வெள்ளி, செப்டம்பர் 07, 2012


இலங்கைப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் விசாரிக்குமாறு கோரிக்கை
டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொலை வழக்கு ஒன்றில் இந்தியாவினால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் சந்தித்தனர். எனவே இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் டக்ளஸ் தேவானந்தா பற்றி விசாரிக்க வேண்டும் என, மதுரையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான இருளாண்டி என்பவரால் சென்னை உயர் நீதிமன்றில் வாசிப்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பபினர்கள் அடங்கிய குழு கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியது. அந்த சந்திப்பின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனிருந்தார்.

டக்ளஸ் இந்தியாவில் ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். எனவே அவரைப் பற்றிய முழு விவரமும் நாடாளுமன்றக் குழுவுக்கு தெரிந்திருக்கக் கூடும். எனவே இலங்கை சென்ற சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவிடம் டக்ளஸ் தேவானந்தாவை பற்றி விசாரிக்க கேட்டு ஏப்ரல் 26-ந் திகதி அன்று உள்துறை செயலாளர், காவற்றுறை டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோரிடம் மனு கொடுத்திருந்தேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். என இருளாண்டி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை டிவிசன் பெஞ்சிற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.