புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2012


ஆளும்தரப்பு குட்டுக்களை அம்பலப்படுத்தும் கிழக்கு தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள்!
கிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கத்திற்கு பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஒரு சில நபர்கள் குறித்த உறுப்பினர்களைச் சந்தித்த போதிலும் அவர்களது முயற்சி பயனளிக்கவில்லையென தெரியவருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவான 6 பேரில் 3 பேரையும், அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவான இருவரில் ஒருவரையும் தேர்தல் முடிவு வெளியாகி 48 மணி நேரத்துக்குள் சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது. 
இதனை உறுதிப்படுத்திய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, தமது கட்சி மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்த நபர்கள் வாகனங்களில் வந்து ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்ததாகக் கூறியும், புலனாய்வுத் துறையினர் என்று கூறியுமே சந்தித்துள்ளனர். இந்த செயல் ஜனநாயக விரோத செயல் என குற்றம் சாட்டுகின்றார்.
இது தொடர்;பாக தகவல் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
“கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் வெற்றிபெற்ற நான்கு பிரதிநிதிகளை புலனாய்வுப் பிரிவு என்றும், ஜனாதிபதி செயலகத்தைச் சேர்தவர்கள் என்று கூறியும் இரண்டு விதமான குழுக்கள் சந்தித்திருக்கிறார்கள்.
இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் நீங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டால் உங்களுக்குரிய சலுகைகள் வழங்கப்படும். ஆகவே அரசாங்கத்துடன் சேர வேண்டிய பொறுப்பு உங்களுடையதாக இருக்கின்றது இதை நிறைவேற்றுவீர்களானால் உங்களுக்கு பல சலுகைகளை வழங்கமுடியும் என்றும் அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள்.
அதேவேளை இரண்டாவது தடவையாக இந்திரகுமார் பிரசன்னா அவர்களை திங்கட்கிழமை நள்ளிரவு வேளை மீண்டும் ஒரு முறை சந்திக்க முயற்சித்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுடன் சரளமாகப் பேசினாலும் கூட கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மிகவும் பயந்த சுபாவத்துடன் அதற்கான பதிலை வழங்கியுள்ளார்கள்.
இவர்கள் வழங்கிய பதிலில் அரசாங்கத்துடன் சேர்வதற்கான எந்தவித வாய்ப்பும் இல்லையென எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். 
எமது மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்தவர்கள் யார் என்பது உறுதியாக கூற முடியாவிட்டாலும் இத்தகைய செயற்பாடுகள் ஜனநாயக விரோத போக்காகவே நாம் கருதுகிறோம்.
இந்த விடயம் தொடர்பாக நான் உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளேன்”.
குறித்த நபர்களினால் சந்தித்தவர்களில் ஒருவரான பிரசன்னா இந்திரகுமார் திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் சாந்த என்று தன்னை அறிமுகப்படுத்திய ஒருவர் தனது கையடக்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு உரையாடிய பின்னர் அந்த நபர் உட்பட இருவர் அலுவலகத்தில் வந்து முன் அறிவித்தலுமின்றி தன்னை சந்தித்து ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவு வழங்குமாறு தன்னிடம் கோரிக்கை முன்வைத்ததாக கூறுகிறார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த பிரசன்னா:
“குறித்த நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது சிங்கள மொழியில் உரையாடினார். நான் வெளியே நிற்பதாகக் கூறி தற்போது சந்திக்க முடியாது எனக் கூறினேன்.
இவர்கள் இரண்டு மணித்தியாலங்களில் வந்து சந்திப்பதாகக் கூறினார்கள். எனது அலுவலகமும் வீடும் ஒரே கட்டடத் தொகுதியில் உள்ளது.
இரவு 10 மணியளவில் இரண்டு வாகனங்களில் அவர்கள் வந்து அலுவலக பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசாரிடம் எங்கே? என கேட்டுள்ளார்கள்.
கடமையிலிருந்த பொலிசாருக்கு இவர்கள் யார்? எனத் தெரியாத காரணத்தினால் பொலிசார் எனது கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு என்னை உரையாடச் செய்தனர்.
இதனையடுத்து வெளியே எனது ஆதரவாளர்களின் வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்த நான் அவசரமாக அலுவலகம் திரும்பிய போது அலுவலகத்திற்கு முன்பாகவும் அண்மித்த பகுதிகளிலும் இரண்டு வாகனங்கள் காணப்பட்டன.
அலுவலகத்தில் இந்த நபர்கள் உரையாடிய போது ஜனாதிபதி செயலகத்திலிருந்து வருவதாகக் கூறி தங்களை அறிமுகப்படுத்தி ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் மாகாண சபையில் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குமாறு கோரினர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையின் அடிப்படையில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி நான் என்பதை சுட்டிக்காட்டி அது முடியாது என்றேன்.
இவ்வேளையில் எனது அலவலகத்திற்கு வந்த சக மாகாண சபை உறுப்பினர்  ஜனா எனப்படும் கோவிந்தன் கருணாகரம் என்பவரும் இந்த உரையாடலில் இணைந்து கொண்டார்.
“இப்படி தனிப்பட்ட ரீதியாக எங்கள் உறுப்பினர்களைச் சந்திப்பது பிழை இது கட்சி தலைவர்களிடம் பேச வேண்டிய விடயம் என்பதை ஜனாதிபதியிடம் கூறுங்கள்.
நாம் தமிழ் மக்களுடன் தான் நிற்போம். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் அதன் பிறகு இது பற்றி யோசிக்கலாம்” என கோவிந்தன் கருணாகரன் விளக்கமளித்தார்.
இதனையடுத்து 10 – 15 நிமிடங்களில் அவர்கள் திரும்பிவிட்டனர். இவர்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்திருந்தால் அது தொடர்பாக உறுதிப்படுத்தும் ஆவணங்களைக் கேட்டபோது அதற்கு செவிசாய்க்காதவாறு நடந்து கொண்டனர்.
இதன் காரணமாக இவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
மீண்டும் நள்ளிரவு இரவு 12 மணியளவில் ஒரு பஜிரோ ரக வாகனம் எனது அலுவலகம் முன்பாக வந்து நின்றது.
மற்றுமொரு வாகனம் சற்றுத் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனை அவதானித்த ஆதரவாளர்கள் அலுவலகத்திற்குள்ளே இருந்த எனக்கு அறிவிக்க நான் கோவிந்தன் கருணாகரனிடம் தொடர்பு கொண்டு அவர்கள் மீண்டும் வந்திருப்பது பற்றி கூறினேன்.
உடனே அவசரமாக அவர் அலுவலகத்திற்கு வர குறித்த இரண்டு வாகனங்களும் புறப்பட்டது.
புறப்பட்டு 5 நிமிடங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை எத்தனை மணிக்கு சந்திக்கலாம் எனக் கேட்டனர் நான் முடியாது என்றேன்.
செவ்வாய்க்கிழமை கூட தொலைபேசியில் தொடர்புகொள்ள பல தடவைகள் முயன்றார்கள் நான் தொடர்பு கொள்ளவோ சந்திக்கவோ மறுத்துவிட்டேன். அவர்கள் நள்ளிரவு வேளை மீண்டும் வந்த நோக்கம் குறித்து எனக்கும் எனது ஆதரவாளர்கள் மத்தியிலும் சந்தேகமாயிருந்தது” என்றார்.

ad

ad