புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2012


ஈழத்துச் சினிமா வரலாற்றை விரல் நுனியில் விபரிக்கும் ஆற்றல் படைத்த தம்பிஐயா தேவதாஸ்

உங்களின் பிறப்பிடம், ஆரம்பக் கல்வியைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தேன். அங்குள்ள கணேச மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை பெற்று பின் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் உயர் கல்வி பெற்றேன்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பீ.ஏ. பட்டமும் மகரகம தேசிய கல்வி நிறு வகத்தில் ‘பிஈடி’ பட்டமும் பெற்றேன். கொழும்பு பல்கலைக்கழகத்தின் Dip.in. Journalism பட்டமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.A. Journalism and mass communication பட்டமும் பெற்றுள்ளேன்.
ஆசிரியர் தொழிலோடு, இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறைப் பகுதியில் வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறேன்.
சினிமாத்துறை, மொழி பெயர்ப்பு துறை, பழமொழி துறை, ஊர் வரலாறு, கல்வித் துறை பற்றி பல நூல்களை எழுதியுள்ளேன். பள்ளிக்காலம் முதல் சினிமா ஆய்வில் பெரும் ஈடுபாடு கொண்டவன் நான்.

இலங்கைத் தமிழ் சினிமா பற்றி அதிகம் எழுதும் ஒரே எழுத்தாளராகிய நீங்கள் எழுதிய அந்த நூல்களைப் பற்றி சொல்லுங்கள்?
நான் சிறிது சிறிதாக எழுதிய கட்டுரைகளை ஒன்றாக்கி ஒரு நூலை வெளியிட்டேன்.
அதன் பெயர்தான் இலங்கை தமிழ்ச் சினிமாவின் கதை. சிங்களச் சினிமா பற்றியும் நூல் எழுதி வெளியிட்டேன்.
அதன் பெயர் ‘பொன் விழாக்கண்ட சிங்களச் சினிமா’ என்பதாகும். இந்நூலுக்கு வடகிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. தமிழ் சிங்கள சினிமாவில் கடமையாற்றிய கலைஞர்களைப் பற்றி இரண்டு நூல்களை எழுதினேன். ‘இலங்கை திரை உலக முன்னோடிகள்’ ‘இலங்கை திரை உலக சாதனையாளர்கள்’ என்பனவே அந்நூல்களின் பெயர்கள். 2011 ம் ஆண்டு ‘குத்துவிளக்கு’ திரைப்படத்தின் வரலாற்றை நூலாக எழுதினேன். அதன் பெயர் ‘குத்து விளக்கு மீள் வாசிப்பு’ என்பதாகும். இவற்றின் அரைவாசிப் புத்தகங்கள் என் வீட்டில் அலுமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அது தான் கவலை.
நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் அறிவிப்பாளர் இளையதம்பி தயானந்தாவுடன்

மொழி பெயர்ப்புகள் பற்றி...
ஆரம்பத்தில் சிங்களச் சிறு கதைகளை தமிழில் மொழி பெயர்த்து பத்திரிகையில் வெளியிட்டேன். பின்பு நாவல் ஒன்றை மொழிபெயர்த்தேன். பிரபல சிங்கள நாவலாசிரியரான ‘கருணாசேன ஜயலத்’ எழுதிய ‘கொளு ஹதவத்த’ என்ற நாவலை நான் ‘நெஞ்சில் ஓர் இரகசியம்’ என்னும் பெயரில் வெளியிட்டேன். அது அப் பொழுது வீரகேசரியில் பிரசுரமாகி வெளிவந்தது. பின்பு ‘இறைவன் விடுத்த வழி’ என்ற நாவலை வெளியிட்டேன். பின்பு ஜே. ஜயதிலக எழுதிய நூலை மூன்று பாத்திரங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டேன். அதை சென்னை என்.சி.பி.எச். நிறுவனம் வெளியிட்டது.
இத்தனை நாவல்களை வெளியிட்டும். இந்தத் துறையில் எந்த நிறுவனமும் என்னை கெளரவிக்காதது மிகுந்த கவலையை தருகிறது.
அதனால் மொழி பெயர்ப்புச் செய்யும் பணியை குறைத்துக் கொண்டேன்.

