புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2012


இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேச வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரல் என்ன?இதயச்சந்திரன்
இதற்கான பதிலைத் தேடும்போது இந்தியா,சீனா,மேற்குலகு என்கிற மூன்று முக்கிய சக்திகளின் நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் 80 களின் ஆரம்பத்தில் உருவான இந்திய-அமெரிக்க ஆதிக்கப்போட்டி இற்றைவரை நீடிப்பதை அவதானிக்கலாம்.
அதேவேளை கடந்த பத்தாண்டுகளாக சீனாவில் ஏற்பட்டுள்ள துரித பொருளாதார வளர்ச்சி, மூன்றாவது சக்தியொன்றின் நேரடித்தலையீட்டினை இலங்கையில் ஏற்படுத்துவதைக் காண்கிறோம்.
மலாக்கா நீரிணைக்கு மாற்றீடாக, இந்துசமுத்திரக் கடற்பிராந்தியம் சீனாவிற்குத் தேவைப்படுவதால் இம்மாற்றம் நிகழ்கிறது.
எண்ணெய் மற்றும் கனிம பொருட்களுக்கான சீனாவின் வழங்கல் பாதையில் ,கேந்திய முக்கியத்துவம் வாய்ந்த கடல் பிராந்தியமாக இவையிரண்டும் மாறிவிட்டதையே இங்கு குறிப்பிடுகின்றேன்.
ஆகவே தவிர்க்கமுடியாமல் ,முப்பெரும் சக்திகளின் பிராந்திய நலன்கள், இலங்கையில் புதிய அரசியல் சூழலை உருவாக்குகின்றது என்பதை நோக்க வேண்டும்.
87 ல் ஏற்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தமும், 2002 ல் உருவாக்கப்பட்ட விடுதலைப்புலிகள் - அரசு சமாதான ஒப்பந்தமும், மேற்குலக இந்திய பிராந்திய ஆதிக்க முரண்பாட்டின் பக்க விளைவுகளாகும்.
சீனன்குடா எண்ணெய் சேமிப்புக் குதங்கள் சில, சிங்கப்பூர் கம்பனியால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விவகாரமும் , அதன் அடுத்த கட்டமாக திருமலை இயற்கைத் துறைமுகம் அமெரிக்காவின் கைகளுக்குச் சென்று விடுமோ என்கிற அச்சமும், புத்தளம் 'வாய்ஸ் ஒப் அமெரிக்கா' [Voice of America ] நவீனமயமாக்கப்படுகிறது என்ற இந்த மூன்று முக்கிய செய்திகளும் இலங்கை குறித்தான இந்திய நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியது .
பின்னர் போராட்ட இயக்கங்களிற்கு இந்தியா பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கியதோடு ,இறுதியில் இலங்கையோடு ஒப்பந்தம் செய்து ,அமெரிக்காவின் தந்திரோபாய நகர்வினை முறியடித்தது.
அதேவேளை விடுதலைப் புலிகளின் படைவலுவும், விடுவிக்கப்பட்ட பிரதேசங்களின் நீட்சியும், சர்வதேச அங்கீகாரத்திற்கான புலிகளின் எதிர்பார்ப்புமே, 2002 ல் நோர்வே அனுசரணையுடன் ஒப்பந்தமொன்று உருவாகிய காரணிகளாகக் கொள்ளலாம்.
இந்நிலையில் தீர்வினை எப்போதும் விரும்பாத பௌத்த சிங்கள் பேரினவாதத்தின் போக்கில் மாற்றமேற்படுகிறது.
2005ம் ஆண்டளவில் சீனாவின் தலையீடு, சிங்களத்தின் அனுசரணையுடன் இலங்கையில் அதிகரிக்கின்றது. அத்தோடு மேற்குலகால் உருவாக்கப்பட்ட சமாதான ஒப்பந்தத்தை முறியடிக்கும் வகையில், சிங்களத்தின் இராணுவ-அரசியற் செயற்பாடுகள் துரிதமடைகின்றன. அதிகார மாற்றத்திற்கு இந்தியாவும் துணை புரிகிறது.
