புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2012


அற்பசலுகைகள் அல்ல கிளிநொச்சியின் நீண்டகால இருப்புத்தான் அவசியம்: கொழும்பு றோயல் கல்லூரி பிரதி முதல்வர் மா.கணபதிப்பிள்ளை
கிளிநொச்சியின் ஆதரவற்ற சிறார்களின் அடைக்கல தாயாக இருக்ககூடிய குருகுலம் சைவ சிறார் இல்லத்தின் நிறுவுநரான குருகுலபிதா கதிரவேலு அப்புஜியின் ஜனன தினநிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
நிகழ்விற்கு கரைச்சி பிரதேச சபையின் தலைவர் நா.வை.குகராசா தலைமை தாங்கினார். அப்புஜியின்
படத்திற்கு மலர்மாலை அணிவிக்கபட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டு குருகுலத்தின் வாழ்வோடும் தொடர்புபட்டவர்களும் மற்றும் சமுக அபிமானிகளும் அங்கு கருத்துரைகளை வழங்கினர்.
பா.உறுப்பினரும் குருகுலத்தின் பழைய மாணவனுமான சி.சிறீதரன், முன்னாள் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா, முன்னாள் அரசாங்க அதிபர் தி. ராசநாயகம், கரித்தாஸ் கியூடெக் பணிப்பாளர் யாவீஸ் அடிகளார் உட்பட பலரும் குருகுலத்தின் பிதா கதிரவேலு அப்புஜியின் சமூகப் பெறுமதி தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும், கிளிநொச்சியின் மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன், கமக்கார அமைப்புகளின் சமாசத் தலைவர் சிவப்பிரகாசம் முன்னாள் உதவி கல்விப்பாளர் தர்மரட்ணம் உட்பட புத்திஜீவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பாக இடம்பெற்ற நினைவுப் பேருரையை கொழும்பு றோயல் கல்லூரியின் பிரதி முதல்வர் மா.கணபதிப்பிள்ளை இரணைமடுவும் கிளிநொச்சியின் எதிர்காலமும் என்ற தலைப்பில் ஆற்றினார்.
அவர் தனதுரையில், வட இலங்கையில் பாய்ந்தோடும் கனகராயன் ஆற்றை மறித்து பொருத்தமானதொரு இடத்தில் முப்பத்தொரு அடி அணைக்கட்டைக்கட்டி “இரணைமடு” க்குளத்தை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக இருந்த ‘வில்லியம் துவைம்’ அவர்களின் காலத்தில் உருவாக்கினார்கள். இக்குளம் உருவாக்கப்பட்ட பின் இக்குளத்திற்கு அண்மையில் உள்ள நிலப்பிரதேசத்தில் குடியேற்றங்களை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது.
அவ்வடிப்படையில் 1950 களைத் தொடர்ந்து எமது நாட்டின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா அவர்களின் ஆலோசனையின் பேரில் பல குடியேற்றங்கள் கொடுக்கப்பட்டது.
இவ்வடிப்படையில் யாழ்ப்பாணத்திலுள்ள பதின்மூன்று D.R.O பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பொதுமக்கள் இக்குளத்தை அண்மித்த வெவ்வேறு குடியேற்றங்களில் குடியமர்த்தப்பட்டனர். கணேசபுரம், உருத்திரபுரம், முரசுமோட்டை, பரந்தன், தருமபுரம், வட்டக்கச்சி, இராமநாதபுரம், ஊரியான், கண்டாவளைக் கிராமங்கள் இவ்வாறுதான் உருவானது.
இரணைமடுக் குளத்து நீரை சரியாகத் திட்டமிட்டு, மேலே குறிப்பிட்ட கிராமங்களில் காலபோகம், சிறுபோகம் என்று இரண்டு போகங்கள் முறைப்படி நெல்விளைச்சல் செய்யப்பட்டது. முறைப்படி நீர்ப்பாசனத்திட்டமிடல் நடைபெற்றதால் இங்குள்ள மக்கள் பிரச்சினையில்லாமல் இரண்டு போகமும் நெற்செய்கையில் ஈடுபட்;டனர். அதுவே அவர்களின் ஜீவனோபாயமாகவும் இருந்தது.
இக்குளத்துக்காக நியமிக்கப்பட்ட பொறியியலாளர்கள் குளத்து நீர்மட்டம், நீர்ப்பாசனம் செய்யக்கூடிய நிலப்பரப்பு ஆகியவற்றைச் சரியாகத் திட்டமிட்டு சிறுபோகத்தில் எத்தனை ஏக்கர் காணியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படலாம் என்றெல்லாம் தீர்மானிப்பார்கள். அந்தச் செயற்பாட்டால் நெற்செய்கையாளர்களும் பயன்பட்டனர்.
