புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2012



வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தின் இரண்டு முன்னாள் பெண்போராளிகள் தமது எதிர்ப்பை குளோபல் தமிழ் செய்திகள் ஊடாக தெரிவிக்கின்றனர்
நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!’ ஒரு முன்னாள் பெண்புலியின் வாக்குமூலம் என்று ஒரு நேர்காணலை வெளியிட்டிருந்தது தமிழகத்தின் பிரபல வெகுசன வார இதழான ஆனந்தவிகடன். அந்த நேர்காணலை ஒரு புனைவு என்றும் அது ஈ
ழப்போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பெண் போராளிகளை கொச்சைப்படுத்துகிறது என்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புக்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தின் இரண்டு முன்னாள் பெண்போராளிகள் தமது எதிர்ப்பை குளோபல் தமிழ் செய்திகள் ஊடாக தெரிவிக்கின்றனர்.
ஆண்டுகள் இத்தனை கடந்தும் ஆறாத நினைவுகளால் வெந்துகொண்டிருக்கும் உள்ளங்களில் வேல்பாய்ச்சும் விகடனின் வேலையை நினைத்தால் மிகுந்த வேதனையாய் இருக்கிறது. பெண்போராளிகள் இந்த விகடனுக்கு அப்படியென்ன தீங்கிழைத்தார்கள் என்று விகடன் இப்படிபெண்களின் வாழ்க்கையில் விளையாடத் துடிக்கிறது? என்பதுதான் எங்களுடைய கேள்வி.
விகடனில் வந்த பெண்போராளி பற்றிய பேட்டிவிகடனின் கற்பனை என்பது அதன் எழுத்து நடையிலேயே புரிந்தாலும் அதற்கு நாங்களா கிடைத்தோம்? என்று சினக்க வைக்கிறது. ஆனந்தவிகடனை விருப்பத்தோடு தேடிப்படிக்கும் பல்லாயிரக்கணக்கான போராளிகளுக்கு விகடன் செய்தவேலை மிகவும் கேவலமானது.
வாழ்க்கையில் ஆயிரம் சவால்களை சந்தித்தாலும் சொந்தக் கால்களில் தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்கப் போராடும் முன்னாள் பெண் போராளிகளுக்கு விகடன் காட்டியிருக்கும் வேலை அபத்தமானது, அபாண்டமானது. கேவலம் பெண்போராளிகளது வாழ்க்கையை அல்லவா கேவலப்படுத்த முனைந்திருக்கிறார்கள்.
முன்பும் நாங்கள் பம்பைமடு தடுப்புமுகாமில் இருந்தநாட்களில், 2010 காலப்பகுதியல் என்று நினைக்கிறேன், விகடனின் கட்டுரை ஒன்று எங்களின் மனங்களில் தணலைக் கொட்டியது. பம்பைமடுமுகாமில் இருக்கும் பெண்போராளிகள் படையினரால் பாலியல்ரீதியாக உபயோகப்படுத்தப்படுவதாக பக்கம் பக்கமாய் எழுதியிருந்தது விகடன்.
இல்லாத ஒன்றை எழுதியதால் கொதிக்கவில்லை. எங்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய விகடனின் அக்கறை இவ்வளவுதானா? என்ற வேதனையில் துடித்தோம். அதைப் படித்த ஒவ்வொரு பெண்ணும் தனதும் தன் தோழிகளதும் எதிர்காலம் குறித்து கண்ணீர் விட்டோம். விகடன் எதற்காக வீண்பழி சுமத்துகிறது. எங்களது எதிர்காலத்தையும் அல்லவா கேள்விக்குறியாக்குகிற துவிகடன் என்று வருந்தினோம்.
இதோ இப்போது மேலும் அசிங்கமாய் எங்களை விமர்சித்திருக்கிறது. இது ஒட்டுமொத்த போராளிகளையும் களங்கப்படுத்தி நோவடித்திருக்கிறது.
கேவலம் வயிறுவளர்ப்பதற்காக ஒருபோராளி உடலை விற்கிறாள் என்றுசொல்லும் விகடனின் முகத்தில் இந்தப் பிரசுரம் ஒருமாறாத கறை. வாழ்வின் முழுநாட்களும் இடப்பெயர்வுகளையும் வலியையும் வேதனையையும் காயங்களையும் இழப்புகளையும் கண்ணீரையும் சவால்களையும் எதிர்கொண்டபடி வாழ்க்கையில் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கும் என் போன்ற முன்னாள் போராளிகளுக்கு விகடன் செய்த துரோகத்தை ஒரு பொழுதும் மன்னிக்க முடியாது.
