புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2012


அஷ்ரப் காலத்து தீர்வுகள் இப்போது செல்லுபடியாகுமா?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம்.அஷ்ரபுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், தற்போதைய முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு விடயமாக இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், திருகோணமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது கூறியிருக்கிறார்...
அஷ்ரப் அவர்களுடன் அன்று நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது வட மாகாணத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை ஒன்றையும் கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களை இணைத்து தென் கிழக்கு மாகாண சபை ஒன்றையும் உருவாக்குவது பற்றி ஆராயப்பட்டது..
அதன்படி வட மாகாண சபைக்கு தமிழர் ஒருவர் முதலமைச்சராகவும் முஸ்லிம் ஒருவர் பிரதி முதலமைச்சராகவும் இருக்க வேண்டும் என்றும் தென் கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகவும் தமிழர் ஒருவர் பிரதி முதலமைச்சராகவும் இருக்க வேண்டும் என்றும் அந்த பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்பட்டது.
அந்த அடிப்படையிலேயே அரசியல் தீர்வொன்றைக் காண விரும்புகிறோம் என சம்பந்தன் அந்த கூட்டத்தில் கூறியிருக்கிறார்... சம்பந்தன் கூறும் இந்தத் திட்டம் மிகவும் நியாயமானதாகவே தெரிகிறது.
அதிகார பரவலாக்கலின் உண்மையான நோக்கத்தை புரிந்துகொண்ட எந்தவொரு சிங்களவரும் இதனை நிராகரிக்க மாட்டார் என நம்பலாம். ஆனால் இது நடைமுறை சாத்தியமா என்பது சந்தேகமே. நடைமுறை சாத்தியப்படாத பட்சத்தில் இது வெறும் தேர்தல்கால தேவதை கதையாகி விடுவதை தவிர்க்க முடியாது.
இந்தத் திட்டத்தின் மேலோட்டமான தோற்றத்தைப் பற்றி இணக்கப்பாட்டுக்கு வந்த போதிலும் அதனோடு தொடர்புடைய சில குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக தமிழ், முஸ்லிம் தலைவர்களிடையே இணக்கப்பாட்டுக்கு வர முடியுமா என்பது சந்தேகமான ஒரு விடயமாகும்.
அவ்வாறு இணக்கப்பாட்டுக்கு வந்தாலும் இன்றைய நிலையில் சிங்கள தலைவர்களை இந்த விடயத்தில் இணங்கச் செய்து அதனை சட்டமாக்குவது எல்லாவற்றையும் பார்க்கிலும் பெரும் சவாலாகும்.
முதலாவதாக, தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களுக்கிடையே இந்தத் திட்டத்தின் நடைமுறை அம்சங்களைப் பற்றி இணக்கப்பாடொன்றை காண்பதாக இருந்தால் இரு சாராரும் பழைய அனுபவங்களைப் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியிருக்கும். எங்கு பிழை விட்டோம் என்பதைப் பற்றி இரு சாராரும் நேர்மையாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு அமுலுக்கு வந்து சில காலங்களிலேயே அவ்வொப்பந்தத்தை ஆதரித்த சில தமிழ் தலைவர்களும் புதிய தீர்வுத் திட்டமொன்றை தேட முற்பட்டனர். ஈ.பி.டி.பி மட்டுமே தொடர்ந்தும் அதனை ஆதரித்து வந்துள்ளது.
தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களுக்கிடையே பொது இணக்கப்பாடு காண்பதில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது முக்கிய முயற்சியாக 1988ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் அஷ்ரப்பும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலமும் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டை எடுத்துக் காட்டலாம்.
வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கும் மாகாணசபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அப்போது இணங்கப்பட்டது. இந்தக் கருத்தை முதன் முதலாவதாக ஏற்றுக்கொண்ட தமிழ் தலைவர் குமார் பொன்னம்பலமே.
1988ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அப்போதைய தலைவி சிறிமா பண்டாரநாயக்கவின் தலைமையில் ஜனநாயக மக்கள் கூட்டணி என்ற பெயரில் 8 கட்சிகளின் கூட்டணியொன்று அமைக்கப்பட்டது. மு.கா மற்றும் த.கா ஆகிய இரு கட்சிகளும் இதில் இடம்பெற்றன.
எனவே அஷ்ரப் – பொன்னம்பலம் உடன்படிக்கையும் அந்தத் தேர்தல் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பிரதேசங்கள் இணைக்கப்பட்டு ஒரு மாகாண சபையையும் இரு மாகாணங்களிலும் ஆங்காங்கே சிதறியுள்ள முஸ்லிம் பிரதேசங்கள் இணைக்கப்பட்டு பாண்டிச்சேரி பாணியிலான முஸ்லிம் மாகாண சபையொன்றையும் உருவாக்குவது என அத்தேர்தல் விஞ்ஞாபனம் கூறியது.
ஆனால் தேர்தலுக்கு முன்னரே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக மு.காவும் த.கா.வும் அக்கூட்டணியில் இருந்து விலகிக்கொண்டன. அவர்கள் விலகிய பின்னர் அக்கூட்டணியில் இருந்த மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன அந்த உத்தேச முஸ்லிம் மாகாண சபையை ஹெலிகொப்டர் மாகாண சபையென நையாண்டிச் செய்தார்.
