புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2012


போர்குற்ற விசாரணை: இலங்கை வலையில் இந்தியா விழக்கூடாது: ராமதாஸ்
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரின் போது சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பான காலமுறை மதிப்பீட்டாய்வு விசாரணையில் இலங்கை விரிக்கும் வலையில் இந்தியா விழக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரின் போது சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஆறு மாதங்கள் ஆன போதிலும், இலங்கையில் நிலவும் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களும், அடக்குமுறைகளும் அதிகரித்திருக்கின்றன.

இதற்காக இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற முழக்கங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் போருக்கு முன்பும், போரின் போதும், போருக்குப் பிறகும் (2008  2012) மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கப்பட்டன என்பது குறித்த முழுமையான காலமுறை மதிப்பீட்டாய்வு, ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அக்டோபர் 22ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை  நடைபெறவிருக்கும் காலமுறை மதிப்பீட்டாய்வு பணிக்குழுவின் 14 வது கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இக்கூட்டத்தின் போது நவம்பர் 1ம் தேதி இலங்கை மீதான குற்றச்சாற்றுகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் நவம்பர் 5ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இந்த விசாரணையை நடத்தும் பொறுப்பு இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வெறு நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் தங்களின் கருத்துக்கள், இலங்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த பரிந்துரைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 46 அறிக்கைகளை ஐ.நா.விடம் அளித்துள்ளன.

இலங்கை அரசும் 30 பக்கங்கள் கொண்ட விளக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவிலிருந்து பசுமைத் தாயகம் அமைப்பு மட்டுமே அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையரின் கள அலுவலகத்தை இலங்கையில் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

இலங்கை அரசு தாக்கல் செய்த அறிக்கையும், தற்போது இலங்கை சென்றுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையக் குழுவிடம் இலங்கை அளித்துள்ள விளக்கமும் ஐ.நாவை திருப்திப்படுத்தவில்லை.

இலங்கை அளித்த அறிக்கையில் பொய்கள் மட்டுமே இருப்பது தான் இதற்கு காரணமாகும். இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வெறு நாடுகளும் வலியுறுத்தி வருவதால்
இலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிடப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இதை தடுப்பதற்கான முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டிருக்கிறது. விசாரணைக்குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயினும், பெனினும் ஏற்கனவே மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தவை என்பதால், இம்முறையும் நடுநிலையாக செயல்பட்டு தீர்ப்பளிக்க முடிவு செய்துள்ளன.

ஆனால், கடந்தமுறை தங்களுக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்து,அதை நீர்த்துப் போகச்செய்த இந்தியா, இம்முறையும் தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு தங்களை காக்கும் என்று இலங்கை அரசு நம்புகிறது.

இதற்காக பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ஆதரவை திரட்டவே இலங்கை அதிபர் இராசபட்சே நாளை மறுநாள் (செப்டம்பர் 18) இந்தியா வருகிறார். போர் முடிந்த பிறகு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்கனவே அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு ஆதரவாக மீண்டும் ஒருமுறை இந்தியா செயல்பட்டால் இனப்படுகொலைகளுக்கு துணை போகும் நாடு என்ற தீராப்பழி ஏற்பட்டுவிடும்.

ஐ.நா. நெருக்கடியிலிருந்து இந்தியாவின் உதவியுடன் தப்பிக்கும் நோக்குடன் இலங்கை விரித்துள்ள வலையில் இந்தியா விழுந்துவிடக்கூடாது. எனவே, இந்தியா வரும் இராஜபட்சவேவை சந்திப்பதை பிரதமர் தவிர்க்க வேண்டும். மேலும், இப்பிரச்சினையில் இந்தியா நடுநிலையுடன் செயல்படும் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காமல் தடுக்கும் பொறுப்பு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க.வுக்கும் உண்டு.

இதற்கு முன், ஐ.நா. மனித உரிமை ஆணைய வாக்கெடுப்பின்போது, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்திருந்த மத்திய அரசு, தமிழக கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு வலியுறுத்தியதால் தான் கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்டு இலங்கைக்கு எதிராக வாக்களித்தது.

அதேபோல், இம்முறையும் இலங்கைக்கு எதிரான விசாரணையின் போது, நடுநிலையாக செயல்பட்டு இலங்கைக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும்படி, மத்திய அரசையும்,பிரதமரையும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

ad

ad