புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2012


நீர்ப்பறவை. திரை விமர்சனம்


நடிகர்        : விஷ்ணு, சுனைனா
இயக்குனர் :சீனு ராமசாமி
இசை        :என்.ஆர்.ரகுநந்தன்
ஓளிப்பதிவு :பாலசுப்பிரமணியன்
மீனவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது நீர்ப்பறவை. 

நகரத்தில் இருந்து தனது மனைவியுடன் அம்மாவைப் பார்க்க வரும் மகன், அங்கு இருக்கும் தங்களது பழைய வீட்டை விற்றுவிட்டு நகரத்தில் ஒரு வீடு வாங்கலாம் என அம்மாவிடம் கூறுகிறான். ஆனால் வீட்டை விற்கமுடியாது என அவனுடைய
அம்மா எஸ்தர் மறுக்கிறார். ஏன் என்று கேட்டதற்கு, கடலுக்கு சென்ற உன் அப்பா எப்படியும் திரும்பி வருவார். அதனால் விற்கவேண்டாம் என்று கூறுகிறாள்.

ஒருகட்டத்தில் அம்மா மீது சந்தேகம் வர வீட்டின் ஒரு இடத்தை கணவனும், மனைவியும் சேர்ந்து தோண்டிப் பார்க்கிறார்கள். அப்போது அங்கே ஒரு எலும்புக்கூடு இருக்க, சந்தேகப்பட்ட மகனும், மருமகளும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். போலீஸ் விசாரணையில் அது காணாமல் போன எஸ்தரின் கணவர் அருளப்பசாமியின் உடல் என தெரிகிறது. கணவனை எஸ்தர் கொலை செய்தாளா? என நினைத்துக் கொண்டிருக்கும்போதே பிளாஷ்பேக் விரிகிறது. 

மீனவரான பூ ராம், சரண்யாவின் மகன் விஷ்ணு. எந்தவொரு வேலைக்கும் போகாமல் குடியே கதி என்று சுற்றிக் கொண்டிருப்பவரை ஊரே உதாசீனப்படுத்துகிறது. மற்றவர்களிடம் பிச்சை எடுத்தாவது இன்று குடித்துவிட வேண்டும் என்ற கொள்கையோடு திரிகிறார். 

இப்படியானவரின் கண்ணில் ஒருநாள் இயேசுவுக்கு ஊழியம் செய்யும் சுனைனா படுகிறார். விஷ்ணு மீது கை வைத்து ஜெபம் செய்யும் சுனைனா மீது காதல் கொள்கிறார். குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் விஷ்ணுவை சுனைனாவும் காதலிக்க ஆரம்பிக்கிறார். 

இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணத்தை முடிக்க நினைக்கிறார் பாதிரியார் அழகம்பெருமாள். ஆனால், எந்த வேலையும் இல்லாத காரணத்தால் சுனைனாவை விஷ்ணுவுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார் சுனைனாவின் வளர்ப்பு தாய். 

இதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்ல நினைக்கும் விஷ்ணுவை அவனது பிறப்பு பற்றி குறை கூறுகிறார்கள். ஊரார் மீனவன் மட்டும்தான் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியும் என கூறி, அவனை மீன்பிடிக்க சேர்க்க மறுக்கிறார்கள். இதனால் தனது தந்தையின் பெயரில் படகு வாங்கி இதே கடலில் நான் மீன் பிடிப்பேன் என ஊரார் முன் சபதம் போட்டுச் செல்கிறார். 

இதற்காக விஷ்ணுவின் தந்தை, படகு செய்யும் சமுத்திரகனியிடம் தன் மகனை நம்பி படகு செய்யச் சொல்கிறார். சமுத்திரக்கனியும் பெருந்தன்மையோடு படகு செய்ய ஒப்புக் கொள்கிறார். 

சிறுசிறு வேலைகள் செய்து படகுக்குண்டான பணத்தை கஷ்டப்பட்டு கட்டி, தனது சொந்த படகுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறான் விஷ்ணு. சுனைனாவின் தாயார் மனம்மாறி விஷ்ணுவுக்கே திருமணம் செய்து வைக்கிறார். இவர்கள் இருவருக்கும் குழந்தையும் பிறக்கிறது.

இருவரும் சந்தோஷமாக வாழ்ந்துவரும் நிலையில், ஒருநாள் மீன்பிடிக்கச் செல்லும் விஷ்ணு திரும்பி வராததால் ஊர்மக்கள் அவனைத் தேடி அலைகிறார்கள். 

இந்நிலையில் 25 வருடம் கழித்து அவனது உடல் வீட்டுக்குள் எப்படி வந்தது? யார் அவனைக் கொன்றார்கள் என்பதை மீன் மணம் வீசும் கடல்காற்றோடு சேர்ந்து சொல்லியிருக்கிறார்கள். 

இன்றைய காலக்கட்டத்தில் மீனவ சமுதாயத்தில் அன்றாட பிரச்சினையாக நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழல்களை மிகவும் யதார்த்தமான பதிவாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. 