அண்மையில் இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நீர்வழங்கல் தொடர்பாகப் பலர் பேசினார்கள். பாராளுமன்றத்திலும் அலசி ஆராயப்பட்டது. பொருத்தமற்றவர்கள் பொருத்தமற்ற பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இதுவரைகாலமும் யாழ்ப்பாணத்து மக்கள் குடிநீர் இல்லாமலா இருந்தனர்? யாழ். குடாநாட்டில் 11 லட்சம் மக்கள் இருந்த காலத்தில் இல்லாத பிரச்சினை 05 லட்சம் மக்கள் மட்டுமுள்ள இன்றைய நிலையில் ஏன் உருவானது.
பண்டை பெருமைமிகு கல்வியாளர்களினதும், பேராசிரியர் ஜோர்ச். தம்பையாபிள்ளை போன்றோரினதும் “புவிக்கீழ் நீரும் யாழ்ப்பாண மக்களின் வாழ்வும்” பற்றி எழுதிய கட்டுரைகளில் எல்லாம் யாழ்ப்பாணத்து மக்களைப் பொறுத்தவரை இலங்கையில் எப்பிராந்தியத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் அவர்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத தனியியல்புண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுண்ணாம்புப் பாறைகளும், “பேசின்” முறையில் தண்ணீர் நிலைகளும், கிணறுகளும் என்றும் அவர்களின் வளமாக இருக்கும். இவைபற்றி ஆராய்ந்து அந்நீரை எவ்வாறு முறைப்படி வழங்கலாம், செம்மையாக்கலாம் என்று ஆராயாமல் “யாரோ” ஏதோ சொல்கிறார்கள் என்பதற்காக கானமயிலாட ஆடும் வான்கோழிகளாக மாறாதீர்கள் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
நிலாவரைக்கிணறு போன்ற என்றும் வற்றாத நீரூற்றுக்கள் பற்றி ஆய்வு செய்யுங்கள். கடல்நீரை நன்னீராக்கி எவ்வாறு வழங்கலாம் என்பது பற்றி ஆராயுங்கள். தரைக்கீழ் நீர்க்கிணறுகளை முறையாகப் பயன்படுத்தும் முறைகளை ஆராயுங்கள். அதனால் குடாநாடு முழுவதும் எளிதில் நீர்வழங்கும் முறைகளைச் சிந்தியுங்கள். நடக்கக்கூடியதை விட்டு நடக்க முடியாதவற்றைப் பற்றி சொல்லி நீங்களும் ஏமாந்து மக்களையும் ஏமாற்றாதீர்கள் என்பது எமது கோரிக்கை.
இந்த ஆண்டு சிறுபோகச் செய்கைக் காலத்தில் முறைப்படி இரணைமடு நீர்ப்பாசனம் திட்டமிடப்படாத காரணத்தால் மூவாயிரம் (3000) ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்புப் பயிர்ச்செய்கை பாதிப்பிற்குள்ளானது. விளைந்து நெல் “பால்” பிடிக்கும் பருவத்தில் தண்ணீர் இல்லாததால் எரிந்து நாசமாகியது. வறிய விவாயிகள் கண்ணீருடன் காணப்படுகின்றார்கள்.
இரணைமடுக் குளத்தின் கட்டும் ஸ்திரத்தன்மையுடன் காணப்படவில்லை. அதில் பல இடங்களில் கசிவுகள் காணப்படுகின்றன. எனவே கட்டளவு உயரத்திற்கு நீரைச் சேமித்து வைக்க முடியாத நிலையுள்ளது. மறுபக்கம் முன்பிருந்த பொறியியலாளர்கள் பயிர்ச்செய்கைக்கும், மிருக வளர்ப்பிற்குமென நீர்த்திட்டமிடல் மேற்கொள்வார்கள். ஆனால் இவ்வாண்டு அத்திட்டமிடல் மேற்கொள்ளப்படவில்லை.
கிளிநொச்சிக் குளத்தின் ஐந்தடி இறக்கப் பகுதியில் ஒரு பாலம் கட்டித் திறக்கப்பட்டது. உண்மையில் இப்பணி பாராட்டப்படவேண்டியது. வட்டக்கச்சி, இராமநாதபுரம், திருவையாறு மக்களின் நீண்டகாலப் பிரயாணக் கஷ்டம் ஒன்றுக்கான தீர்வாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.
