புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2012


புலம்பெயர் இளையோருக்கு உரிமையுடன் அவசர மடல்

அன்பார்ந்த புலம்பெயர் இளையோர்களே!!!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான பணி உங்கள் கைகளுக்கு மாறுவதாக தமிழீழ தேசியத் தலைவர் 2008 மாவீர் தின உரையிலேயே அறிவித்திருந்தார். 2009 இல் வரலாறு காணாத இனப்படுகொலையை சந்தித்திருந்தது தமிழினம். லண்டன் உட்பட வெளிநாடுகள் எங்கும் புலம்பெயர் தமிழர்கள்
வீதிக்கிறங்கி போராடிக் கொண்டிருந்தனர்.  இனப்படுகொலையைச் சந்தித்திருந்தாலும் இடைவிடாத போராட்டங்கள் ஏதாவததொரு முக்கிய கதவை திறக்கும் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. ஆனால் இன்று நிலை மாறிக் கொண்டுவருவதாக தெரிகிறது.

அடிப்படைவசதிகளும் இல்லாமல், அரசியல் பாதுகாப்பும் இல்லாமல், திறமையான தலமையும் இல்லாமல் சிதைக்கபட்டிருக்கும் தமிழீழ மக்கள் தங்கள் நிலங்களிற்காக உயிர் அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபடப்டிருக்கின்றனர். நிலம், கடல், குளம், பாடசாலைகள், வைத்தியசாலைகள், கலாச்சார மையங்கள் என அனைத்துமே சிங்கள அரசால் ஆக்கிரமிக்கபட்டுள்ள நிலையில் எதில் இருந்து எதற்கான போராட்டத்தை செய்வது என்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இங்கு இருக்க கூடிய தமிழ் அரசியல் தலமைகள் திரைமறைவு அரசியல் நகர்வுகளை செய்வதாக சொல்லியபடி மக்களுடன் இருந்து மக்களுக்கான அரசியல் செய்வதை இல்லாமலே செய்துள்ளனர் என்று சொல்லலாம். ஓரிரு அரசியல்வாதிகளை தவிர ஒட்டுமொத்தமாய் ஒரே இடத்தில் இன்று ஆணித்தரமான கருத்துக்களை அரசிற்கு எதிராக முன்வைக்க தயங்குகின்றனர்.

வீட்டுநிலங்களை போராடி வென்ற மக்களுக்கு குளத்து நீர் மறுக்கபட்டு விதைக்கபட்ட பயிர்களெல்லாம் கருகி நாசாமாக்கப்ட்டுள்ளது சிங்கள அரசால். கடலில் தமிழர்கள் தொழில் செய்யும் எல்லை வரையறுக்கபட்டு சிங்களவர்களுக்கு தாரைவார்க்கபட்டுள்ளது. சிங்கள கல்வியும் பெளத்த கலாச்சாரமும் தமிழர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுவருகிறது. இராணுவத்தை தாண்டி சிவில் நிர்வாக நடவடிக்கைகளை சுயாதீனமாக மக்கள் முன்னெடுக்க முடியாது என்ற நிலை உருவாக்கபட்டிருக்கிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் சிங்கள அரசால் உருவாக்கப்பட்ட சில தென்னிலங்கை நிறுவனங்கள் நிவாரணம் தருவதாக கூறி சனங்களின் முழு விபரங்களையும் திரட்டியுள்ளன. சில இடங்களில் காணி உறுதிகளும் பறிக்கப்பட்டிருக்கின்றன. அதி உச்சமாக பெண்பிள்ளைகளை தமக்கு திருமணம் செய்து தரும்படி சிங்கள இராணுவம் வெளிப்படையாகவே அச்சுறுத்தல்விடுத்து வருகிறது. வீதியால் பாடசாலை மாணவிகள் கூட நிம்மதியாக செல்ல முடியாத நிலை.

இப்படி எல்லா விடையங்களிலும் அடக்குமுறையை எதிர்கொண்டபடி கொஞ்சம் கொஞ்சமாக இழந்தவற்றை மீட்பதற்கு மக்கள் தயாராகிக் கொண்டு வருகிறார்கள். அல்லது அதற்கான அடித்தளத்தையும் இட்டு இருக்கிறார்கள்.