மீனவர்களை கடல் எல்லையில் கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்தும் இலங்கை ராணுவத்தினரின் கொடூரச் செயலினால் பாதிக்கப்படும் அப்பாவி மீனவ சமூகத்தின் இன்னல்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். 

தன் கணவன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்க முடியாமல் 25 வருடமும் அவர் நினைவில் மௌனம் காத்து நிற்கும் நாயகியின் கண்ணீரும், நியாயமும் இம்மாதிரியான சம்பவங்களால் தன் கணவர்களை இழந்த மீனவ பெண்மணிகளுக்கு இந்தப் படம் மருந்தாக இருக்கும். அனைத்து கதாபாத்திரங்களின் தேர்வும் கதைக்கு மிகச்சரியாக பொருந்தும்படி தேர்ந்தெடுத்திருக்கிறார். மீனவ கிராமங்களை கடல் பிண்ணனியில் காட்டிய விதம் அருமை. 

அருளப்பசாமியாக வரும் விஷ்ணு, முதல் பாதியில் குடிகாரனாகவும், பிற்பாதியில் திருந்தி காதலியை கரம்பிடிக்க மீனவனாக முயற்சிக்கும் காட்சிகளிலும் திறமையாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. தொடர்ந்து பல திறமையான இயக்குனர்கள் தன்னை நாடி வரலாம் என இவரது நடிப்பில் சவால் விட்டிருக்கிறார். 

சுனைனா எஸ்தர் என்ற கதாபாத்திரத்திற்கு மதிப்பு கொடுக்கும் விதத்தில் தனது நடிப்பை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். பாவடை, சட்டை என படம் முழுக்க வலம்வரும் இவர், கிறிஸ்துவ பெண்ணாக மனதில் நிலைத்து நிற்கிறார். தன் கணவனை இழந்து வாடும் காட்சிகளில் தனது நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். 

விஷ்ணுவின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன், மீனவ குடியிருப்புகளில் வாழும் ஒரு சராசரி பெண்ணைப் போன்றே வாழ்ந்திருக்கிறார். இவர்தான் சரண்யா பொன்வண்ணன் என்று ஒரு துளியும் திரையில் தெரியவில்லை. அவ்வளவு இயல்பாக மேரி என்ற கதாபாத்திரத்தில் ஒன்றியிருக்கிறார் என்பதே உண்மை. தமிழ் சினிமாவில் இவரின் நடிப்புக்கு இது ஒரு மைல்கல். இன்னொரு தேசிய விருதுக்கு தகுதியானவர் என்பதை நிரூபித்திருக்கிறார். 

ரகுநந்தன் இசையில் வைரமுத்து வரிகளுடன் வந்துள்ள அனைத்து பாடல்களும் அருமை. மீனவனைப் பற்றிய பாடலாகட்டும், தேவன் மகளே என காதலியை வர்ணிக்கும் பாடலாகட்டும் வைரமுத்துவின் வரிகள் அனைத்தும் மீன்வாசத்துடன் நம்மை ரசிக்க வைக்கிறது.  

தம்பி ராமையா, அழகம்பெருமாள், சமுத்திரகனி, வடிவுக்கரசி, பிளாக்பாண்டி, நந்திதாதாஸ் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள். நந்திததாஸ் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். சமுத்திரகனி பேசும் வசனங்கள் நெஞ்சில் நங்கூரம் பாய்ச்சியதுபோல் நீங்காமல் இருக்கின்றன. 

இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்கள் மேலும் பலம் சேர்த்திருக்கின்றன. குறிப்பாக, சமுத்திரகனி பேசும் வசனத்தில் “இலங்கை ராணுவம் மீனவன் ஒருவனை சுட்டுக் கொன்றால், தமிழக மீனவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என்றுதான் சொல்கிறோம். அதனை ஏன் இந்திய மீனவன் என்று சொல்லக்கூடாது” என்பதுபோன்ற வசனங்கள் கேட்பதோடு அல்லாமல், சிந்திக்கவும் வைக்கின்றன. 

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவில் மீனவ கிராமத்தை சொர்க்கமாக காட்டியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. இவருடைய ஒளிப்பதிவு கதைக்கு மேலும் வலுசேர்க்கிறது. 

மீனவர்களின் உடல்மீது பாயும் தோட்டாக்கள்கூட ஒருதுளி கண்ணீருடன்தான் அந்த மீனவனின் உடலைத் துளைக்கிறது. துப்பாக்கிகூட தோட்டாக்களை கண்ணீரோடுதான் அனுப்பி வைக்கிறது. 

இதை உபயோகிக்கும் மனிதனின் உள்ளம் மட்டும்தான், அவன் தன் இனம் என்பதை மறந்து ரத்தவெறியோடு செயல்படுகிறது. இம்மாதியான மனிதர்களை இதுபோன்ற படங்கள் சற்று சிந்திக்க வைக்கும் என்பதை “நீர்ப்பறவை” கண்ணீரோடு சொல்கிறது.

ad

ad