புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2012


தமிழ் கூட்டமைப்பின் ஆலோசனை நிறுவனத்தினுள் ஊடுருவியுள்ள இலங்கை புலனாய்வு அதிகார

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஆலோசனை நிறுவனத்தினுள், இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரிகேடியர் றிஸ்வி சக்கி ஊடுருவியுள்ளது, தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூலோபாய உத்திகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்குவதற்காக, அண்மையில் Verite Research என்ற மதியுரை நிறுவனம் வாடகைக்கு அமர்த்தப்பட்டது.
வெளிநாட்டு இராஜதந்திரப் பின்னணியுடனேயே, இந்த மதியுரை நிறுவனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணிக்கு அமர்த்தியிருந்தது.
இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பாட்டை செய்து கொண்ட பின்னர், குறிப்பிட்ட நிறுவனம் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் றிஸ்வி சக்கியை பணிக்கு அமர்த்தியுள்ளது.
பிரிகேடியர் றிஸ்வி சக்கி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதில் தீவிரமாகப் பங்கெடுத்த ஒருவராவார்.
இவர் 1990களில் கிழக்கில் இடம்பெற்ற தமிழர்களின் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவராக இருந்தவர்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கிலும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரியாகச் செயற்பட்ட பிரிகேடியர் றிஸ்வி சக்கி, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகிக்கப்பட்டவர்களின் கொலைகள், கடத்தல்களுக்குப் பொறுப்பாக இருந்தவராவார்.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இவர், இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், பாகிஸ்தானில் உள்ள  இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் படுகொலைகள் மற்றும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதில் தீவிரமாகப் பங்கெடுத்த பிரிகேடியர் சக்கியை, குறிப்பிட்ட மதியுரை நிறுவனம் பணிக்கு அமர்த்தியுள்ளது, சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளோர் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த மதியுரை நிறுவனத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடன்பாடு செய்து கொள்வதில் பின்புலத்தில் இருந்த வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை பாகிஸ்தானுடன் நெருக்கமான பிரிகேடியர் சக்கி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மதியுரை வழங்கும் நிறுவனத்தினுள் ஊடுருவியிருப்பது இந்தியாவுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ad

ad