பின்னர் காலப்போக்கில் த.காவும் மு.காவும் தமது உடன்படிக்கையை மறந்து விட்டார்கள் போலும். 1988ஆம் ஆண்டு மற்றொரு முக்கிய தமிழ் – முஸ்லிம் உடன்படிக்கை ஏற்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எம்.ஐ.எம்.முகைதீனின் தலைமையிலான முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் இடையிலேயே அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதற்காக கலாநிதி பதியுதீன் மஹ்மூத்தின் தலைமையிலான மு.ஐ.வி.மு. குழுவொன்று சென்னைக்குச் சென்று 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15, 16 மற்றும் 19ம் திகதிகளில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் முஸ்லிம்களினதும் தாயகமென்பதால் அங்கு தமிழ் மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளும் முஸ்லிம்களுக்கும் உண்டு என்றும் எதிர்கால மாகாண சபையிலும் அதன் அமைச்சரவையிலும் 30வீத்த்திற்கு குறையாத பிரதிநிதித்துவத்தைப் பெற முஸ்லிம்களுக்கு உரிமையுள்ளது என்றும் எதிர்கால காணி பகிர்வுகளின் போது கிழக்கு மாகாணத்தில் 35 வீதத்திற்கும் மன்னார் மாவட்டத்தில் 30 வீதத்திற்கும், வட மாகாணத்தின் ஏனைய பகுதிகளில் 5 வீதத்திற்கும் குறையாத வகையில் காணிகளைப்பெற முஸ்லிம்களுக்கு உரிமையுள்ளது என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.
முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகாத பட்சத்தில் வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பிரதி முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் அதில் மேலும் கூறப்பட்டது. ஆனால் பின்னர் நடந்தவை இப்போது வரலாறாகியுள்ளன.
இதற்கு சில வாரங்களுக்குப் பின்னர் மு.ஐ.வி.மு. தமிழர் விடுதலை கூட்டணியுடனும் சென்னையில் வைத்து ஏறத்தாழ இதற்கு சமமான உள்ளடக்கத்துடனான ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டது.
1990ஆம் ஆண்டு 8 தமிழ் அரசியல் கட்சிகள் மு.கா.வுடன் பேச்சுவார்த்தை நடத்தின. புலிகள் இந்த தமிழ் கட்சிகளுள் அடங்கவில்லை. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது வடக்கு – கிழக்கில் தமிழ் மாகாண சபையொன்றையும் முஸ்லிம் மாகாண சபையொன்றையும் உருவாக்கி அவற்றுக்கு மேலால் அவற்றை இணைக்கும் உயர் சபையொன்றை (Apex council) உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் தமிழ் முஸ்லிம் மாகாண சபைகளின் எல்லைகளை நிர்ணயிக்க முற்பட்ட போது ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக அந்தப் பேச்சுவார்த்தைகளும் நின்றுவிட்டன.
சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 1996ம் ஆண்டு அப்போதைய அரசியலமைப்புத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் தலைமையில் இனப் பிரச்சினையை மையமாக வைத்து புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அந்தத் தெரிவுக் குழுவின் பேச்சுவார்த்தைகளுக்கு சமாந்தரமாக 1997ம் ஆண்டு மீண்டும் தமிழ் – முஸ்லிம் கட்சிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தின. அப்போதும் வடக்கு – கிழக்கில் தமிழ் மாகாண சபையொன்றையும் முஸ்லிம் மாகாண சபையொன்றையும் உருவாக்கி அவற்றுக்கு மேலால் அவற்றை இணைக்கும் உயர் சபையொன்றை (Apex council) உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் அப்போதும் தமிழ் முஸ்லிம் மாகாண சபைகளின் எல்லைகளை நிர்ணயிக்க முற்பட்ட போது ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக அந்தப் பேச்சுவார்த்தைகளும் நின்றுவிட்டன. சம்பந்தன் கூறுவதைப் போல் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் முஸ்லிம் கட்சிகளுடன் குறிப்பாக மு.கா.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாயின் இருசாராரும் இந்த வரலாற்று அனுபவங்களை கருத்தில் கொண்டேயாக வேண்டும்.
வரலாற்றில் சந்தித்த இந்தத் தடைகளை மீறும் நிலைமை இருந்தால் மட்டுமே அவ்வாறான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படும். இல்லாவிட்டால் தற்போதைய அதிகார பரவலாக்கல் முறைமைக்குள்ளேயே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் வழிவகைகளை தேட வேண்டியிருக்கும்.
புலிகள் இல்லாத நிலையில் இப்போது தமிழ் – முஸ்லிம் இரு சாராருக்கும் முடிவுகளை எடுப்பதில் உயிராபத்தோ நிர்ப்பந்தங்களோ இல்லாமை சாதகமான நிலைமையாகும். ஆனால் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இப்போது சட்டத்தாலேயே பிரிக்கப்பட்டுள்ளதால் சில முடிவுகளை எடுப்பது இப்போது முன்னரை விட கடினமாக இருக்கலாம்.
அன்றைய காலத்தைப் பார்க்கிலும் இப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதை விரும்பும் முஸலிம்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. கிழக்கு தனியாக இருக்கும் நிலையில் முஸ்லிம் மாகாண சபை பற்றிய ஆர்வமும் இப்போது முஸ்லிம்களிடம் இருந்து அகன்று போவதாகவே தெரிகிறது.
இரு சாராரும் எந்த முடிவை எடுத்தாலும் நாடு பிரியும் ஆபத்து நீங்கியிருப்பதால் அம்முடிவை சிங்கள அரசியலவாதிகளிடம் நியாயப்படுத்துவது முன்னனரைப் பார்க்கிலும் கடினமானதாகவே இருக்கும். எனவே அம்முடிவை சட்டமாக்குவது முன்னெப்போதும் இல்லாத அளவில் கடினமாக இருக்கும்.TAMILWIN

ad

ad