உரிமையை இழந்து அடிமைத்தனமான சிவில் வாழ்விற்கு தள்ளப்படடிருக்கும் சனங்களிற்கு அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியதும். மக்களின் நலன் சார்பாக சிந்திக்க வேண்டியதும் கடமை. ஆனால் அது நடக்கிறதா என்பது பெரும் கேள்விக் குறியாகியுள்ளது. இந்த நிலையில் புலம்பெயர் தேசத்தில் எவ்வகையான அணுகுமுறை கையாளப்படுகிறது என்பது தான் முக்கியமான விடையம்.

நிலப்பறிப்புக்கு எதிரான போராட்டங்கள் போலன்றி வேறெதுவுமான நேரடி எதிர்பு போராட்டங்களை இராணுவ இயந்திரத்திற்கு முன்னால் நிராயுதபாணியாக அதுவும் முறையான ஒழுங்குபடுத்தலுக்கு தகுந்த தலமையின்றி இங்குள்ள மக்களால் செய்ய முடியாது.

இன அழிப்பிற்கு உள்ளான பல இனங்களின் புலம்பெயர்ந்த மக்கள் வெளிநாடுகளில் இடைவிடாத தொடர்ச்சியான போராட்டங்கள் அழுத்தங்கள் மூலமாக தமது விடுதலைக்கான பயணத்தை இலகுபடுத்தியிருக்கின்றன. அந்த வகையில் தமிழினமும் இடைவிடாது உலக அரங்கில் நெருக்குவாரத்தை தொடர்ச்சியாக செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

புலம்பெயர்தேசங்களில் இருக்க கூடிய அமைப்புகளுக்கிடையில் தனிநபர் கொள்கை ரீதியில் முரண்பாடுகள் இருப்பதனால் மக்களை தொடர்ச்சியாக ஒழுங்குடுத்துவது சிரமாக இருப்பதாக பல நண்பர்கள் பதிவிட்டிருந்தார்கள்..
அப்படியாயின் இளையோர்கள், தமக்குள் அரசியல் விஞ்ஞான தேர்ச்சி உள்ளவர்கள்.. சட்ட வல்லுனர்கள்.. பல் மொழி தேர்ச்சி பெற்றவர்கள்.. ஊடக நட்புறவை ஏற்படுத்த கூடியவர்கள் தலமைதாங்க கூடியவர்கள் என ஒன்று சேர்ந்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து மக்களை வீடுகளில் இருந்து வெளிக் கொண்டுவர வேண்டும்.

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்த போது இருந்த மக்கள் எழுச்சி இப்பொழுது மீண்டும் வந்தே ஆக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. புலம்பெயர் தேசங்களில் காணப்படும் பலமான மக்கள் எழுச்சி இங்குள்ள மக்களுக்கு நம்பிக்கையை தரும். நிலப்பறிப்புக்கு எதிராக இங்கு திரண்ட சில நூறு மக்களுடன் ஆயிரக்கணக்கில் மக்கள் திரள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். சர்வதேசம் ஏதாவது ஒரு முடிவை ஏடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இன்று தமிழீழ மக்களின் உரிமைப்பிரச்சினை முற்று முழுதாக சர்வதேச அரசியல் நலன்களுக்குள் தள்ளபட்டுவிட்டது. நட்பு நாடுகள் பிராந்திய அதிகார மையப்படுத்தல் நாடுகள் என தமது நலன்களுக்காக சிங்கள அரசை கையாளும் நிலைக்கு தமிழர் பிரச்சினை தள்ளப்படிருக்கிறது. தமிழீழ பிரச்சினையில் மிக முக்கிய காரணியாக இந்தியா இருக்கிறது. ஆனால் இந்தியாவின் நயவஞ்சகத்தால் இந்தியாவை இனி ஒரு போதும் தமிழீழ மக்கள் நம்ப போவதில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அது போல சிங்கள தேசமும் இந்தியாவை தமது அரசியல் பாதுகாப்பிற்கு மாத்திரமே பயன்படுத்துகிறதே தவிர தன்னை முழுமையான பாதுகாப்பிற்கு சீனா உள்ளிட்ட இந்திய எதிர்ப்பு நாடுகளிடமே கையளித்திருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவின் பிடி இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவின் நுழைவு எமக்கு சாதகமானதும் இல்லை.

