புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012

பொலிஸார் மூர்க்கம் .ரணகளமானது பல்கலைக்கழகம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிமீது கலகமடக்கும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதல் நேற்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றது. இதன்போது இராணுவத்தினரும்
பொலிஸாரும் இணைந்து மாணவர்கள் மீது மிகவும் மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனால் சில மணி நேரம் பல்கலைக்கழக பிரதேசம் ரணகளமாக காட்சியளித்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தினரும் கலகம் அடக்கும் பொலிஸாரும் மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டதோடு ஊடகவியலாளர்களையும் பொது மக்களையும் அச்சுறுத்தி பல்கலைக்கழக சூழலில் போக்குவரத்தையும் பல மணி நேரம் தடை செய்தனர். மாவீரர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள்ளும் அதனையண்டிய மாணவர் விடுதிகளிலும் தீபங்கள் ஏற்றி மாணவர்களால் மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அத்துமீறி நுழைந்த பெருமளவான இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் ஆயுதங்களைக் காட்டி மாணவர்களை எச்சரித்ததோடு பெண்கள் விடுதிக்குள்ளும் அத்துமீறி அநாகரிகமாக நடந்து கொண்டனர். இதனைக் கண்டிக்கும் வகையில் நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முற்பகல் 11 மணியளவில் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இராணுவத்தினருக்கு எதிராக கோ­மிட்டதோடு பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு எதிராகவும் கருத்துக்களை முன்வைத்தனர். பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் கதவினை மூடியவாறு முகத்தினை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டு மாணவர்கள் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி உரையையும் நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் முடிபுற்ற பின்னர் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள இராமநாதன் வீதியில் மாணவர்கள் கண்டனப் பேரணியாகச் சென்றனர்.

இதன்போது கனரக வாகனம் ஒன்றில் பெருமளவான கலகம் அடக்கும் பொலிஸார் அழைத்துவரப்பட்டு அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு மூன்று ஜீப் வண்டிகளில் இராணுவத்தினரும் ஆயுதங்களுடன் இராமநாதன் வீதியில் வந்திறங்கி நின்றனர். மாணவர்களின் பேரணி வீதியில் சிறிது தூரம் சென்றதும் திடீரென வந்து இடைமறித்த யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி குணசேகரா, மாணவர்களை கலைந்து செல்லுமாறு கடும்தொனியில் எச்சரித்தார். மாணவர்கள் பொலிஸாருடன் பேசிக் கொண்டிக் கொண்டிருந்தபோது உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் கலகம் அடக்கும் பொலிஸாருக்கு மாணவர்களை அடித்து கலைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது மாணவர்கள் மீது கலகம் அடக்கும் பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்குதலை மேற்கொண்டனர். ஆண்கள், பெண்கள் என வேறுபாடு காட்டாது அனைவரின் மீதும் பொலிஸார் தாக்குதலை மேற் கொண்டனர். இதன்போது மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மாணவர்களை கலைத்துப்பிடித்து காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை நடத்தினர்.

இதன்போது மாணவர்கள் மீதான தாக்குதலை கமரா மூலம் பதிவு செய்த ஊடகவியலாளர்களையும் இராணுவத்தினரும் பொலிஸாரும் தாக்க முற்பட்டதோடு அவர்களை எச்சரிக்கும் வகையிலும் செயற்பட்டனர். இதில் சில ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கும் உள்ளானதோடு அவர்களது கமராக்களும் பறிக்கப்பட்டன. பின்னர் அதிலிருந்த புகைப்படங்கள் அழிக்கப்பட்டு மீளவும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. இதேவேளை யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் மாணவன் ஒருவன் இராணுவத்தினரால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டார். அத்தோடு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலாளர் ப.தர்சானந்த் மீது கல்லெறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு 40 மேற்பட்ட மாணவர்கள் மீது கலகம் அடக்கும் பொலிஸாரும் இராணுவத்தினரும் தடியடித்தாக்குதலை மேற்கொண்டனர். இந்தத்தாக்குதல் சம்பவத்தையடுத்து இராமநாதன் வீதியை (பல்கலைக்கழகம் முன்பாக) தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்த இராணுவத்தினர் அவ்வீதியூடான போக்குவரத்தையும் பல மணிநேரம் தடுத்து நிறுத்தியதோடு பொது மக்களையும் பயமுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். மாணவர்கள் மீதான தாக்குதலையடுத்து பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதியில் நேற்று மாலை வரை ரணகளமாகக் காட்சியளித்தது.

ad

ad