புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2012


அப்பாவி மக்களைக் கொன்றுதான் போர் முடிவுக்கு வந்தது என்ற உண்மையை ஐ.நா பகிரங்கப்படுத்தியுள்ளது: மனோ கணேசன்
இலங்கையில் 40, 000க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை பலி கொடுத்து, இன்னொரு பெருந்தொகையினரை காணாமல் போகச்செய்துதான், இலங்கை அரசாங்கம் புலிகளை ஒழித்தது என்ற உண்மை ஐநாவின் உள்ளக அறிக்கை இன்று பகிரங்கப்படுத்தியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ள கருத்துகளை, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்யைில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐநா காத்திரமாக செயல்படாமல் பொறுப்புகளிலிருந்து தவறிவிட்டது என்ற உண்மையும், சார்ல்ஸ் பெற்றி குழுவினர் ஆய்வு செய்து ஐநா செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கையின் மூலமாக பகிரங்கமாகியுள்ளது. இதன்மூலம், போரிட்ட இலங்கை அரசாங்கம், புலிகள் ஆகிய இரண்டு தரப்பினருடன் சேர்ந்து ஐநா செயலாளர் நாயகம் பான்-கி மூனும் குற்றவாளி கூண்டில் நிற்கிறார்.
படுகொலைகளை தடுக்கும் பொறுப்பில் இருந்து தவறியமைக்காக ஐநா செயலாளர் நாயகம் பான்- கீ- மூனை, உலக நீதிமன்றத்தில் நிறுத்த முடியுமா என உலகத் தமிழர்கள் ஆராய வேண்டும். இப்படியான படுகொலைகள் உலக வரலாற்றில் நடந்து உள்ளன.
இது முதன்முறை அல்ல. ஆகவே ஐநா நாடகம் நடிக்க முடியாது. புதிய பாடம் படிக்கிறேன் என பான்-கீ-மூன் பள்ளிக்கு போக முடியாது. எதிர்காலத்தில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஐநா எப்படி நடக்கப்போகிறது என்பதற்காக, இலங்கை விவகாரத்தை முன்னுதாரண  பாடமாக கொள்வோம் என்பது பற்றி மாத்திரம் பேசி தப்புவதற்கு,இ பான்-கீ-மூனுக்கு இடம் தரமுடியாது.
நடந்துவிட்ட படுகொலைகளுக்கும், தாம் அப்பாவி மக்களை காக்க தவறிவிட்டமைக்கும், ஐநா செயலாளர் நாயகம் என்ற முறையில் பான்-கீ-மூனின் பதில் என்ன என்பதை உலக தமிழர்கள், உலக மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து கேட்டு குரல் எழுப்ப வேண்டும்.
எமது குரல்கள் ஐநாவினதும், உலக சமுதாயத்தினதும் மனச்சாட்சிகளை உலுக்க வேண்டும். படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதும், தண்டணைகள் வழங்குவதும் ஒரு விடயம். ஆனால், இங்கே இலங்கையில் இது தொடர்பான நடைமுறை நிலைமைகள் கவலையளிக்கின்றன. அரசாங்கம் படுகொலைகள் நடந்துவிட்டன என்ற உண்மையை ஏற்றுகொள்ள மறுக்கிறது.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் என்ற கருத்தை சிங்கள மக்களுக்கு சொல்லி வருகிறது. அப்பாவி மக்கள் உயிர் தப்புவதற்கு கடைசி சந்தர்ப்பம் வழங்க தாம் மறுத்துவிட்டோம் என்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. போர்க்குற்றம் என்பதை ஒருபுறம் வைத்துவிட்டு பார்த்தாலும், போருக்கு அடிப்படை காரணமான தேசிய இனப்பிரச்சினையை நேர்மையாக தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் மறுத்துவருகின்றமை கண்கூடாக தெரிகிறது.