இந்த நிலையில் எமது அரசியல் ரீதியான அழுத்தங்கள் 3ம் நாடுகளினூடாக மேற்கத்தைய அதிகாரத்தினூடாக சிறிலங்காவை நேரடியாக நெருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இந்த வேலையை விரைவாகவும் தெளிவுடனும் கையாள வேண்டிய பொறுப்பு முற்று முழுதாக புலம்பெயர் தமிழ்களுடையது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் அல்லது நடக்க போகும் மாற்றங்கள் குறித்து சரியான முறையில் சர்வதேசமயப்படுத்துவதற்கு வலுவான புலம்பெயர் கட்டமைப்பு இன்றியமையாத ஒன்று. 

தனிநபர் அதிகார நலன்களுக்காக அமைப்புகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாமல் முற்றுமுழுதாக மக்கள் மயப்படுத்தப்பட்டு புலம்பெயர் தேசத்தில் வலுவான கட்டமைப்பு விரைவாக உருவாக்ப்பட வேண்டிய தேவை ஏன் என்பது உங்களுக்கு புரியும்.

இன அழிப்பு நடந்து 3 வருடங்கள் ஆகியும், சனல் 4 தகுந்த ஆதாரங்களை வெளிக் கொண்டுவந்தும், ஈழத்தில் இருந்து பல தரப்பட்ட அடக்கு முறைகள் குறித்து நேரடி ரிப்போட்டுகள் கிடைத்தும் புலம்பெயர் தேசத்தில் பெருவாரியான மக்கள் எழுச்சி ஏற்படாமைக்கான காரணத்தை அகற்றி விரைவாக செயற்படுங்கள். தாமதிக்கும் உவ்வொரு கணமும் எங்களின் இருப்பை தமிழீழத்தில் இழந்து கொண்டுவருகிறோம் என்பதை உணர்ந்து செயற்படுங்கள். தனிநபர் முரண்பாடுகளால் அமைப்புகள் ரீதியாக மக்களை பிளவுபடுத்துபர்களிடம் இருந்து விலகுகங்கள். அவர்களின் கணக்கை விரைவில் முடித்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கை கொண்டு ஒன்று திரண்டு வீதிக்கு இறங்குங்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசு என்ன செயற்பாட்டை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. புலம்பெயர் தேசத்தில் இருக்கும் மற்றைய அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்றே தெரியவில்லை. சிவநந்தன் உண்ணாவிரம் இருக்கும் பொழுது பெரும் எடுப்பிலான மக்கள் திரட்சி ஏற்பட்டிருக்க வேண்டும்...

போராட்ட ஆரம்ப காலங்களில் இங்கிருந்து தான் மக்கள் திரண்டார்கள். தொழினுட்பம் அந்த அளவிற்கு வளர்ந்திருக்கவில்லை. துரோகிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தனர். இலகுவாக இனம்காண கூடியதாக இருந்தது. போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டிருக்கவில்லை. தமிழீழ விடுதலைபற்றியதான அரசியல் நலங்கள் குறித்து சர்வதேசம் பெரிதளவில் அக்கறை கொண்டிருக்கவில்லை. ஆனால் இப்பொழுது நிலமை வேறு.எமது போராட்டம் பிராந்திய சர்வதேச அரசயல் சமநிலையில் மாற்றத்தை உண்டுபண்ண கூடிய சக்தியாக உருவெடுத்திருக்கிறது. எனவே அதை கவனமாக கையாண்டபடி விடுதலைப்போராட்டத்தை மீண்டும் உத்வேகத்த்துடன் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் என்றுமில்லாத அளவிற்கு இன எழுச்சி மூட்டப்பட்டிருக்கிறது. மக்கள் தெளிவடைந்திருக்கிறார்கள். இந்திய பிழைப்பரசியல் நடாத்தும் தமிழக பெரும் புள்ளிகளின் முகமூடிகள் கிழிக்கபட்டிருக்கின்றன. 2009 போலல்லாமல் இனிவரும் காலத்தில் தமிழகத்தின் பலம் ஒன்று திரண்ட மக்களின் திரட்சியாக இருக்கும் என நம்பலாம்.

இப்படிப்பட்ட நிலையில் அடுத்த கட்ட போராட்டத்தின் அச்சாணி புலம்பெயர் இளையோர்களின் கைகளில்தான் இருக்கிறது என்றே சொல்லலாம். வலுவான கட்டமைப்பை விரைவாக உருவாக்குங்கள்.

ஆதி
24-08-2012

ad

ad