‘பழமொழிகள்’ பற்றிய நூல்களை வெளியிட்டிருக்கிaர்கள். அவைபற்றி?
பழமொழிகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம் எத்தனையோ மொழிகளிலுமுள்ள பழ மொழிகள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. ஆனால் சிங்களப் பழ மொழிகள் தமிழில் வெளிவரவில்லை. எனவே முதல் 800 சிங்களப் பழமொழிகளை தமிழில் மொழி பெயர்த்து ‘சிங்களப் பழ மொழிகள்’ என்ற தலைப்பில் வெளியிட்டேன்.
பின்பு சிங்களம் தமிழ்ப் பழமொழிகளை ஒன்றாக தொகுத்து நூல் வெளியிட்டேன். அதன் பெயர் ‘இணைப்பழமொழிகள்... சிங்களம் தமிழ்’ என்பதாகும். தமிழ்ப் பழ மொழிகளை பேராசிரியர் சுனில் ஆரியரத்ன சிங்களத்தில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டார். ஆனால் சிங்களப் பழ மொழிகளை தமிழில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட்ட முதல் ஆள் நான்தான் என்று பெருமைப்படுகிறேன்.

உங்கள் ஊரை பற்றியும் நூல் எழுதியிருக்கிaர்கள் அது பற்றி
வானொலி கலையகத்தில்

நான் யாழ்ப்பாணத்திலுள்ள ‘புங்குடுதீவு’ என்னும் கிராமத்தில் பிறந்தேன் அக்கிராமத்தின் சிறப்புப் பற்றி வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்த எண்ணினேன். ‘புங்குடுதீவு வாழ்வும் வளமும்’ என்பதுதான் அந்நூலின் பெயர்.
இந்நூலின் வெளியீட்டு விழாவை பெப்ரவரி மாதம் கடைசிப் பகுதியில் கொழும்பில் நடத்த இருக்கிறேன். இந்நூலில் என் கிராமக் கோவில்கள் பாடசாலைகள், கல்வியாளர்கள், பெரியோர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்று என் ஊரில் பிறந்த பலரைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

நீங்கள் வானொலி அறிவிப்பாளர் தொலைக்காட்சியிலும் நடித்திருக்கிaர்கள். அந்த அனுபவம் பற்றி?
1990 முதல் நான் வானொலி அறிவிப்பாளர். பல வானொலி நாடகங்களில் நடித்திருக்கிறேன். சில தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்திருக்கிறேன். ரூபவாஹினி ஆர். ரவிந்திரன் தயாரித்த ‘நான் படிச்ச இங்கிலீஷ்’ என்ற நாடகத்தில் நடித்தேன். ஜோர்ஜ் சந்திரசேகரன் தயாரித்த ‘இதயத்தில் ஓர் உதயம்’ என்ற நாடகத்தில் டொக்டராக நடித்தேன்’ ஸ்ரீஸ்கந்த ராஜா தயாரித்த ‘ஆராதனை’ என்னும் நாடகத்தில்ஆசிரியராக நடிக்கிறேன். அது விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.உங்கள் ஒலிபரப்பு அனுபவங்கள் பற்றி கூறுங்கள்
25 வயதில் நான் கொழும்பு பாடசாலையில் கற்பித்து வந்தேன். அதன் பின்பே வானொலியின் பக்கம் எட்டிப் பார்த்தேன். ஜோக்கிம் பெர்னாண்டோ அப்பொழுது ‘வாலிப வட்டம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.
நான் சிறுவர் மலரில் பங்குபற்றியதில்லை; ஆனால் வாலிபவட்டத்தில் பங்குபற்றினேன். ஒலிவாங்கி, ஒலிப்பதிவு ஒலிபரப்பு என்பவை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பின்பு வானொலிக் கலைஞர் தேர்வில் பங்குபற்றி நாடகக் கலைஞராக தெரிவு செய்யப்பட்டேன். கே.எம். வாசகர், சி. சண்முகம், ஜோர்ஜ் சந்திரசேகரன் போன்றோர் தயாரித்த நாடகங்களில் நடித்தேன். உரைச் சித்திரங்களில் பங்கு பற்றினேன். சிறு கதைகளை வாசித்தேன் அதன் மூலம் ஒலிபரப்பில் என் அனுபவங்களை வளர்த்துக் கொண்டேன்.
பால்ய பருவத்தில் பெற்றோருடன்

