புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2012


நான் தியேட்டர் கட்டப்போகிறேன்: கமல் அதிரடி

92 கோடி செலவில் கமல் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்’ படம் ஜனவரி 10-ந் தேதி டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. ஏர்டெல், டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ், சன் டைரக்ட் ஆகிய டி.டி.எச்.களில் வெளியிடப்படுவதாக கமல் ஏற்கெனவே அறிவித்திருந்தார். 


இந்நிலையில் டாடா ஸ்கை டி.டி.எச்.சிலும் இப்படத்தை வெளியிடப்போவதாக கமல் தெரிவித்துள்ளார். இது குறித்தான அறிவிப்பை நேற்று பத்திரிகையாளர்களுக்கு கமல் அறிவித்தார்.

இது குறித்து கமல் மேலும் கூறும்போது, ’’இந்த முயற்சியைப் பற்றிச் சொல்லும்பொழுது இது நிகழும் என்பது பல பேருக்குத் தெரியும். என்னவோ நான் தான் கண்டுபிடித்தவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது டி.டிஎச்சையே நான் தான் கண்டு பிடித்தேன் என்று நினைக்கிறார்கள். அப்படி கிடையாது. 
இதற்கு முன்பாக ஒரு வடநாட்டு நண்பர் ஒருவர் முயற்சி செய்து தோற்றுப்போன ஒன்று. அவர் கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்பட்டு விட்டார். அதாவது அவர், தியேட்டர்காரர்களிடம் எம்ஜி வாங்கிவிட்டு டி.டி.எச்சிலும் கொடுத்து விட்டார். அதனால் தியேட்டர்காரர்கள் அவருக்கு எதிராக திரும்பி விட்டார்கள். அது நியாயாமான ஒன்றுதான்.
அவர்களுக்கு எதிரான ஒரு விஷயம் என்றால் அவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். ஆனால் நான் அப்படி இல்லை என்னை வாழ வைத்த இந்தச் சூழலை கெடுத்துக்கொண்டு நான் எந்த வேலையையும் செய்ய விரும்புவன் இல்லை. ஒரு விவசாயி வயலில் வேலை செய்வான். ஆனால், அதை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். அதைதான் நான் செய்கிறேன். 
செல்போன் வந்தது, அதில் பேசலாம் என்று தெரியும், அதை கையில் எடுத்து பேசினார் சுட்டு விடும் என்று பல பேர் பயந்தார்கள், நான் தைரியமாக எடுத்துப் பேசினேன். எனக்கு எதிர்முனையில் ஒருவர் பேசினார் அதனால் நான் பேசினேன் அவ்வளவுதான்.   
சாட்டிலைட் சேனல்கள் வந்தபொழுது அதற்கு நான் ஆதரவாக குரல்கொடுத்தேன், இது விஞ்ஞானம் வரத்தான் செய்யும் என்று சொன்னேன் என்பதற்காக என்னை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால் நான் தைரியமாக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்னேன்.

அந்த தைரியம்தான் இன்று உங்கள் முன்னால் என்னை நிற்க வைத்திருக்கிறது.   அதேபோலத்தான் சொல்கிறேன் இது பிழை யல்ல, குற்றமல்ல அதனால் செய்கிறேன்.
  