முன்னாள் போராளியான நானும் சொல்கிறேன். யாரிடமும் கருணைதேடியோ பரிதாபம் ஈனவோ இதை நான் எழுதவில்லை. ஈழத்தின் நிலை இதுதானடா விகடா என்று சொல்வதற்கத்தான் எழுதுகிறேன். இல்லாத கற்பனைகளில் மிதக்கும் விகடன் போன்றவர்களுக்கு ஒன்றைமட்டும் சொல்கிறேன், தயவு செய்து எங்கோ இருந்து கொண்டு எங்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.
ஈழத்து நிலத்தில் இன்னமும் காயாதவீரமும் ஈகமும் வாழ்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தன் நிழல்களை இழந்தபின்னும் கொதிக்கும் அகோர வெய்யிலில் தன்மானத்தோடும் தலை நிமிர்ந்தும்தான் நடக்கிறாள். அப்பாவை இழந்த பிள்ளைகளை அறிவில் சிறந்தவர்களாகவும் சமூகத்தில் உயர்ந்தவர்களாகவும் ஆக்கிக் காட்டுகின்ற அம்மாக்களான முன்னாள் பெண் போராளிகளின் தைரியத்தின்முன் இல்லாத பெயரில் கட்டுரை வெளியிட்டிருக்கும் விகடனின் எழுத்துவெறுந் தூசு.
படையினரையும் அமைச்சர்களையும் தமிழ் வயோதிபர்களையும் தமிழ் மாணவர்களையும் சிங்கள யாத்திரீகர்களையும் குற்றம்குறை சொல்வதற்கு அருளினியனுக்கும் ஆனந்தவிகடனுக்கும் ஆசையென்றால் அதற்கு முன்னாள் போராளிகள்தான் பலிக்கடாவா? அதற்கு எங்கள் ஆன்மாவை விற்பார்களா?
ஒரு மூத்த போராளி இப்படியான நிலைக்கு எந்த தருணத்திலும் இடமளிக்க மாட்டாள் என்பதையும் நாங்கள் எப்படி நிரூபிப்பது? இது ஒவ்வொரு பெண்போராளிகளையும் களங்கப்படுத்தும் நிலையை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொரு பெண்போராளிகளது நெஞ்சும் குமுறுகிறது. இன்றைய காலத்தில் நாங்கள் எப்படி எங்களை நிரூபிப்பது? உயிர்கொண்டு நாங்கள் நடத்திய போராட்டத்தை போராடிய எங்களை உங்கள் பரபரப்பிற்காகவும் வியாபாரத்திற்காகவும் விற்பனை செய்யாதீர்கள்.
- வெற்றிச்செல்வி, முன்னாள் போராளி, தமிழீழ விடுதலைப் புலிகள்
இரண்டாயிரம் பெண்கள் விட்ட கண்ணீர்
விகடனில் வந்த செய்தியால் மனம் கொதித்தது. இற்றைக்கு மூன்று வருடங்களிற்கு முன்பு பம்பைமடு பெண்கள் முகாமில் நான்னிருந்தபோது அப்போது வெளியான விகடனில் வெளிவந்த உண்மைக்கு பிறம்பான செய்தியால் நாம் வெந்து துடித்த நாட்கள் மீண்டும் நினைவுக்கு வந்தது. இன்று இறுதியுத்தத்தின் பின்னர் சரணடைந்த பெண் போராளிகளில் கனிசமான அதாவது இரணடாயிரம் பெயர்வரை பம்பைமடு பல்கழைக்கழக விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். வெளித் தொடர்புகள் எதுவுமற்று முடக்கி வைக்கப்பட்ட நாட்கள் அவை. ஒரு மாதத்திற்கு ஒரு தடவை பெற்றவர்களை மட்டும் கூடியது பத்தே நிமிடங்கள் மட்டும் சந்திக்க அனுமதிக்கப்பட்டோம்.
