புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2012


இந்தியா எமக்கு ஆதரவளித்திருந்தால் ஐ.நாவில் இலங்கை தொடர்பான பிரேரணை இருந்திருக்காது: ஜனாதிபதி
இலங்கைக்கு இந்தியா ஆதரவாக இருந்து, எமக்கு மேலும் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என என்ற இலங்கையின் கோரிக்கைக்கு ஆதரவளித்திருந்தால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை இருந்திருக்காது என ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச கூறியுள்ளார்.
ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகைக்கு அளித்த செவ்வியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
செவ்வியின் முழுவடிவம் கேள்வி - பதில் வடிவில் வருமாறு:
கேள்வி:  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமை காயப்படுத்தியதா, இந்தியா ஏன் அதை செய்தது என நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்:  என்னால் சொல்ல முடிந்தது என்னவென்றால், நாம் உணர்வுகளற்ற நாடோ மக்களோ அல்ல. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பொதுவான கலாசார மற்றும் வரலாற்று பெறுமானங்கள் உள்ளன.
எனவே இத்தகைய நடவடிக்கையால் நாம் ஆழமாக உணர்ச்சியடைகிறோம். ஆனால் எமது நட்பையும் சிறந்த உறவுகளையும் இது மாற்றவில்லை. எமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் பரிமாணம் மாறவில்லை என நான் நம்புகிறேன். அப்படியான மாற்றத்தை இந்திய பிரதமர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட முக்கிய அதிகாரிகளின் விஜயங்கள் வெளிப்படுத்தவில்லை.
இலங்கையின் நிலைப்பாடாக இருந்தது என்னவென்றால், எமது அபிவிருத்திக்கு தடையாக இருந்த நீண்டகால மோதலால் ஏற்பட்ட இப்பிரச்சினைகளை தீர்க்க எமக்கு மேலும் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதே.
கேள்வி:  பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்தபோதிலும் உண்மையில், அப்பிரேரணையில் பயன்படுத்தப்படும் மொழிப்பிரயோகத்தை நீர்க்கச் செய்து, அது அத்துமீறாததாகவும் அது கண்காணிப்பு பொறிமுறையாக இல்லாதிருப்பதையும் உறுதிப்படுத்துவதில் பிரதமர் மன்மோகன் சிங் ஆர்வம்கொண்டிருந்தார். அத்துடன், இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் அமெரிக்கா செல்வாக்குச் செலுத்துவதாக நீங்கள் கருதுகிறீர்களா?"
பதில்:   அப்பிரேரணைக்கு அப்பால் செல்வது நல்லது என எண்ணுகிறேன். அது நடந்து முடிந்துவிட்டது. எந்த நல்ல நோக்கங்களும் நடவடிக்கைகளும் எப்போதும் பாராட்டத்தக்கது. ஆனல், இந்தியா எமக்கு ஆதரவாக நின்று, மேலும் நேரமும் இடமும் வழங்கப்பட வேண்டும் என என்ற இலங்கையின் கோரிக்கைக்கு ஆதரவளித்திருந்தால், அவ்வாறான பிரேரணையே இல்லாமல் இருந்திருக்கும்.
இப்பிராந்தியமானது இந்தியாவை நோக்குகிறது. இந்தியா தனது அயல்நாடுகளுடனான விவகாரங்களை கையாளும்போது தான் இந்தியா தனது அயல்நாடுகளுடனான விவகாரங்களை கையாளும்போது தான் செய்வது சரியானதா தவறானதா என ஆராய வேண்டும்.
கேள்வி:  சீனாவுடனான கொழும்பின் நெருக்கம் அதிகரிப்பது குறித்து இந்திய அமைப்புகளிடையே கவலைகள் ஏற்பட்டுள்ளமை குறித்து?
பதில்:  அணிசேரா நாடொன்றாக தொடர்ந்தும் இருப்பதில் இலங்கை முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. பழைய அதிகார கூட்டுகள் இல்லாதபோதிலும் அணி சேரா கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும். அத்துடன் புதிய பூகோள அரசியல் யதார்த்தங்களையும் கருத்திற்கொள்ள வேண்டும்.
இலங்கைக்கு இந்தியா குறிப்பிடத்தக்க முக்கியமானதொரு நிலமாகும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டவாறு சீனாவுடனான உறவு அதிகரித்து வருகிறது என இந்திய அமைப்புகளிடையே இருக்கக்கூடிய கவலை ஆதாரமற்றதாகும்.
இலங்கையில் சீன முதலீடு அதிகரித்துள்ளது. ஆனால் இவை அனைத்தும் வர்த்தக பரிமாற்றங்கள். மூன்று தசாப்த யுத்தகாலத்தில் நாம் இழந்த அபிவிருத்தி வாய்ப்புகளை நாம் பற்றிக்கொள்ளவும் குறைந்த செலவிலான நிதி மூலங்களை நாம் தேடிக்கொள்ளவும் வேண்டியுள்ளது.
கேள்வி:  அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மாத்திரமல்லாமல் கொழும்பு துறைமுகத்திலும், வீதிகள், ரயில்வே, மின்னுற்பத்தி நிலையங்கள் என்பவற்றிலும் சீனா அண்மையில் முதலீடுகளை செய்துள்ளமை குறித்து? 
பதில்:  சீனாவின் அண்மைக்கால முதலீடுகளானை ஐ.நா. மனித உரிமை பேரவை வாக்கெடுப்புக்கு வெகு முன்னராக நடந்தவை.
காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம் ஆகியவற்றை இந்தியா மீள்நிர்மாணம் செய்கிறது. சம்பூர் அனல் மின் நிலையத்தில் இந்தியா முதலீடு செய்கிறது. வடக்கிலும் தெற்கிலும் ரயில்வே நிர்மாண நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.