தியேட்டர்காரர்களுக்கு அது சொத்து, ஆனால் இந்தப்படம் எனக்கு செலவு. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் என்னால் செலவு செய்ததை எடுக்க முடியாது. ஆகையால், யார் அந்த பொருளுக்கு சொந்தக்காரனோ அவன் தான் அந்தப்பொருளை பயன்படுத்த வேண்டும்.   
இது கசப்பு மருந்துதான். கசப்பு என்று தெரிந்துதான் சாப்பிடுகிறோம். ஆனால் இந்த கசப்பு மருந்து உடம்புக்கு நல்லது. வேம்பு கசக்கும் ஆனால் பாம்பு கடிக்கு போட்டால் சரியாகிவிடும். உங்களை கடித்திருக்கும் பாம்பு திருட்டு வி.சி.டி, அதற்கு கசப்பு மருந்தாக வந்திருப்பதுதான் இந்த சிஸ்டம். இந்தக் கசப்பு மருந்து எந்தளவுக்கு குணமாக்கும் என்பது போகபோகத்தான் தெரியும். 
தியேட்டர்களை மூடி விடவேண்டியதுதான் என்று சொல்கிறார்கள். ஆமாம், பராமரிப்பில்லாத தியேட் டர்களை மூடித்தான் ஆக வேண்டும்.
 தியேட்டர்களுக்கு வருகிறவர்களுக்கு படம் பார்க்கக்கூடிய நல்ல சூழல் இல்லாத தியேட்டர்களை கண்டிப்பாக மூடிவிடுவார்கள். ஆனால் அதற்கு இதை ஒரு காரணமாக சொல்லாதீர்கள். 
எங்கள் வயிற்றில் அடித்துவிட்டுத்தானே இந்த பணத்தை சம்பாதிக்கிறீர்கள். இதை வைத்துக் கொண்டு என்னச் செய்யப்போகிறீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள். இந்த பணத்தை வைத்து நான் தியேட்டர் கட்டப் போகிறேன். என்னுடைய தம்பிகள் தியேட்டர் வைத்திருக்கும்போது எனக்கும் தியேட்டர் கட்டணும் என்ற ஆசை இருக்காதா?   
தொழில் செய்யும் உரிமையையும், எனக்கான குடியுரிமையையும் இந்த அரசாங்கம் எனக்கு கொடுத்திருக்கிறது. இதைத் தடுப்பது சட்டப்படி குற்றமாகும்.   
இந்தப்படத்தை சன் டி.டி.எச், டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய டி.டி.எச்.களில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. தற்போது, இன்னொரு புதிய டி.டி.எச் நிறுவனமும் சேர்ந்திருக்கிறது. அது டாடா ஸ்கைதான். அவர்கள் முதலில் வருவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் டிவிஆர் என்று சொல்லக்கூடிய டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரில் இந்தப்படத்தை ரெக்கார்டிங் செய்யும் தொழில்நுட்பத்தை தடை செய்யவேண்டும் இல்லையென்றால் உங்களுடன் நான் வியாபாரத்துக்கு வரமாட்டேன் என்று சொன்னேன்.  
அதேபோல இதை கமர்ஷியலாக இல்லாமல் ஒரு தனி சேனலாக காட்ட வேண்டும் என்று சொன்னேன். மேலே உள்ள அந்த இரண்டு கண்டிஷன்களுக்கும் டாடா ஸ்கை முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் வராமல் இருந்தார்கள் ஆனால் மற்றவர்கள் வந்து விட்டார்கள். இப்போது சுமார் 1 மணி நேரத்துக்கு முன்னதாக அவர்களும் இந்த கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்டு நாங்களும் வருகிறோம் என்று வந்துவிட்டார்கள். 
ஆக இப்போது இந்தியாவில் இருக்கும் ஆறு டி.டி.எச்சிலும் இந்தப் படம் ரிலீஸாகிறது. இதையெல்லாம் தியேட்டர்களை பாதுகாப்பதற்காகத்தான் நான் செய்தேன். இதைப்புரிந்து கொண்டு என் பின்னால் வருபவர்களுக்கு நான் வரவேற்பு செய்கிறேன். வராதவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை.   
‘இழப்பதற்கு ஒன்றுமில்லை, நடப்பதற்கு ஒரு தங்கப்பாதை’ என்று சொன்னார்கள். இதை என்னுடைய கம்யூனிஸ்டு தோழர்கள் சொல்வார்கள். அது இப்போது வியாபாரத்துக்கும் பயன்படுகிறது.   
இந்த தங்கப்பாதைக்கு வாருங்கள் என்று நான் கூப்பிடுகிறேன், ஆனால் நீங்கள் செருப்பு தேய்ந்து விடும் என்று கவலைப்படுகிறீர்கள். இது தான் என்னுடைய வேண்டுகோள். வந்தவர்கள் வரைக்கும் எனக்கு சந்தோஷம்; வராதவர்கள் இருந்தாலும் ரொம்ப சந்தோஷம்’’ என்று தெரிவித்தார்.

ad

ad