ஞாயிறு, செப்டம்பர் 09, 2012


கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்! சிரேஷ்ட உறுப்பினர்களுடன் பேசி முடி
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நிலை தோன்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசே கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.
நேற்று சனிக்கிழமை  நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி 11 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலதிக ஆசனங்கள் இரண்டு உட்பட 14 ஆசனங்கனை கைப்பற்றியுள்ளன.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகளின் படி 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு திருகோணமலை மாவட்டத்தில் தனித்து போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணி ஆதரவு வழங்கினால் 15 ஆசனங்கள் பலமாக இருக்கும்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் 15 ஆசனங்கள் ஆதரவு கிடைக்கும். ஆயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆட்சி அமைப்பதில் சிக்கலில் சிக்கியுள்ளன.
அதேவேளை, 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளித்தால் 22 ஆசனங்களுடன் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க முடியும்.
இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கும் அதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கும்.
முஸ்லிம் காங்கிரசின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து செயற்படுவதில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கப்படும் என தீர்மானித்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் 22 மேலதிக ஆசனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸலிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை கைப்பற்ற முடியும்.
தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கிழக்கு மாகாணத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

எப்படியிருப்பினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசே கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடலின் பின் யாருக்கு ஆதரவென்பது தீர்மானிக்கப்படும்! ஹக்கீம் (இரண்டாம் இணைப்பு)
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை அமைப்பதற்கு தேவையான ஆசனங்களை எந்தவொரு கட்சியும் பெறாத நிலையில் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மாகாணத்தில் ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடமிருந்து தனக்கு முதலாவதாக தொலைபேசி அழைப்பு வந்தது என அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்ததாகவும் ஹக்கீம் தெரிவித்தார்.
மாகாண சபை ஆட்சியை அமைப்பதற்கான ஆதரவினை யாருக்கும் வழங்குவதற்கு முன்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாட வேண்டும்.
எவ்வாறாயினும் அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை உருவாக்குவதற்கு ஆதரவளிப்போம் என அவர் தெரிவித்தார்.