ஏனெனில் கொழும்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் ஒவ்வொரு தருணமும் , அதனை இந்தியாவிற்கு தெரிவித்து அதன் அனுசரணையுடனேயே எல்லாவற்றையும் செய்தோமென எரிக் சொல்ஹெம் தன்னிலை விளக்கமளித்தாலும், மேற்குலகத்தார் இலங்கை அரசியலில் ஆளுமை செலுத்துவதை இந்தியா விரும்பவில்லை என்பதை, மகிந்தரின் வரவும் ஒப்பந்தக் கிழிப்பும் தெளிவாக உணர்த்துகின்றன.
ஒப்பந்தம் சிங்களத்தால் ஒருதலைப் பட்சமாக கிழித்தெறியப்பட்ட போது, இந்தியா அமைதியாக இருந்தது. அதற்கான பழியை விடுதலைப் புலிகள் மீது போட்டது மேற்குலகம். இங்குதான் மேற்குலகின் நிகழ்ச்சிநிரலில் மாற்றமேற்படுவதை அவதானிக்கலாம்.
மகிந்தர் தலைமையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் , அதற்கு மறைமுக ஆதரவளித்த இந்தியாவின் நிலைப்பாடும் ,பிராந்தியச் சூழலில் இந்தியாவை மீறிச் செல்ல முடியாத இக்கட்டான நிலையை மேற்குலகிற்கு ஏற்படுத்தியது. இந்நிலை மாற்றத்திற்கு சீனாவும் ஒரு காரணம்
இருவருக்கிடையே நிகழும் [இந்தியா-அமெரிக்கா] ஆதிக்கப் போட்டியில் மூன்றாமவர் [சீனா ]நுழைந்து கொண்டால் ,நிலைமை என்னவாகும்?.
முதல் இருவரும் தம்மிடையே இருக்கும் முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து, மூன்றாவது சக்தியை உள்நுழைய விட்டவரோடு [சிங்களம்] இணங்கிப் போவதே சரியென்று எடுக்கும் நிலை தோன்றும்.
இதுதான் 2005 ற்குப் பின்னர் , சர்வதேச வல்லரசுச் சக்திகள் இலங்கையில் எடுத்த நிலைப்பாடு.
ஆயினும் சமாதானம் பேசிய மேற்குலகும், மௌனமாக நின்ற இந்தியாவும் அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளை அழித்திட சீனாவின் படைக்கல உதவியை இலங்கை பெருமளவில் பெற்றுக்கொள்கிறது.
அதேவேளை இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவின் வருகையால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் வலுவிழந்து போவதை உணர்வதோடு, முழுமையான பொருளாதார இருதரப்பு உடன்பாடு என்கிற [CEPA] ஒப்பந்தத்தை ஜி.எல்.பீரீசினூடாக ஏற்படுத்த பெருமுயற்சி எடுத்தது. அதற்கான முயற்சியை இந்தியா இன்னமும் கைவிடவில்லை
மேற்குலகைப் பொறுத்தவரை, சிங்களத்தால் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டவுடன், தனது பிராந்திய நலனிற்கான நிகழ்ச்சிநிரலில் சிதைவு ஏற்படுவதைப் புரிந்து கொள்கிறது.
இருப்பினும் இவ்விரு சக்திகளின் பிராந்திய நலனிற்கான ஆதிக்கப் போட்டியை, சீனாவைக் கொண்டு வேறுதிசையில் திருப்பிவிட்டது சிங்களப் பேரினவாதம்.
அதாவது திருமலைத் துறைமுகத்திற்கு மாற்றீடாக , அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுகம் ஒன்றினை உருவாக்க சீனாவின் உதவியைப் பெற்று அதற்கான அடித்தளத்தை இட்டது.