இலங்கை வானொலியின் கல்விச் சேவை நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றினேன். அப்பொழுது அச்சேவையில் ‘சமூக சஞ்சிகை’ என்ற நிகழ்ச்சியை இரா. சத்திய நாதன் தயாரித்து வந்தார்.
அந்நிகழ்ச்சிக்குப் பிரதிகள் எழுதும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. எனது குரலில் விருப்பங் கொண்ட இரா. சத்தியநாதனும் கல்விச் சேவைப் பணிப்பாளர் அரச ஜயாத்துரையும் ‘சமூக சஞ்சிகை’ நிகழ்ச்சியை தொகுத்தளிக்கும் வாய்ப்பினை எனக்கு வழங்கினார். அந்நிகழ்ச்சியை நூறு வாரங்களுக்கு மேல் தொகுத்து வழங்கினேன். அதன் மூலம் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.
அப்பொழுது தமிழ்ச் சேவையில் ‘கலைக் கோலம் என்னும் நிகழ்ச்சியை காவலூர் ராஜதுரை தயாரித்து வந்தார். அந்நிகழ்ச்சிக்காக பல கட்டுரைகளை எழுதி வாசித்தேன். இலங்கைத் தமிழ்ச் சினிமா பற்றி நான் எழுதிய புத்தகங்கள் பலவற்றின் கட்டுரைகள், கலைக்கோலம் நிகழ்ச்சியில் நான் ஏற்கனவே வாசித்த கட்டுரைகள்தான். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்.
1983 ம் ஆண்டு இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராக வி.ஏ. திருஞான சுந்தரம் கடமையாற்றினார்.
தமிழ்ச் சேவையில் ‘இளைஞர் மன்றம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்தளிக்கும் வாய்ப்பினை அவர் எனக்கு வழங்கினார். அந்நிகழ்ச்சியை பத்து வருடங்களுக்கு மேல் தொகுத்து வழங்கினேன். அக்காலத்தில் அந்நிகழ்ச்சிக்கு வீ. என். மதியழகன், என்.சோமசுந்தரம், ஜோர்ஜ் சந்திர சேகரன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக தயாரிப்பாளர்களாக கடமையாற்றினர்.
1990 ம் ஆண்டு பிறந்தது. வானொலித் துறையில் நான் கண்ட கனவு நனவாகியது. அந்த ஆண்டு எனக்கு பகுதி நேர அறிவிப்பாளர் பதவி கிடைத்தது அன்று முதல் இன்று வரை பகுதி நேர அறிவிப்பாளராக இருக்கிறேன். பகலில் பாடசாலையிலும் இரவில் வானொலியிலும் வேலை செய்து வருகிறேன்.
சகோதரர்களின் குடும்பத்தினருடன்

தமிழச் சேவையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் வந்தன. ராஜபுத்திரன் யோகராஜன் தயாரித்த ‘அங்கும் இங்கும்’ என்ற செய்திச் சுருள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.
கலைமகள் மகேந்திரன் தயாரித்த ‘கலைஞர் சங்கம்’ என்ற நிகழ்ச்சியில் பல கலைஞர்களைப் பேட்டி கண்டேன். இந்நிகழ்ச்சிக்காக இந்தியா சென்று பல பாடகர்களை பேட்டி கண்டு வந்தேன். ரி. எம். செளந்தராஜனைப் பேட்டி கண்ட அனுபவம் மறக்க முடியாதது.
கெளசல்யா தயாரித்த ‘முற்றத்து மல்லிகை’ என்ற நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ்ச் சினிமாப் பாடல்களை ஒலிபரப்பி அவற்றின் வரலாறு கூறிவந்தேன்.
இலங்கைத் தமிழ்ச் சினிமா பற்றிய ஏதாவது நிகழ்ச்சி தயாரிக்க வேண்டியிருந்தால் என்னை அழைப்பார்கள்.

வானொலியில் ஆற்றிய கல்விச் சேவைப் பற்றி கூறுங்கள்?
1995 ம் ஆண்டு கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றிய காலம். இலங்கை வானொலியின் கல்விச் சேவையில் ஒப்பந்த அடிப்படையில் தயாரிப்பாளர்களை அழைத்தார்கள். கல்வி அமைச்சில் இரண்டு வருட விடுமுறை பெற்று வானொலியின் கல்விச் சேவையில் கடமையாற்றினேன். உழைப்போர் உலகம்’ என்ற ஒரு மணித்தியால நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.
என்னைப் போலவே பல ஆசிரியர்கள் இலங்கை வானொலியின் கல்விச் சேவைக்கு ஒப்பந்த அடிப்படையில் தயாரிப்பாளர்களாக வந்தார்கள் ஏ. ஆர். எம். ஜிவ்றி, அஷ்ரப் சிஹாப்தீன், கே. ஞானசேகரன், ஜி. போல் அன்ரனி என். நாகலிகங்கம் போன்ற ஆசிரியர்களும் என் காலத்திலேயே ஒப்பந்த அடிப்படையில் தயாரிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