"புலிகள் தான் ஒரே தடை, யுத்தம் முடியட்டும்; தேசிய இனப்பிரச்சினையை உடன் தீர்க்கிறோம்" என உலகத்துக்கு தந்த வாக்குறுதிகளை அரசாங்கம் மீறுகிறது. அத்துடன், தானே அமைத்து முன் வைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளைகூட அமுலாக்காமல் தவிர்க்கிறது.
ஆணைக்குழு அறிக்கையில் அரசு ஏற்றுக்கொண்டிருந்த, கடத்தப்பட்டு அல்லது சரணடைந்து காணாமல் போனவர்களின் பெயர் பட்டியலைக்கூட குறைந்தபட்சம் வெளியிடுவதற்கு மறுக்கிறது. அத்துடன், வடக்கிலே குறிப்பாக, வன்னியிலே தமிழ் பெண்களும், குழந்தைகளும் நிர்க்கதியாக அவல வாழ்க்கை வாழும் வண்ணம் இராணுவ நிர்வாகம் நடைபெறுகிறது.
யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும், இராணுவ பிரசன்னத்தை குறைக்காமல், கூட்டி வருகிறது. மக்களுக்கு வீடு கட்டாமல், இராணுவ குடியிருப்புகளை  கட்டி, இன விகிதாசாரத்தை மாற்றிவருகிறது. அத்துடன், தமிழ் பேசும் மக்களின் நிலங்கள், மதவழிப்பாட்டு நிலையங்கள் அபகரிக்கப்ப்பட்டு, தாக்கி அழிக்கப்படும் எதேச்சதிகாரத்தை முன்கொண்டு செல்கிறது.
அதிகாரத்தை பிரித்து, ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வோம் என்று தமிழர்களும், முஸ்லிம்களும் சொல்வதை காதில் வாங்காமல், இனவாதிகளின் எண்ணப்படி முழு நாட்டையும் சிங்கள பெளத்த நாடாக மாற்றும் திட்டத்தை தீட்டி செயற்பட்டு வருகிறது. அத்துடன், நாடு முழுக்க நடைபெற்ற மாகாணசபை தேர்தல்களை, வட மாகாணத்தில் மாத்திரம் நடத்தாமல், சாக்கு போக்கு சொல்லி காலத்தை கடத்துகிறது.
யுத்தத்துக்கு முழு உதவிகளையும் இந்தியாவிடம் பெற்றுக்கொண்டு இன்று இந்தியாவின் கன்னத்தில் அறைந்துபோல் பதின்மூன்றை கிழித்து எறிவோம் என்ற கோஷம் அரசாங்கத்துக்கு உள்ளேயே எழுந்துள்ளது. பதிமூன்றுக்கு மேலே போகிறேன் என்று சொல்லி விட்டு, இன்று இருப்பதையும் இல்லாமல் செய்யும் புதிய பதினொன்பது என்ற கதை பேசுகிறது.
இந்நிலையில், அரசாங்கத்தையும், புலிகளையும் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து, அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தும் பொறுப்பில் இருந்து மோசமாக தவறிவிட்ட ஐநா சபை இனிமேலும் தொடர்ந்து அமைதி காக்க முடியாது.
2009 மே மாதம் யுத்தம் முடிந்த சில நாட்களில், இலங்கை வந்த பான்-கீ-மூன்இ இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டார். யுத்தத்தின் போது மக்களுக்கு நடந்த அதே கதிதான், இந்த கூட்டறிக்கைக்கும் ஏற்பட்டுள்ளதா என இன்று ஐநா செயலாளர் நாயகம் பான்-கீ-மூனிடம் கேட்கின்றோம்.
குறிப்பாக பான்-கீ-மூனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி நாம் நியாயம் கேட்கிறோம். இது தொடர்பாக, இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும், தமிழகத்திலும் வாழும் தமிழர்களின் ஒன்றிணைந்த குரல் ஐநா சபையையும், உலகையும் உலுக்க வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad