வெள்ளி, செப்டம்பர் 07, 2012


இரத்தினபுரி, கேகாலையில் தமிழ் பிரதிநிதித்துவங்களை பெற்று காட்டுவோம்: மனோ கணேசன்
இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் குறைந்த தொகை தமிழ் வாக்காளர் வாழும் நிலையில் அவர்களின் வாக்கு சிதறடிக்கப்படாவிட்டால் நிச்சயமாக தமிழ் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும்.
இது கடந்த கால படிப்பினை. இதை அடிப்படையாகக் கொண்டு நாம் வகுத்த துணிச்சல் மிக்க அரசியல் வியூகம் வெற்றி பெறவேண்டும். அதன்மூலம், கடந்தகாலங்களில் இல்லாமல் போயிருந்த தமிழ் பிரதிநிதித்துவம் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் நிச்சயமாக உறுதி செய்யப்படவேண்டும்.
தமிழர் வாக்கு விகிதம் அதிகரிக்க, அதிகரிக்க எமது பிரதிநிதித்துவ ஆசனங்கள் அதிகரிக்கும். இந்த அற்புதமான உண்மையை புரிந்துகொண்டு தமிழர்கள் உற்சாகமாக அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
வாக்களிக்கும் தமிழ் வாக்காளர்களின் தொகை எவ்வளவு அதிகரிக்கின்றதோ, அதற்கு அமைய பெறப்படும் தமிழர் பிரதிநிதித்துவங்களும் அதிகரிக்கும் என்பதை தமிழ் மக்கள் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.
மாகாணசபைகளில் தமிழ் மக்களுக்கு உரிய இடங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை பெறுவதற்கு நாம் வாக்களிப்பில் உற்சாகமாக அணிதிரண்டு கலந்து கொள்ள வேண்டும். நாம் வாக்களிப்பில் கலந்துகொள்ளாவிட்டால், எமக்குரிய இடம் காலியாக இருக்காது.
தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இடங்களையும் மாற்று இன சகோதரர்கள் எடுத்து சென்று விடுவார்கள். எனவே தமிழர் வாக்கு விகிதம் அதிகரிக்க, அதிகரிக்க எமது பிரதிநிதித்துவ ஆசனங்கள் அதிகரிக்கும். இந்த அற்புதமான உண்மையை தமிழர்கள் புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும் என்றார்.