அந்த நாட்களில் வந்த நண்பி ஒருவரின் தந்தை கண்கள் பனிக்க உள்ளம் கதற விகடனில் ‘பம்பை மடு பெண்கள் முகாமில் பாலியல் வதைகள்’ நடைபெறுவதாக செய்தி வந்திருப்பதாக சொன்னார். எம்மால் உடனடியாக நம்பிவிட முடியவில்லை ஏனெனில் எம்மில் அனேகருக்கு விகடனில் நம்பிகையிருந்தது. உண்மைக்கு பிறம்பான கருத்துக்கள் வெளிவராது என்பது தான் .ஆனாலும் ஒரிரு நாட்களிலே காதோடு காதாக எல்லோருக்கும் பரவியது. காயப்பட்ட உள்ளங்களை மீண்டும் மிளவிடாது தாக்கியது விகடன். பாலியல்வதைகள் எதுவும்பம் பம்பைமடு பெண்கள் முகாமில் நடக்கவேயில்லை என்பது தெட்ட தெளிவான உண்மை. உணவுக்கு’; நீருக்கு.; உறையிலுக்கு.;நோயினால் பட்ட வதைகள்உண்மைதான் சொல்லிடவே முடியாது.
ஆனாலும் பொய்யான தகவலை ஏன் வெளியிடவேனும் அங்கிருக்கும் பெண்களின் எதிர்காலம் என்னாகும்? அப்போது வெளிகாற்றைக்கூட சுவாசிக்க முடியாத எம்மால் அங்கிறுந்து என்ன செய்யமுடியும் ஆனாலும் உண்மையாக விகடனில் வந்ததை உறுதி செய்ய நாம் பட்ட கஸ்ரம் அந்த பகுதியை மட்டும் கிழித்து அம்மா மீன் பொரியல் சுத்தி வந்து தந்தது அதை பார்தவுடன் இதயத்தில் சுள் என வலித்தது பசிதாகம் களைப்பைவிட பெரும் எரிமலையாய் குமறிக்கொண்டிருந்தது. இன்று ‘’நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!’’ என்ற செய்தியை வெளியிட்டிருக்கிறது விகடன்.
நேரடியாகவே அந்த பெண்னால் கூறப்பட்ட கதையைப்போல் இல்லைவேறு ஒருவரினால் கூறப்பட்டு மிகுதி புனையப்பட்டதைப்போன்றே தோன்றுகின்றது. தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற பெரும் கனவுடன் வாழும் எந்த தாயும் பாலியல் தொழிலில் இலகுவில் இறங்கிவிட மாட்டாள். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறைபடும் தாய் நிச்சயமாக தான் பாலியல் தொழிளாலி ஆகினால் பிள்ளைகளின் கதி என்னாகும் என சிந்தித்து இருப்பால் சதா சமுகத்தில் அவர்களிற்கு வரப்போகும் பிரச்சனைகள் பற்றி பயந்திறுப்பாள்.
முன்னாள் பெண்புலி என்ற வகையில் அதுவும் மரவுவழி படையணி ஒன்றில் இருந்தவள் வாழ்வின் சுமைகளைவிட பல மடங்கான சுமைகளை போரட்டத்திற்காக சுமந்திருப்பாள். போரட்ட வரலாறுதகளை தெட்ட தெளிவாகவும் மாவீரர்களின் தியாகங்களை மதிக்கும் அவளால் நிச்சயமாகமன வலிமையுடன் தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழ்ந்திறுப்பாள்.
ஆனால் வயிற்றுப்பசிக்காக தன்னை விலை பேசினால் என்பதை நம்பிவிடமுடிய வில்லை. காயப்பட்ட இனத்திற்கு மருந்திட்டு ஆற்றுவது தான் ஊடகங்களின் தலை சிறந்த பண்பு. இப்படித்தான் 2010 ஆம் ஆண்டுபம்பைமடு பெண்கள் முகாமில் பாலியல் வதை நடைபெறுவதாக விகடனில் வந்த பொய்யான செயதி என் இதயத்தை இப்பவும் கிழித்துக்கொண்டுதான் இருக்கின்றது. அங்கிருந்த இரண்டாயிரம் பெண்களும் துடித்த துடிப்புவிட்ட கண்ணீர் மறக்கவேமுடியவில்லை .அதுபோலவே இப்போ விகடன் சொன்ன செய்தியும் உண்மைக்கு மாறகவே இருக்கிறது. உண்மைகள் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வுலகில் ஒவ்வொருவரின் உணர்வுகளிற்க்கும் சகாவரம் கொடுக்க நாம் போராட வேண்டும்.
-குயில் நிலா, முன்னாள் போராளி, தமிழீழ விடுதலைப் புலிகள்
குளோல் தமிழ் செய்திகளுக்காக தமிழ்மாறன்

ad

ad