ஞாயிறு, செப்டம்பர் 09, 2012


யாழில் சினிமா பாணியில் இரு குழுக்களுக்கிடையே வாள் வெட்டு: ஒருவர் பலி! இருவர் படுகாயம்
யாழ். திருநெல்வேலி சிவன் - அம்மன் ஆலயத்தை அண்டிய மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இரு இளைஞர் குழுக்கள் பரஸ்பரம் வாளால் வெட்டிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சினிமாப் பாணியில் வாள்களுடன் வீதிக்கு வந்த இளைஞர்கள் பரஸ்பரம் வாளால் வெட்டுப்பட்டுள்ளனர். இதில் யாழ். திருநெல்வேலிப் பகுதியினைச் சேர்ந்த பிரபு (வயது25) என்று அழைக்கப்படும் 2 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அதே இடத்தைச் சேர்ந்த தம்பா மற்றும் நல்லூரைச் சேர்ந்த றூபன் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதேவேளை குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபரை சிலர் துரத்தி வந்தாகவும் பின்னர் அந்த இடத்தில் வைத்து வெட்டி வீழ்த்தி விட்டு தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னதாக அந்தப் பகுதியில் இளைஞர்கள் சிலர் தமக்குள் மோதிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் காயமடைந்தவர்களில் ஒருவர், அவர்களிடையே சண்டையை நிறுத்துமாறு கூறச் சென்றவராவார்.
இதேவேளை இந்தச் சம்பவத்தையடுத்து உயிரிழந்தவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நல்லூர் அரசடி பகுதியில் நுழைந்த இளைஞர்கள் சிலரை வெட்டியுள்ளனர். இதில் சிலர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வெளியாட்கள் உள்நுழைய முடியாதபடி அப்பகுதியில் வாள்களுடன் இளைஞர்கள் நடமாடியதாக தெரிவிக்கப்படும் நிலையில், அப்பகுதி முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக பரவலாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டிய பொலிஸார் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பாக இருந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.