சிங்கப்பூர் மற்றும் துபாய்க்கு இருக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார குவிமைய [Hub] சாதக நிலையை, இலங்கையிலும் உருவாக்க வேண்டுமென சிங்களம் திட்டமிடுவதில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது.
அதாவது,சீர்குலையும் உலகப் பொருளாதார கட்டமைப்பினை நிமிர்த்துவதற்கு, ஆசியாவின் பொருண்மிய வளர்ச்சியானது காத்திரமான பங்களிப்பினை வழங்குமென மேற்குலகு எதிர்பார்ப்பதால், கடல் வழித் தலைவாசலிலுள்ள இலங்கை இதில் முக்கிய பங்காற்றுமென சிங்களம் எடை போடுகிறது.
ஆகவே இச் சாதகமான அம்சங்கள் ,தனது முக்கியத்துவத்தை மேற்குலகிற்கும் இந்தியாவிற்கும் உணரவைக்குமெனப் புரிந்து கொள்ளும் இலங்கை அரசு, நிபந்தனைகளையும் அழுத்தங்களையும் சுமத்தாத இராஜதந்திர நிலையொன்றினை இவர்களோடு ஏற்படுத்த, சீனாவோடு உறவாடிக் கொண்டிருக்கும் தந்திரோபாயத்தை மேற்கொள்கிறது.
ஆகவே கை நழுவிச்செல்லும் தமது நலனை மீளுறுதி செய்ய, சிங்களத்தின் 'புலி அழிப்பு' என்கிற பேரினவாத வியூகத்துள் கலந்து கொள்வதைத்தவிர இவர்களுக்கு வேறுவழி தெரியவில்லை.
ஆகவேதான் சிங்களத்தை திருப்திப்படுத்தும் வகையில், ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு, தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடல், ஆயுதங்களை ஒப்படைத்தல் போன்ற விடயங்களை, இந்தியாவும் மேற்குலகும் தொடர்ந்தும் வலியுறுத்திய வண்ணமிருந்தன.
அத்தோடு, இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் பொருண்மிய -படைத்துறை ஆதிக்கத்தை முறியடிப்பதற்கே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிங்களத்தின் போரிற்கு அமெரிக்க அணியினரும், இந்தியாவும் இராஜதந்திர மற்றும் படைத்துறை உதவிகளை வழங்கின.
இதில் இம் மூன்று வல்லரசுச் சக்திகளையும் கையாண்ட விதத்தில் , தற்காலிக இராஜதந்திர வெற்றியை சிங்களம் அடைந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனாலும் இத்தகைய நகர்வுகள் ஊடாக ,சிங்களத்தோடு சேர்ந்து விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமையைத் தோற்கடிக்க உதவினால், சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் குறைவடையுமென இவர்கள் போட்ட கணிப்பீடு பிழைத்துப் போய்விட்டது.
இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் இருக்கிறது என்று கூறியவாறு சீனாவின் உதவியோடு வடக்கில் படைத்தளங்களை சிங்களம் விரிவுபடுத்து போன்று , புலிகள் மீதான தடையை நீடித்தவாறு பாக்கு நீரிணையில் ஆபத்து என்று அதே உத்தியை வேறொரு வகையில் இந்தியாவும் கையாள முயற்சிக்கின்றது .
மறுபுறத்தில் போர்க்குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என்கிற புதிய அழுத்தங்களை மேற்குலகு பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது.
அதேவேளை அங்கு நடைபெறுவது 'இனவழிப்பு' [Genocide] என்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சொல்லக்கூடாது என்பதிலும் இந்த மேற்குலகின் கருத்துருவாக்கிகள் [அலன் கீனன், எரிக் சொல்ஹெம் உட்பட] விழிப்பாக இருக்கின்றார்கள்.
இனவழிப்பு' என்பது நிறுவப்பட்டால், அது பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை தமிழ் தேசிய இனத்திற்கு அளித்து விடும் என்பதுதான் இவர்களின் கவலை. இலங்கை அரசே , போர்க்குற்ற விசாரணையை நடாத்தட்டும் என்று சொல்வதன் சூத்திரமும் அதுதான்.
