புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2012

டில்சான் அதிரடி: பரபரப்பான போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டி சமநிலையில் முடிவடைந்ததையடுத்து சுப்பர் ஓவர் முறையில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.
 

லீக் போட்டிகள் முடிவடைந்து சூப்பர்-8 சுற்று இன்று ஆரம்பமானது. கண்டி பல்லேகலேயில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரராக களமிறங்கிய நிகோல் அதி கூடுதலா 58 ஓட்டங்களை பெற்றார். மேலும் குப்டில் (38) பிரண்டன் மெக்கலம் (25), ரோஸ் டெய்லர் (23) ஆகியோர் வலுசேர்க்க நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணியில் சர்வதேச இருபதுக்கு20 போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய அக்கில தனஞ்ஜெய 4 ஓவர்கள் வீசி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் குலசேகர இரு விக்கெட்டுகளையும், மாலிங்க, அஜன்த மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து கடின இலக்கை அடைவதற்கு இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களாக டில்சான் மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் களம்கண்டனர். இருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி நல்லதோர் ஆரம்பதை பெற்றுக்கொடுத்தனர். டில்சான் நாதன் மெக்கலம் வீசிய முதல் ஓவரிலேயே 16 ஓட்டங்களை பெற்றார்.

இதேவேளை இரண்டாவது ஓவரில் 3ஆவது பந்து வீச்சில் மஹேல ஜயவர்தன ஒரு ஓட்டத்தை பெற்ற போது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் 10ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மேலும் இவ்விருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 4.1 ஓவர்களில் இணைப்பாட்டமாக 50 ஓட்டங்களை பெற்றதோடு சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் ஒரு அணி அதிவேகமாக பெற்ற 50 ஓட்டமாகவும் இது பதிவானது.

மேலும் டில்சான் மற்றும் ஜயவர்தன ஆகியோர் இணைப்பாட்டமாக 80 ஓட்டங்களை பெற்றிருக்கையில் ஜயவர்தன 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களம்கண்ட குமார் சங்கக்கார டில்சானுடன் கைகோர்த்தார். இதன்போது ஆரம்ப வீரராக களமிறங்கி அதிரடியில் மிரட்டிய டில்சான் அரைச்சதத்தைக் கடந்தார். சிறப்பான துடுப்பாட்டத்தை அமைக்க முற்பட்ட சங்கக்கார ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

மேலும் அடுத்த களம்கண்ட ஜீவன் மெண்டிஸ் (8), திசர பெரேரா (5) ஓட்டங்களுடன் ஏமாற்றமளிக்க மெத்தியூஸ் மற்றும் திரிமனே ஆகியோர் களத்தில் இருந்தனர். ஒரு கட்டத்தில் இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்பட்ட போதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளால் சரிந்தமையால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை அணிக்கு வெற்றி பெற இறுதி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இறுதி ஓவரை நியூசிலாந்து அணியின் ரிம் சௌத்தி வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட மெத்தியூஸ் ஒரு ஓட்டத்தை பெற அடுத்த இரண்டாவது பந்தில் திரமனே ஒரு ஓட்டத்தை பெற்றார். 3ஆவது பந்தில் மெத்தியூஸ் ஒரு ஓட்டத்தை பெற நான்காவது பந்தை எதிர்கொண்ட திரிமனே ஓட்டம் எதனையும் பெறவில்லை.

இதனையடுத்து இரு பந்துகளுக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதனால் போட்டியில் பரபரப்பு நிலை ஏற்பட்டது. இதன்போது ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய திரிமனே ஆறாவது பந்தில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ஆகவே போட்டி சமநிலையில் முடிவடைய சுப்பர் ஓவர் முறை கையாளப்பட்டது.

இதன் போது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மஹே ஜயவர்தனவுடன் திசர பெரேரா களம் இறங்கினர். நான்கு பந்துகள் வீசப்பட்ட நிலையில் ஜயவர்தன ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க இலங்கை அணி 8 ஓட்டங்களை பெற்றிருந்தது. தொடர்ந்து டில்சான் களம் கண்டு ஐந்தாவது பந்தை எதிர்கொள்ள அது மட்டையில் பட்டு உதிரி ஓட்டமானது. இறுதி பந்தில் பெரேராவினால் 3 ஓட்டங்கள் பெறப்பட்டது.

ஆகவே இலங்கை அணியால் 13 ஓட்டங்கள் மாத்திரம் பெற முடிந்தது. 14 என்ற ஓட்ட இலக்கை அடைய நியூசிலாந்தின் ஆரம்ப வீரர்களாக பிரண்டன் மெக்கலம் மற்றும் குப்டில் ஆகியோர் களம் கண்டனர்.

இலங்கை அணியில் பந்து வீச்சை மாலிங்க மேற்கொண்டார். மாலிங்க வீசிய முதல் பந்தில் குப்டில் 2 ஓட்டங்களை பெற்றார். இரண்டாவது பந்திலும் குப்டில் ஒரு ஓட்டத்தை பெற 3ஆவது பந்தை எதிர்கொண்ட மெக்கலம் எவ்வித ஓட்டமும் பெறவில்லை. ஆனால் சங்கக்கார இப்பந்தை தவறவிட்டமையால் இரு ஓட்டங்கள் உதிரிகளாக பெறப்பட்டன.

தொடர்ந்து 4 ஆவது பந்தை எதிர்கொண்ட மெக்கலம் ஒரு ஓட்டத்தை பெற அடுத்த பந்தில் குப்டில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இலங்கை அணியின் வெற்றி உறுதியானதோடு இறுதிப் பந்தில் மெக்கலத்தால் ஒரு ஓட்டம் பெறப்பட்டது. அந்தவகையில் நியூசிலாந்து அணியால் 7 ஓட்டங்கள் மாத்திரமே பெற முடிந்தது.

இந்நிலையில் சுப்பர்8 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக டில்சான் தெரிவு செய்யப்பட்டார்.

ad

ad