்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியும், செந்தூரன் உயிரைக் காக்கவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நாளை, ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலை 9 மணிக்கு, கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில், உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும்.
இந்த அறப்போரை, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைப்பார்.
மாலை 6.00 மணிக்கு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் நிறைவு செய்வார்.
அதனைத் தொடர்ந்து, 28 ம் தேதி முதல், சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ள, 47 ஈழத் தமிழர்களை விடுவிக்கக் கோரி, தாயகத்தில், ஒவ்வொரு நாளும், செந்தூரன் கோரிக்கை நிறைவேறும் வரையில், தொடர் உண்ணாவிரத அறப்போர் நடைபெறும்.
கழகக் கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும், இந்த அறப்போரில் பங்கு ஏற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.

ad

ad