இத்தகைய நடவடிக்கை எடுத்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஆனால் இப்பாலம் திறக்கப்பட்ட நிகழ்வு போன்றவற்றுக்காக இரணைமடுக் குளத்து நீர் வீணாண காலப்பகுதியில் திறந்துவிடப்பட்டமை போன்ற காரணங்களால் இரணைமடுக் குளத்தில் நீர் வற்றிப்போக பல ஏக்கர் விளைநிலம் வீணாகிப் போனது. இரணைமடுக் குளத்தின் மேற்பகுதியில் விமான ஓடுபாதை, தென்பகுதியில் குடியேற்றம் போன்ற திட்டங்களால் குளத்தில் 28 அடிவரை கூட நீரைத் தேக்கமுடியவில்லை என்ற குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
1970 - 1980 காலப்பகுதியில் இக்குளத்தின் பொறியியலாளர்களாக இருந்தவர்கள் இக்குளக்கட்டின் மேலாய் கனரக வாகனங்களையெல்லாம் ஓட அனுமதிப்பது கூட இல்லை. இரணைமடு கனகாம்பிகை அம்மனுக்கு வழிபாடு நடாத்தி, சூரிய வணக்கம் செய்து குளம் திறக்கும் முறைமைகள் இருந்தன. இன்று இரணைமடு குளக்கட்டு ஒரு பாதையாகிவிட்டது. ஏற்கனவே உருக்குலைந்து ஆட்டங்கண்டிருக்கும் அணைக்கட்டு மிகவிரைவில் நாசமாகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.
இக்குளத்தை நம்பிக் குடியேறிய யாழ். பிராந்திய மக்கள் அநாதரவாகும் நிலையொன்றுக்கு எச்சரிக்கப்பட வேண்டிய காலம் இது. அரசியலாளர்களின் தீர்க்க தரிசனமற்ற கோரிக்கைகளுக்கு அனுமதியளிக்காது, உங்கள் இருப்பைப் பாதுகாக்க வேண்டும்.
இன்று இருக்கும் இரணைமடுக்குள வசதிகள் கிளிநொச்சி மக்களுக்குத் தொடர்ந்து கிடைக்காது விட்டால் இரண்டுபோக நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடுதல் பாரிய கஷ்டமாகலாம். மேலும் மிருக வளர்ப்பிற்காக திறந்துவிடப்படும் நீர்கூட இவ்வாண்டு முறைப்படி திறந்துவிடப்படவில்லை. இந்த முறையும் தொடரலாம்.
யாழ்ப்பாணத்துக்கு நீரைக் கொண்டுபோக வேண்டும் என்பதற்காக இரணைமடுக் குளத்தையே நம்பி கடந்த ஒரு யுகமாக (60 ஆண்டுகள்) வாழ்க்கை நடாத்தும் மக்களை நட்டாற்றில் விடமுடியாது. அதற்காக கிளிநொச்சி மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படல் வேண்டும். இருக்கும் முறையைச் சீர்குலைத்தல் எல்லோருக்கும் இயலக்கூடியது.
சீர்குலைத்தவற்றைச் சீர்செய்வதுதான் கஷ்டமாகும். எமது கலாசார விழுமியங்களுடன் கட்டிவளர்த்த இரணைமடுக் குளத்தையும் அதன் அயற்பிரதேசங்களையும் கட்டிக்காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு கிளிநொச்சிக் குடிமகனின் கடமையுமாகும். எமக்கென்ன என்று இருப்பின் நாளை நமக்கென்று ஒரு இடமும் இருக்காது என்பதையும் மனத்திடை கொள்ள வேண்டும்.
ஒரு யுகமாக எம் முன்னையர் காடழித்து, களனியாக்கிய எமது பிரதேசம் மீண்டும் கட்டாந்தரைகளாக மாறும் அபாயம் உங்கள் கண் முன்னே நடந்தேறுகின்றது. பேசாமடந்தைகளாக கட்சிகட்டிக்கொண்டு இருக்காது எல்லோரும் உங்கள் தனிப்பட்ட குரோதங்களை மறந்து எமது பிரதேச நீர்ப்பாசனத்தில் அக்கறையுடன் செயற்படல் வேண்டும்.
பொருத்தமான தீர்மானத்தை பொருத்தமான காலத்தில் எடுக்காது காலம் தாழ்த்தி எடுக்கும் தீர்மானங்கள் எமது இருப்பிற்கு அச்சுறுத்தலாகவே அமையலாம். பொருத்தமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாது அவசரமாக யாழ்ப்பாணம் நீர் கொண்டுசெல்லும் திட்டம் பொருத்தமற்றது. கிளிநொச்சி மக்களின் இரண்டுபோக வேளாண்மைக்கும், மிருகவளர்ப்பிற்கும் நீர் வழங்க வேண்டும். அதற்கே போதாத நீர்வளமுள்ள இரணைமடுக் குளத்து நீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்லல் என்பது வீண்பிடிவாதமே அன்றி பொருத்தமுள்ள தீர்க்கதரிசன நடவடிக்கையல்ல.
கிளிநொச்சி வாழ் மக்களே, சகல கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்து உங்கள் எதிர்கால இருப்பிற்காக குரல் கொடுக்கும் நேரம் இது என்பதை கவனத்தில் எடுங்கள். அற்ப சலுகைகள் அல்ல எமது நீண்டகால இருப்பு அத்தியாவசியம் என்பதைப் புரிந்து செயற்படுங்கள் என்றார்.

ad

ad