புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2012


புலிகளைப் பற்றி தெரியாமலேயே சாட்சி சொல்ல வந்தீர்களா? உளவுத்துறை அதிகாரியிடம் சீறிய வைகோ
[விகடன் ]
புலிகள் அமைப்பை முற்றாக அழித்து விட்டோம் என்று, இலங்கை அரசாங்கம் ஆண்டுதோறும் வெற்றி விழாக் கொண்டாட்டங்களை நடத்த... இந்திய அரசாங்கமோ இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, புலிகள் அமைப்பைத் தடை செய்வதையே பெரிய சாதனையாகச் செய்து வருகிறது.
 'இல்லாத அமைப்புக்கு எதற்குத் தடை?’ என்று, ஈழ ஆதர வாளர்கள் கொந்தளிப்பு காட்டினாலும், அதை மத்திய அரசு கண்டுகொள்வதாகவும் தெரியவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக, இந்திய அரசு கடந்த 1991-ம் ஆண்டு அறிவித்தது. அப்போது விதிக்கப்பட்ட இந்தத் தடையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசீலித்து, மத்திய அரசு நீட்டித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் கூடும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கருத்துக் கேட்பு விசாரணையை நடத்தும். கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை சென்னையில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் இந்தத் தீர்ப்பாயம் கூடியது.
உச்ச நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெயின் தீர்ப்பாயத்தின் நீதிபதி பொறுப்பை ஏற்றிருந்தார். மத்திய அரசு சார்பில் மத்திய உள் துறை அமைச்சகத்தின் உளவுத் துறை இயக்குனர் ரமேஷ்குமார் சுமனும், தமிழக அரசு சார்பில் க்யூ பிரிவு எஸ்.பி. சம்பத்குமாரும் ஆஜரானர்கள். விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்கக் கோரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், சிறைக் கைதிகள் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனும் ஆஜராகி தங்களது வாதத்தை எடுத்து வைத்தனர். 
உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறை இயக்குனர் ரமேஷ்குமார் சுமன், புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்கி ஒரு மனுவைத் தாக்கல் செய்​தார். அத்துடன், சீல் போட்ட ஐந்து கவர்களில் முக்கிய ஆதாரங்களை நீதி பதி​யிடம் ஒப்படைத்தார். அந்தக் கவர்களில் புலிகள் அமைப்பின் சட்ட விரோ​தக் காரியங்களுக்கான ஆதா​ரங்கள் இருந்ததாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது.
இதையடுத்து எழுந்த வைகோ, உளவுத் துறை இயக்குனரைக் குறுக்கு விசாரணை செய்ய நீதிபதியிடம் அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி மறுத்த நீதிபதி, ''நீங்கள் கேள்விகள் கேட்க வேண்டும் என்றால், அதை என் மூலமாக உளவுத் துறை இயக்குனரிடம் கேட்கலாம்'' என்றார்.
அதன்பிறகு, நீதிபதி வழியாக உள​வுத் துறை இயக்குனர் சுமனிடம் வைகோ சரமாரியாக கேள்வி​களைக் கேட்டார். 'கடந்த 24 மாதங்களில் விடுதலைப் புலிகள் மீது ஏதேனும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா?செய்யப்​பட்டுள்ளது என்றால், எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்​ளன?’ என்று வைகோ கேள்வி எழுப்பினார். வழக்குப் பதிவு விவரங்களை சுமன் சொன்னார்.
'விடுதலைப் புலிகள் மாவோ​யிஸ்​ட்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முயன்றார்கள் என்று குற்றம் சாட்டி உள்ளீர்கள். அதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்? அது தொடர்பாக ஏதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் என்று எத்தனை அமைப்புகளை பட்டியல் இட்டுள்ளீர்கள்? அந்த அமைப்புகள் மீது  ஏதேனும் வழக்குகள் போடப்பட்டுள்ளதா?’ என்று வைகோ எழுப்பிய கேள்விகளுக்கு உளவுத் துறை  சுமன் பதில் சொல்லவில்லை. இதனால், கொதிப்படைந்த வைகோ, 'நீங்கள் விடுதலைப்புலிகள் பற்றியும், அந்த அமைப்பின் இப்போதைய நிலை பற்றியும் எதையுமே தெரிந்து கொள்ளாமல் இங்கு சாட்சி சொல்ல வந்துள்ளீர்கள்’ என்று குற்றம் சாட்டி அமர்ந்தார்.
இதையடுத்து, சிறைக்கைதிகள் பாதுகாப்பு மையம் சார்பில், அதன் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதிட்டார். அவருடைய வாதத்தில், 'விடுதலைப்புலிகள் என்றும், புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டு, தமிழகச் சிறைகளிலும் அகதிகள் முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பாயத்தின் நோக்கம் நீதியை நிலை​நாட்டுவது என்றால், அவர்களையும் விசாரிக்க வேண்டும். அவர்கள் கருத்தையும் பதிவுசெய்ய வேண்டும். அவர்கள் அளிக்கும் விளக்கத்தையும் இந்தத் தீர்ப்பாயம் கேட்க வேண்டும். எனவே, இந்த விசாரணையில் பங்கேற்க அவர்களுக்கும் வாய்ப்புத் தரப்பட வேண்டும்'' என்றார். இதைக் கவனமாகக் குறித்துக்கொண்ட நீதிபதி, விசாரணையை மறு நாளுக்கு ஒத்திவைத்தார்.
இரண்டாவது நாள் கூடிய தீர்ப்பாயத்தின் முன், தமிழக க்யூ பிராஞ்ச் எஸ்.பி.சம்பத் குமார் ஆஜராகி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், விடுதலைப் புலிகள் தமிழகத்தையும் ஈழத்தோடு இணைக்கத் திட்டம் வைத்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார். அவரைக் குறுக்கு விசாரணை செய்த வைகோ, 'எந்த அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டை புலிகள் மீது சுமத்துகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த சம்பத் குமார், 'புலிகளின் அரசியல் பிரிவான மக்கள் முன்னணி என்ற அமைப்பு நடத்தும் இணையதளத்தில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன’ என்று பதில் அளித்தார். அப்போது குறுக்கிட்ட வைகோ, ''மக்கள் முன்னணி 1991-ம் ஆண்டே செயல் இழந்து விட்டது. எனவே, அந்த இணையதளத்தைப் பொருட்படுத்த அவசியம் இல்லை’ என்றார். இதற்குப் பதில் அளித்த சம்பத், 'இப்போதுவரை அந்த இணையதளம் செயல்பாட்டில்தான் உள்ளது’ என்றார். 'இதுபோன்ற விசாரணைகளால் எந்தப் பயனும் இல்லை’ என்ற கருத்தை வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன் வைத்தார். அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 20, 21 தேதிகளில் கொடைக்கானலில் நடக்க இருக்கிறது.
விடுதலைப் புலிகள் மீதான சர்ச்சைகள் இன்னும் இந்தியாவில் தீர்ந்தபாடில்லை!

ad

ad