புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2012


கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களும்!
கலர் கலராக போஸ்டர்கள்... நினைத்துப் பார்க்க முடியாத வாக்குறுதிகள்... துண்டுப் பிரசுரங்கள்.... என பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது கிழக்கு மண்ணில் மாகாண சபைத் தேர்தலை நோக்கி...!
இந்நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி நடைபெறப் போகும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்கள் தேர்தல் களத்தில் தங்களது பலத்தை நிரூபிக்க களமிறங்கியுள்ளன.
தமிழ்த் தேசியமும் தமிழ் மக்களின் உரிமைகளும் நிலைநிறுத்தப்படும் காலம் விரைவில் கைகூட, கிழக்கு மாகாண மக்கள் அதற்கு அடித்தளம் இடுவார்கள். இந்நிலையில், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட களமிறங்கியுள்ளது.
அந்தவகையில், இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், கோவிந்தன் கருணாகரம், கதிர்காமாத்தம்பி குருநாதன், இராசையா துரைரெத்தினம், இரத்தினசிங்கம் மகேந்திரன், இந்திரகுமார் நித்தியானந்தம், சோமசுந்தரம் யோகானந்தராசா, கிருஸ்ணபிள்ளை சேயோன், சோமசுந்தரம் மகேந்திரலிங்கம், மார்கண்டு நடராசா, பழனித்தம்பி குணசேகரன், ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, தங்கராசா மனோகரராசா, பரசுராமன் சிவனேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இணைந்த வடக்கு கிழக்கில் அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆட்சி அமைய வேண்டும், மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டுடன், அதனை அடைவதற்காக எவ்வித தாக்குதல் சம்பவங்களையும் பொருட்படுத்தாது வீறு நடை போடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
எதனையும் செய்யக் கூடிய வலிமையுடன் அதிகார குவிமையமாக விளங்கும் மகிந்த அரசின் திட்டம், கிழக்கு மாகாண சபையினையும் கைப்பற்றி, சர்வதேச அரசியலில் தமிழர்களின் ஆதரவாக உள்ளனர் என்பதைக் காட்டிக் கொள்வதற்கான கபட நாடகம் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
அதனால் தான் விரைவாக தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. தனது பலத்தைக் கொண்டு எதையும் செய்யவல்ல இவ்வரசாங்கம் இத்தேர்தலைக் காரணம் காட்டி எதனையும் சாதிக்க வல்லது.
சரி விடயத்துக்கு வருவோம்.....
அரசியல் சுயலாபம் தேடும் சில அருவருடிகளின் சிந்தனைகளில் எந்நேரமும் ஓடிக் கொண்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பற்றிய சிந்தனைகள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் எங்கு பார்த்தாலும் குறை சொல்லிக் கொண்டும், அடாவடித் தனங்களில் ஈடுபட்டுக் கொண்டும் திரிகின்றனர்.
தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுபவர்கள் முதலில் அதனைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். "நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களைப் போல" அரசியல் அனுபவமற்று இருக்கும் இவர்கள், தமிழ்த் தேசியம், தமிழர் உரிமை பற்றிப் பேசுவது நகைப்புக்குரியது.
தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தொடரும் தாக்குதல் சம்பவங்களும் அச்சுறுத்தல்களும் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தின் காரணமாகவே நடைபெறுகின்றன.
ஏனெனில் கடந்த 2008ஆம் ஆண்டில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத காரணத்தினால், இம்முறையும் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வார்கள் என பலரும் எதிர்பார்த்து இருந்திருப்பார்கள்.
ஆனால் இம்முறை தேர்தலில் போட்டியிடுவது என்று கூட்டமைப்பு தீர்மானித்தவுடன், கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முதல்நாள் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் துரைராஜசிங்கத்தின் வீட்டுக்கு பூட்டு போடப்பட்டதிலிருந்து இதுவரைக்கும் 10 இற்கு மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அதுவும் கூட்டமைப்பின் வேட்பாளர்களை குறிவைத்தே இவ்வாறான சம்பவங்கள் ஏவிவிடப்பட்டுள்ளன. இதுவரை இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலாவது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் மீதோ அல்லது அவர்கள் ஆதரவாளர்கள் மீதோ எவ்வித அச்சுறுத்தல்களோ தாக்குதல் சம்பவங்களோ இடம்பெற்றுள்ளதை அறிய முடிகிறதா?
"தமிழ் தேசியம், மனித உரிமை மீறல், சர்வதேசத்தின் பார்வை" என்றவாறு பிதற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை தேர்தல் வேட்பாளர்கள் எவருக்கும் எந்த அருகதையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் பூ.பிரசாந்தன் அண்மையில் தெரிவித்தமை அவரது கையாலாகாத தனத்தைக் சுட்டிக் காட்டுகிறது.
எத்தனை வருட அரசியல் அனுபவம் உள்ளது? தமிழர்களுக்காக எதனைச் சாதித்துள்ளார். தாம் எதனைச் சொல்கிறோம் என சிந்தித்து செயல்பட வேண்டும். சமூகத்தில் தங்களது இருப்பை நிலை நிறுத்துவதற்காக எதையும் பேசலாம் என்று நினைக்கக் கூடாது.
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் பொறுப்பேற்ற இவர்களது நிர்வாகம், தமிழ்ப் பேசும் மக்களின் தேவைகளை அடையக்கூடிய விதத்தில் அமையாதபடியால்தான் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட முன்வந்துள்ளதை மறந்து விடக்கூடாது.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் கடந்த காலத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது மறுப்பதற்கில்லை. தார் வீதியெல்லாம் காப்பேட் வீதியானது. கிறவல் வீதிகள் சில கொங்கிறீறால் மெருகூட்டப்பட்டன. மட்டக்களப்பு மாநகரம் எங்கிலும் புது புது கட்டிடங்கள், வேறு பல அபிவிருத்தித் திட்டங்கள் என துரிதமாக இடம்பெற்றன.
ஆனால், கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பு தொடர்பில் இவர்களால் என்ன செய்ய முடிந்துள்ளது. வேக வேகமாக வீதிகளையும் பாலங்களையும் கட்டி முடித்துவிட்டு, தெருவில் மக்களை நிறுத்துவதற்கு தயாராகினார்களா? தமது பூர்வீக நிலங்களில் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலை தொடர்ச்சியாக இருக்க வேண்டுமா?
தமிழர்களை மீண்டும் அரசாங்கத்திடம் இடகு வைக்க முனைந்துள்ளார்கள் என்பது தெட்டத் தெளிவாக விளங்குகிறது. ஆட்சிகள் காலத்தி்ற்கு காலம் மாறி மாறி வரும். ஆனால் அவை மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடிக்க வேண்டும். சிங்களத்தின் கைப்பிடிக்குள் நின்று முட்களை விதைத்தல் கூடாது.
எனவே தமிழர் தாயகம், தேசியம் மற்றும் தன்னாட்சியுரிமை ஆகியவற்றைக் குழி தோண்டிப் புதைக்கும் நிலைமை மேலும் உருவாக தமிழ் மக்கள் விட்டுக் கொடுத்தல் கூடாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை பிரவேசம், தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் துன்பங்களையும் அவலங்களையும் களைவதற்கான அடிக்கல்லாக இருத்தல் வேண்டும். துயர் துடைக்க வித்திட்ட விதையாக இருத்தல் வேண்டும்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களிலிருந்து விடுபட தமிழ் மக்கள் எத்தகைய தீர்மானத்தினை எடுக்கப் போகின்றார்கள் என எதிர்பார்ப்போம்?
புவிலக்ஸி

ad

ad