புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2012


தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கற்றுக் கொள்ளுங்கள்!
இன்றைய அரசியலில் பணம் , பதவி, மற்றும் இதர வாய்ப்புளுக்கு சோடை போகாத அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் காணுவது அரிதாகவே உள்ளது. இந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சற்று எதிர் மறையாகவே உள்ளது எனலாம்.
ஒற்றுமை, கொள்கை, இனத்துக்கான போராட்டம், பணம் பதவிகளுக்கு சோடை போகாத அரசியல், அச்சமில்லா விமர்சனம் என்று இன்றைய அரசியலில் ஒரு முன் மாதிரியை காட்டி வருகின்றார்கள்.
மற்றைய சிறுபான்மை கட்சிகளிடம் இந்த தன்மையை காண்பது அரிதாகவே உள்ளது. குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும், கட்சிகளிடமும் இந்த பண்பை காண்பது சற்று கடினமே.
இதை இதுவரை நடந்த தேர்தல்களில் காணலாம். குறிப்பாக நடந்து முடிந்த கிழக்கு மாகாண தேர்தலில் கிடைத்த வாய்ப்பை பதவிக்காக நழுவ விட்ட முஸ்லிம் காங்கிரஸ, அதேபோல அரசிடம் தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம் கட்சிகள் போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூற முடியும்.
குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு எதிரான தேர்தல் பிரசாரங்களை பேசி மக்களிடம் பெற்ற வாக்குகளை பதவிக்காக துஷ்பிரயோகம் செய்துள்ளது எனலாம். இந்த முடிவானது முஸ்லிம் காங்கிரஸ் செய்த மாபெரும் தவறு எனக்கூறினால் மிகை ஆகாது எனலாம்.
அரசின் பல சதி முயற்சிகளை தாண்டி மக்களிடம் பெற்ற இந்த வாக்குகளை அரசிடமே அடகு வைத்ததன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் நலனுக்காக பாடுபடும் கட்சி எனும் பார்வையில் இருந்து விலகி மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கும் என்பதில் ஐயம் இல்லை. இதன் மூலம் இந்த முறை அது பெற்ற எழுச்சியை இனி பெறுவது கடினமாகவும்,  இனிவரும் தேர்தல்களில் அது பெரும் சவால்களை சந்திக்க நேரிடும். அதன் தாக்கம் தலைமைத்துவத்தை கூட ஆட்டம் காணச் செய்யலாம்.
முஸ்லிம் கட்சிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் ஒற்றுமை ஏற்படும் வரையிலும், கொள்கை அரசியல் முறை ஒன்று உருவாகும் வரையிலும் முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும். அதே போல் சிறுபான்மை கட்சிகள் ஒன்றுபடாவிட்டால் தம் உரிமைகளையும் பெறுவது எட்டாக்கனியாகவே இருக்கும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இதை நிரூபித்து இருக்கின்றது. சிறு தமிழ் கட்சிகளாக செயற்பட்டு ஒரு குறிக்கோளுக்காக ஒரே கட்சியாக விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.
அதே போல் முஸ்லிம் காங்கிரசையும் பங்காளிகளாக ஆட்சிக்கு அழைக்கிறது. இது அவர்களின் ஒற்றுமையையும், தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையை எதிர்பார்க்கும் ஒரு கொள்கை அரசியல் கட்சியின் குறிக்கோள்.
இதுதான் ஒற்றுமையின் அறிகுறி. ஆனால் முஸ்லிம் அரசியல், ஒரே ஒரு கட்சியாக ஆரம்பித்து தற்போது சிறு கட்சிகளாக சிதறியுள்ளது.
இது பணம், பதவிக்கான பிரிவினையே தவிரே வேறொன்றும் இல்லை.
கொள்கை அரசியலுடன் கூடிய ஒற்றுமையை முஸ்லிம் கட்சிகளிடம் எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் மக்களின் அபிலாஷைகளை எப்போது முஸ்லிம் கட்சிகள் உணரப்போகிறார்கள்?

- றவ்ஷான்
E-mail: rouzan@writeme.com

ad

ad