சிங்களத்தின் 'தமிழின அழிப்பு' என்கிற வியூகத்தினுள் ,மேற்குலகம் வகையாக மாட்டிக் கொண்டுவிட்டது என்பதைத்தான் இவை எடுத்துக் காட்டுகின்றன. ஈழத்தமிழ் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விடயமும் இதுதான்.
உண்மையிலேயே, விடுதலைப் புலிகளல்ல இவர்களுடைய பிரச்சினை.
புலிகளின் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடே , இலங்கை விவகாரத்தில் தமது நலனிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்' என்பதுதான் இந்திய-மேற்குலக வல்லரசாளர்களின் தலையாய பிரச்சினை.
அதாவது சிங்களத்திற்கு பிடிக்காததை தமிழ் மக்கள் முன்வைத்தால், சீனாவிற்கு எதிராக தாம் முன்னெடுக்கும் நகர்வுகள் பின்னடைவை நோக்கிச் செல்லுமென இவர்கள் அச்சப்படுகின்றார்கள்.
சர்வதேச அரங்கில், பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன் வைத்து விடுமோ என்கிற அச்சத்தாலேயே, புலிகள் போன்று கூட்டமைப்பு பேசுகிறதென சிங்களம் அடிக்கடி கூறுகிறது.
அதேவேளை, விடுதலைப்புலிகள் முன்னெடுத்த தனி நாட்டிற்கான போராட்டத்தை, அவர்களுக்குப் பதிலாக தந்தை செல்வா [உயிருடன் இருந்து] அகிம்சை வழியில் நடாத்தியிருந்தாலும் அதனை இவ்வல்லரசுகள் நிச்சயம் எதிர்த்திருக்கும்.
இந்தியப் பஞ்சாயத்து, 13 வது திருத்தச் சட்டம் போன்றவற்றின் அடிப்படையில் தீர்விற்கு உடன்படுங்கள் என்று இந்தியா கூறும் அதேவேளை, மேற்குலகானது சமஷ்டி, ஒற்றையாட்சிக்குள் சுயாட்சி என்கிற தீர்விற்கான கருத்துருவங்களை அதில் நம்பிக்கையற்றுச் சொல்வதையும் காணலாம்.
தற்போது, தாயக தமிழ் அரசியல் கட்சிகளிடமும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடமும், 'இக்கோட்பாட்டைக் கைவிட்டு, ஒற்றை ஆட்சிக்குள் சிங்களத்துடன் இணக்கப்பாட்டு அரசியல் தீர்வொன்றைக் காணுங்கள்' என்றுதான் இவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.
ஏனெனில் தீர்க்கப்படாமல் நீடிக்கும் இனப்பிரச்சினை, சீனா மற்றும் மேற்குலகிற்கெதிரான அணியின் ஆதிக்கத்தை இலங்கையில் அதிகரித்துவிடும் என்கிற அச்சமே இவர்களிடம் காணப்படுகின்றது.
இவைதவிர ,ஆசியாவின் கடலாதிக்கம் அமெரிக்காவிடம் இருந்தாலும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்துசமுத்திரக் கடல் பிராந்தியத்தில் தமது கடற்படையின் வலு பலவீனமாக இருக்கிறதென இந்திய ஆய்வாளர்களான கலாநிதி சுபாஸ் கபிலா, பாஸ்கர் ராய் மற்றும் பி. இராமன் போன்றோர் எச்சரிப்பதை கவனிக்க வேண்டும்.
அதேவேளை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குதித்துள்ள குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மிட் ரொம்னியும் சீனாவுடனான நாணய யுத்தம் [ Currency War ] பற்றி எச்சரிக்கிறார்.
அத்தோடு அமெரிக்க பல் தேசியக் கம்பனிகளைக் கையகப்படுத்த முனையும் சீனாவின் நகர்விற்குத் தடை போடும் அளவிற்கு முரண்நிலை முற்றுகிறது. ஜப்பானில் நடைபெற்ற நாணய நிதியத்தின் கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவின் மத்திய வங்கித் தலைவர் மறுத்து விட்டார்.
