புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2012

லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு ஆஸி.க்கு பதிலடி கொடுக்குமா மேற்கிந்திய அணி: 2-வது அரைஇறுதியில் இன்று மோதல்
 
இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 2ஆவது அரைஇறுதியில் அவஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்து வரும் 4ஆவது இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில், கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 2 ஆவது அரைஇறுதியில் அவுஸ்திரேலியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

சூப்பர்-8 சுற்றில் இந்தியா, தென்னாபிரிக்காவை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் ஒட்டுமொத்தமாக கவிழ்ந்து போனார்கள். இதனால் சுழற்பந்து வீச்சை சமாளிப்பதில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

எதிர்பார்ப்பு இல்லாத அணியாக இந்த உலகக் கிண்ணத்துக்கு வந்த அவுஸ்திரேலியா மீண்டும் பழைய நிலைக்கு உயர வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த அணிக்கு சகலதுறை வீரர் ஷேன் வொட்சன் தான் உயிர்நாடியாக இருந்து வருகிறார். இதுவரை 242 ஓட்டங்களுடன் 11 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் அவர் சொற்ப ஓட்டங்களுடன் வீழ்ந்தார். அந்த அணியும் தோற்றுப் போனது. பெரிய சுமையைத் தனது தோளில் சுமக்கும் வொட்சன், முக்கியமான இந்த ஆட்டத்தில் கணிசமான பங்களிப்பை அளிக்கும் ஆர்வத்தில் உள்ளார்.

அவரைத் தவிர அந்த அணியில் மைக் ஹஸ்ஸி, டேவிட் வோர்னர் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் விளையாடி வருகிறார்கள். மற்றவர்களும் ஒருங்கிணைந்து விளையாடினால், மட்டுமே மேற்கிந்திய அணியை சமாளிக்க முடியும்.

அவுஸ்திரேலியாவுக்கு வொட்சன் என்றால், மேற்கிந்திய அணியில் கிறிஸ் கெய்ல் மிரட்டுகிறார். அவரைப் போன்று தொடக்க ஆட்டக்காரராக களம் காணும் கெய்ல், எந்தவிதமான பந்து வீச்சையும் துவம்சம் செய்யும் வல்லமை படைத்தவர். இந்தத் தொடரில் 10 சிக்சருடன், 2 அரைச்சதமும் விளாசியுள்ள அவர் தான் மேற்கிந்திய அணியின் ஆணிவேராகத் தாங்கி நிற்கிறார். அத்துடன் சாமுவேல்ஸ், வெய்ன் பிராவோ ஆகியோரும் ஓரளவு நன்றாக ஆடுகிறார்கள்.

இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் சுனில் நரின், பத்ரீ மீது அந்த அணியின் தலைவர் டெரன் நிறைய நம்பிக்கை வைத்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஜோர்ஜ் பெய்லி கூறுகையில், மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்ட வரிசை வலுவாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கெய்லை சீக்கிரம் வெளியேற்றுவதில் கவனம் செலுத்துவோம். ஏனெனில் அவர் நிலைத்து நின்று விட்டால் வெற்றி பெறுவது கடினம். அவர் விரைவில் ஆட்டம் இழந்து விட்டால், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் நெருக்கடிக்குள்ளாவார்கள். எங்கள் அணியில் அனேகமாக ஒரே ஒரு மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது. கிளைன் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக டேவிட் ஹஸ்ஸி சேர்க்கப்படலாம்.' என்றார்.

மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவர் டேரன் செமி அளித்த பேட்டியில், மேற்கிந்திய தீவுகளை விட்டு புறப்படும் போது, எங்களது ரசிகர்களுக்காக இந்த உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பதே எங்களது மனதில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகள் மேற்கிந்திய அணிக்கு கடினமான காலகட்டமாகவே இருந்து வருகிறது. இந்த சமயத்தில் நாங்கள் பெரிய அளவில் வெற்றி ஏதும் பெறவில்லை. கடைசியாக 2004 ஆம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றிருந்தோம். அது போன்று பெரிய போட்டியில் கிண்ணத்தை வெல்ல இது எங்களுக்கு பொன்னான வாய்ப்பாகும்.

ஒலிம்பிக்கில், மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் தடகளத்தில் பதக்கங்கள் வென்று, ரசிகர்களை உற்சாகத்தில் திழைக்க வைத்தனர். அதன் பிறகு எங்களது ரசிகர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வர எங்களுக்கு இது ஒரு வாய்ப்பாகும்' என்றார்.

மேலும் செமி கூறும் போது, எங்கள் அணியின் வெற்றிக்கு கெய்ல் மட்டும் காரணமல்ல. தொடக்க வரிசையில் அவர் நல்ல உத்வேகம் அமைத்துக் கொடுக்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அணி வெற்றி பெற, ஒட்டுமொத்த கூட்டு முயற்சியும் தேவை' என்றார்.

லீக் சுற்றில் அவுஸ்திரேலியாவும், மேற்கிந்திய தீவுகளும் ஒரே பிரிவில் (பி) இடம் பெற்றிருந்தன. லீக் சுற்றில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 191 ஓட்டங்கள் குவித்த போதிலும் மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணி தோற்றிருந்தது. அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் மேற்கிந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் போட்டியில் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 5 இல் அவுஸ்திரேலியாவும், 3 இல் மேற்கிந்திய தீவுகளும் வெற்றி கண்டன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

அவுஸ்திரேலியா: வொட்சன், டேவிட் வோர்னர், மைக் ஹஸ்ஸி, ஜோர்ஜ் பெய்லி (அணித் தலைவர்), கெமரூன் ஒயிட், டேவிட் ஹஸ்ஸி அல்லது மேக்ஸ்வெல், மேத்யூ வேட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், பிராட் ஹாக், டோஹர்த்தி.

மேற்கிந்திய தீவுகள்: கிறிஸ் கெய்ல், சார்லஸ், சாமுவேல்ஸ், வெய்ன் பிராவோ, பொல்லார்ட், ஆந்த்ரே ரஸ்செல், டேரன் செமி (அணித் தலைவர்), ராம்டின், ராம்பால், சுனில் நரேயன், பத்ரீ.

ad

ad