புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2012

13 ஆவது திருத்தத்தை நீக்கினால் மீண்டும் இன மோதல் வெடிக்கும்!
13 ஆவது திருத்தச் சட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம். இதனை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டும் என்று கூறுவது முட்டாள்தனமாகும். அரசமைப்பில் திருத்தங்களை கொண்டுவர வேண்டுமாயின் புதிய திருத்தத்தை முன்வைக்க வேண்டும்.


இலங்கை அரசமைப்பிலிருந்து 13 ஆவது திருத்தச் சட்டம் இல்லாதொழிக்கப்படுமேயானால், அது மற்றுமொரு இனப் பாகுபாட்டுக்கும் இன மோதல்களுக்கும் வழிவகுக்கும்.

மாற்றுத் தீர்வுத் திட்டங்களோ இன நல்லிணக்கத்துக்கான உபாயங் களோ அரசிடம் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித் துள்ளது.

மாகாண சபைகளின் அதிகாரங்களை மீளப் பெறும் நடவடிக்கைகளையே அரசு மேற்கொள்கின்றது. நிறைவேற்று அதிகாரத்துக்குள் மேன்மேலும் மாகாண மற்றும் நகரம் போன்ற உள்ளூராட்சிக் கட்டமைப்புகளின் அதிகாரங்களும் உள்வாங்கப்படுகின்றமை நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு ஆபத்தாகி விடும் என்று அந்தக் கட்சி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து நேற்று கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப் பினருமான திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்ததாவது:

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரப் பகிர்வு இலங்கை அரசமைப்பின்13 ஆவது திருத்தச் சட்டத்திலேயே காணப்படுகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்தாது மாற்று வழிகளையும் கையாளாது திடீரென 13 ஆவது திருத்தச் சட்டத்தை அப்புறப்படுத்துவது அடிப்படைத் தன்மையற்ற விடயமாகும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வை மையப்படுத்திய தீர்வு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனையும் நிறைவேற்றாது கனவு கண்டு திடீரெனத் தூக்கத்திலிருந்து விழித்தது போன்று 13 ஆவது திருத்தச் சட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம். இதனை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டும் என்று கூறுவது முட்டாள் தனமாகும்.
அரசமைப்பில் திருத்தங்களை கொண்டுவர வேண்டுமாயின் புதிய திருத்தத்தை முன் வைக்க வேண்டும். இதுவரையில் அரசு அரசியல் தீர்வுக்கான உத்தேச தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவில்லை.

இந்த நிலையில் அரச்மைப்பில் உள்ள தீர்வையும் இல்லாதொழிக்க முயற்சிப்பது பாரிய விளைவுகளையே ஏற்படுத்தும். அது மட்டுமன்றி, தீர்வுக்காகக் காத்திருக்கும் தரப்புகளும் சந்தேகம் கொண்டு வேறு வழிகளை கையாளும் நிலையே உருவாகும்.

சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாதொழித்துப் பாரிய நெருக்கடிகளை நாடு எதிர்நோக்குகிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இன முரண்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரசு தகவல்களை வெளியிடுகின்றமை இன மோதல்களுக்கான சூழலையே ஊக்குவிக்கும் என்றார்

ad

ad