கொழும்பு துறைமுக அபிவிருத்திக்கு பூகோள ரீதியான கேள்விப்பத்திரம் கோரப்பட்டு ஹொங்கொங்கை தளமாக கொண்ட நிறுவனமொன்று அதில் வென்றது. அந்த ஒப்பந்தத்தை சீனாவுக்கு இலங்கை வழங்கியது என்பது தவறானது. இந்தியாவும் கேள்வி மனுக்கோரலில் பங்குபற்றியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.
ஆம், உலகின்மிக கொடிய பயங்கரவாதிகளுடன் நாம் போரிட்டபோது, எமக்கான ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் எமக்கு சிறந்த நிபந்தனைகளில் வழங்க தயாராகவிருந்த சட்டபூர்வமான அமைப்புகளிடமிருந்து நாம் வாங்க வேண்டியிருந்தது. இப்பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களை பாதிக்கும் வகையில் இலங்கை எதையும் செய்வதற்கு காரணம் இல்லை.
கேள்வி: வடக்கில் இராணுவமயத்தை நீக்குவதற்கு போதுமானளவு நீங்கள் ஏன் செயற்படவில்லை. அத்துடன் உங்கள் படையினரில் ஏறத்தாழ 70 சதவீதமானோர் வடக்கில் இன்னும் நிலைகொண்டுள்ளனர். அதியுயர் பாதுகாப்பு வலயங்கள், காணாமல் போனவர்களின் பட்டியல், வடக்கில் தேர்தல் தொடர்பாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
பதில்:  எமது ஆயுதப் படையினரில் 70 சதவீதமானோர் வடக்கில் நிலைகொண்டுள்ளதாக கூறுவது, எல்.ரி.ரி.ஈ. எச்சசொச்சங்களின், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீயநோக்கம் கொண்ட பிரச்சாரமாகும். அது நிச்சயமாக உண்மையல்ல.
பயங்கரவாதிகளால் மூன்று தசாப்தங்களாக நடத்தப்பட்ட கொடிய ஆயுத மோதலிலிருந்து நாம் மீண்டு வருகிறோம். வடக்கிலுள்ள படையினரின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து வருகிறோம்.
2009 டிசெம்பரில் யாழ்ப்பாணத்தில் எமது படையினரின் எண்ணிக்கை 27,000 ஆக இருந்தது. இவ்வருடம் ஜுன் மாதம் இந்த எண்ணிக்கை 15,000 ஆகும். இதை இராணுவ மயப்படுத்தலுக்கான அறிகுறியாக பார்ப்பது கடினம். வடக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை நீங்கள் அறியவில்லை என நம்புகிறேன்.
வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அவர்கள் வகிக்கும் பாத்திரத்தை நீங்கள் ஏன் பார்க்கவில்லை. வடக்கில் ஒழித்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படுவது உங்களுக்குத் தெரியாதா?
அத்துடன் வெளிநாடுகளில் குறிப்பாக மேற்குலகில் வாழும் எல்.ரி.ரி.ஈ.ஆதரவு குழுக்கள் வன்முறையை தூண்டுவதை நீங்கள் அறியவில்லையா?
நன்கு நிதியளிக்கப்பட்ட இந்த குழுக்கள் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கடந்த மூன்று வருடகால அனுபவத்தை கருத்திற்கொண்டு எச்சரிக்கையாக இருப்பதற்கு நாம் உரித்துடையவர்கள் இல்லையா?
இந்த ஆயுதப் படை உறுப்பினர்கள் இல்லையாயின் யுத்தத்தின் பின்னரான பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றிருக்க மாட்டா என்பதை நான் வலியுறுத்த வேண்டும்.
கேள்வி:  தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு யார் காரணம் என கருதுகீறீர்கள்?
பதில்:  தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கு விரும்பும் வேறு எவருடனும் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு நாம் எப்போதும் தயார்.
ஆனால், அனைத்து கலந்துரையாடல்களையும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நடத்தலாம் என திட்டவட்டமாக நாம் கூறியுள்ளோம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் த.தே.கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும்.
கேள்வி:  உங்கள் வெளிவிவகார அமைச்சர் 2011 மே மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது இருநாடுகளாலும் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் தீர்வுப்பொதியானது உண்மையான நல்லிணக்கத்துக்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை வலியுறுத்துவதானது இப்பிரச்சினை தொடர்பான உங்கள் அரசாங்கத்தின் மற்றொரு இழுத்தடிப்பாக இந்தியாவினால் பார்க்கப்படுகிறது?
பதில்:  உங்கள் கேள்வியில் நீங்கள் பதிலை அளித்துள்ளீர்கள். 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட உண்மையான நல்லிணக்கத்துக்கான சூழல் தொடர்பான 2011 மே கூட்டறிக்கையை நீங்கள் குறிப்பிட்டீர்கள். அதைத்தான்; நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக நாம் அடைய விரும்புகிறோம்.
செயற்படும் ஜனநாயகத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. நாடாளுமன்றமே அதியுயர் சட்டமியற்றும் சபை. தமிழ் தேசியக் கூட்டமைப்புடனோ வேறு யாருடனோ நாம் என்ன பேசினாலும் இறுதித் தீர்மானம் நாடாளுமன்றத்தினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதனால்தான் மேலும் உண்மையான செயற்படக்கூடிய இணக்கப்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கூடாக தீர்வொன்றைக் காண்பது சிறந்தது என நாம் கருதுகிறோம். என ஜனாதிபதி பதிலளித்தார்.

ad

ad