அதுமட்டுமல்லாது தென்சீன மற்றும் கிழக்கு சீனக் கடல் பிராந்தியத் தீவுகளுக்கான ஆதிக்கப் போட்டியானது, உலக நாணய நிதியக் கட்டமைப்பிலும் உடைவுகளை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், பிரான்சிஸ் ஹரிசனின் [Still Counting the Dead] நூலைக் காவிக் கொண்டு, புலம் பெயர் நாடுகள் எங்கணும் மேற்குலகின் 'சமாதான முகம்' எரிக் சொல்ஹெம் வலம் வரப்போகிறார்.
தமிழ் மக்களின் கூட்டு மன உளவியலில் ஆழமாகப் பதிந்திருக்கும் [வட்டுக் கோட்டைத் தீர்மானத்திலிருந்து]  பிரிந்து செல்லும் பிறப்புரிமைக் கோட்பாட்டை அகற்றுவதற்கு இவர் பெரும் பாடுபடப்போகிறார்.
தேசியத் தலைவர் தவறான மனிதர் என்று காட்டுவதன் ஊடாக, இன அழிப்பிற்குத் துணைபோன தமது தவறை மறைப்பதோடு, 'நீங்கள் ஒரு தேசிய இனமல்ல, ஒரு தேசமல்ல, சுயநிர்ணய உரிமை அற்றவர்கள்' என்கிற உளவியல் பரப்புரை செய்ய அவர் வருகிறார்.
எங்களின் உதவி உங்களுக்குத் தேவையாயின், சிங்களம் எந்தவிதமான தீர்வை முன் வைக்காவிட்டாலும், நீங்கள் தனி நாடு கோரக் கூடாது என்பதைத்தான் இவர்கள் வலியுறுத்தப் போகிறார்கள்.
தலைவர், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோரின் சரணடைவினை ஏற்றுக் கொள்ள, மேற்குலகும் இந்தியாவும் தயாராக இருந்ததாக புதிதாக ஒரு கதை சொல்லி உள்ளார் எரிக் சொல்ஹெம்.
ஆகவே தமிழ் மக்களின் எதிரியாக தேசியத் தலைவரை காட்ட இவர்கள் மேற்கொள்ளும் பரப்புரைகள், சிங்களம் தருவதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதில் முடிவடையும்.
மக்களின் அரசியல் அபிலாசை, முள்ளிவாய்க்காலிலும் முற்றுப் பெறவில்லையே என்பதுதான் இவர்களின் பெரும் கவலை.
இருப்பினும் இலங்கையில் வல்லரசுகள் போடும் ஆட்டம், எமக்கான கதவுகளை திறக்க ஆரம்பித்துள்ளது.
ஆகவே இவர்களிடையே அதிகரிக்கும் முரண்பாடுகளை தணிக்கும் கருவிகளாக, ஈழத்தமிழ் மக்கள் மாற வேண்டிய தேவை இல்லை.
எமக்கான தீர்வை இவர்கள் தீர்மானிக்கவே தென்னாபிரிக்கா, நோர்வே போன்ற நாடுகள் ஊடாக வருகின்றார்கள்.
ஐ.நா.சபை மூலம் சிங்களத்தின் மீது பாரிய அழுத்தங்களை கொடுத்து, சுயாட்சித் தீர்வொன்றினை இந்த மேற்குலகமும் இந்தியாவும் இணைந்து பெற்றுத் தருமென்று யாராவது கற்பிதம் கொண்டால், அது அவர்களின் புவிசார் அரசியல் குறித்த தவறான நிலைப்பாட்டினால் வந்த நம்பிக்கையென்று திடமாகக் கூறலாம்.
இது குறித்த விரிவான கட்டுரை, பல தகவல்களோடு விரைவில் வரும்.

ad

ad