தொலைக்காட்சியுடன் உங்களுக்குரிய தொடர்புகள் என்ன?
அப்பொழுதெல்லாம் இலங்கையில் தொலைக்காட்சிச் சேவைகள் வரவில்லை. ரூபவாஹினி ஆரம்பிக்கப்பட்ட போது அவ்விழாவில் நானும் மாணவனாக கலந்து கொண்டேன். வானொலியில் கல்விச் சேவையில் கடமையாற்றிய இரா. சத்தியநாதன் ரூபவாஹினியின் கல்விச் சேவைக்குத் தயாரிப்பாளராக வந்தார். அவரோடு சேர்ந்து நானும் ரூபவாஹினிக்கு போய்வருவேன். சத்தியநாதன் கல்வி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதை நானும் பார்த்து நிற்பேன்.
அது 1985 ம் ஆண்டு காலப்பகுதி ரூபவாஹினியின் தமிழ்ப் பிரிவுப் பணிப்பாளராக பி. விக்னேஸ்வரன் கடமையாற்றினார். எஸ். விஸ்வநாதன் ‘காதம்பரி’ என்ற அருமையான நிகழ்ச்சியை வாராவாரம் தயாரித்து வழங்கினார்.
இலங்கைத் தமிழ்ச் சினிமாவுடன் தொடர்புடைய கலைஞர்களைப் போட்டி கண்டு அவர்கள் தொடர்புடைய திரைப்படங்களின் சில காட்சிகளை ‘காதம்பரி’ நிகழ்ச்சியில் சேர்த்து வந்தார்.
அந்நிகழ்ச்சியில் சினிமாக் கலைஞர்களை நான் பேட்டி கண்டேன். இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களை, தயாரிப்பாளர்களிடமிருந்தும் திரைப்படக் கூட்டுத் தாபனத்திடமிருந்தும் பெற்றுக் கொண்டு நிகழ்ச்சியில் சேர்ந்து வந்தோம் பலவருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு சில ரசிகர்களால் மட்டும் பார்க்கப்பட்ட அத்திரைப்படங்களின் வரலாற்றை இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பான போது பலர் பார்த்தனர்.
இலங்கையின் முதல் தமிழ்ப் படமான ‘தோட்டக்காரி’ முதல் அப்பொழுது கடைசியாக வந்த ‘சர்மிளாவின் இதயராகம்’ வரை அதில் அறிமுகப்படுத்தினோம். ‘தோட்டக்காரி’ தமிழ்த் திரைப்படம் இப்பொழுது அழிந்து விட்டது. ஆனால் ‘காதம்பரி’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ‘தோட்டக்காரி’ படத்தில் சில காட்சிகளை நான் இப்பொழுதும் வைத்திருக்கிறேன்.
பிற்காலத்தில் ‘ஐ.ரீ.என்.’ தொலைக்காட்சிச் சேவையில் ஜெனிட்ஜன் ஜுட் உரை அரங்கம் என்ற நிகழ்ச்சியை தயாரித்து வந்தார். அந்நிகழ்ச்சியில் இலங்கை தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றை சொல்லி வந்தேன்.
சக்தி தொலைக்காட்சியில் எஸ். ஜி. பிரகாஷ் ‘நெஞ்சம்மறப்பதில்லை’ என்ற நிகழ்ச்சியை தயாரித்து வழங்குகிறார். அந்நிகழ்ச்சியில் தென்னிந்தியச் சினிமாப் பாடல்களை ஒளிபரப்பி வருகின்றனர். ஆனால் நான் அந்நிகழ்ச்சியில் இலங்கை தமிழ்த் திரைப்படப் பாடல்களை ஒளிபரப்பி அவற்றுக்கான விளக்கங்களை கூறி வந்தேன்.

உங்கள் குடும்பத்தைப் பற்றி?
எனது தந்தை இறந்து விட்டார். தாயார் எங்களுடன் கொழும்பில் இருக்கிறார். இரண்டு தம்பிமார் சுவிற்சர்லாந்தில் வாழ்கிறார்கள்.
ஒரே தங்கை கனடாவில் வாழ்கிறார். மூத்த மகன் சுகந்தும் இளைய மகன் துஷ்யந்தும் கனடாவில் வாழ்கிறார்கள். கடைசி மகன் பிறேம் இலங்கிலாந்தில் நியூகாஸ்டல் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள். ஒரே மகள் தக்ஷாயினி அமெரிக்க நோர்த் எக்சாடே பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். நானும் மனைவி விஜய லக்ஷ்மியும் கொழும்பில் வாழ்கிறோம்.

ad

ad