புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2012




           திராவிட அரசியல் இயக்கங்களான தி.மு.க, அ.தி.முக. இடையிலான தேர்தல் களப் போட்டிகளே தமிழகத்தில் முதன்மையாக இருப்பதால், ஆட்சியைப் பிடிப்பது ஒன்றே இயக்கத்தின் வெற்றி என்ற எண்ணம் இரு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அந்த வெற்றிக்காக எதையும் செய்வது என்பதே அரசியல் கொள்கையாக மாறிவிட்டதால் லஞ்ச-ஊழல் புகார்களும், ஆடம்பர செயல்பாடுகளும், தேர்தல் நேர பண விநியோகமும் முதன்மையாகி சமுதாய நலன் சார்ந்த செயல்பாடுகள் பின்தள்ளப் பட்டுள்ளன என்பதே இன்றைய நிலையாகும். thx nakeran

இரண்டு கட்சிகளில் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.கவே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான சமூக நீதி, பெண்ணுரிமை, கோவில்களில் அர்ச்சகராகும் உரிமை, கலப்பு மணம், சுயமரியாதை திருமணம் போன்றவற்றை தனது ஆட்சிக் காலத்தில் அதிகளவில் நடைமுறைப்படுத்திய இயக்க மாகும். செல்வி.ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில், எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டம் மற்றும் வலியுறுத்தலால் மேற்கொள்ளப்பட்ட  69% இடஒதுக்கீட்டிற் கானப் பாதுகாப்பு என்பதைத் தவிர திராவிட இயக்கக் கொள்கைகள் சார்ந்த நடவடிக்கைகள் எதிலும் பெரியளவில் அக்கறைக் காட்டப்படவில்லை. மாறாக, 2010-இல் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப் பட்டது என்பதற்காகவே, தை முதல் தேதியே தமிழ்ப்புத்தாண்டு என்ற அரசாணையை 2011-இல் பொறுப்பேற்ற செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அரசு ரத்து செய்தது.


பிரபவ, விபவ எனத் தொடங்கும் வடமொழிப் பெயரிலான 60 ஆண்டுகளைக் கொண்ட சுழற்சி முறையில் அமைந்த- சித்திரை மாதத்தில் தொடங்கும் தமிழ் வருஷப் பிறப்பு இந்த மண்ணுக்குரியதல்ல என்பதே திராவிட இயக்கத்தின் நிலைப்பாடாகும். பெரியாரும் அண்ணாவும் இதனைத் தொடர்ந்து வலியுறுத்தியதுடன் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளான தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை முன்வைத்து  அதனையே  சிறப்பித்து எழுதினர். அவர்களின் வழியில், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு அறிவித்தது. அதனை ரத்து செய்த செல்வி. ஜெயலலிதா அரசு, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் ராமர்பாலத்தை காரணம் காட்டி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

ராமாயணம் என்பதே திராவிடர்களுக்கு எதிரான ஆரியத்தின் கற்பனை என்பதை பெரியாரும் அண்ணாவும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். இது தொடர்பாக தமிழறிஞர்களுடன் நேரடியாகவே பட்டிமன்றம் நடத்தி வெற்றி பெற்றவர் பேரறிஞர் அண்ணா. அவர் பெயரில் அமைந்துள்ள கட்சிக்குத் தலைமை வகிக்கும் செல்வி. ஜெயலலிதா, கற்பனையான ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள பாலமே, தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்பகுதியில் உள்ள மணல்திட்டுகள் என்றும் அதுவே ராமர்பாலம் என்றும் அதனைக் காப்பாற்றுவதற்காக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து வழக்குத் தொடுப்பதும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு நேர் எதிரானதாகும்.

செல்வி.ஜெயலலிதா தலைமையிலான இயக்கத்தின் செயல்பாடுகள் திராவிடக் கொள்கைகளுக்கு மாறாக இருப்பதாலும், பெரியார்-அண்ணா ஆகியோரிடம் பயிற்சி பெற்ற கலைஞரின் தலைமையில் தி.மு.க இயங்குவதாலும் திராவிட இயக்க கொள்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ள கட்சியாக தி.மு.கவே கருதப்படுகிறது. திராவிட அரசியல் இயக்கம் என்பது தி.மு.கவே ஆகும். ஆட்சிக்காலத்தில் தி.மு.க பல திட்டங்களை செயல்படுத்தியுள்ள போதிலும் கட்சித்தலைமை எடுக்கும் தேர்தல் அரசியல் ரீதியான முடிவுகள், கட்சி நிர்வாகிகளின் பகுத்தறிவுக்கு மாறான செயல்பாடுகள், அவர்களது குடும்பத்தினரின் மூடநம்பிக்கைகள், அரசியலையும் ஆட்சியையும் மூலதனமாக்கி லாபம் சம்பாதிக்கும் நடவடிக்கைகள், அதன் காரணமாக எழும் லஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுகள் குடும்ப உறுப்பினர்களின் அரசியல் தலையீடு ஆகியவை கடும் விமர்சனத்திக்குள்ளாகின்றன. இதே நடவடிக்கைகள் அ.தி.மு.கவினரால் மேற் கொள்ளப் பட்டாலும், தி.மு.கவினர் இதனைச் செய்யும்போதுதான் விமர்சனம் கடுமையாகிறது. திராவிட இயக்க எதிர்ப்பாளர்களால் மட்டுமின்றி, திராவிட இயக்க ஆதரவாளர்களாலும் இந்த விமர்சனம் தீவிரமாக வைக்கப்படுகிறது.

தலைமையுடன் ஏற்படும் அரசியல் மற்றும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளால் திராவிட அரசியல் இயக்கங்கள் பல பிளவுகளைச் சந்தித்துள்ளன. தி.மு.கவின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த திரு.வைகோ, கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், வைகோவின் அரசியல் லாபத்திற்காக கலைஞரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க விடுதலைப்புலிகள் இயக்கம் திட்ட மிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறையிடமிருந்து வந்த தகவலாலும் வைகோவும் அவரது ஆதரவாளர்களும் 1993-ஆம் ஆண்டு நவம்பர்  10-ஆம் நாள் தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டனர். 

தாங்கள்தான் உண்மையான தி.மு.க என வைகோவும் அவரது ஆதரவாளர்களும் உரிமை கொண்டாடினர். போட்டி பொதுக்குழு கூட்டம் நடத்தினர். எனினும், கட்சியில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு, பிற ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கலைஞர் தலைமை யிலான இயக்கமே உண்மையான தி.மு.க என்றும், கட்சியும் கொடியும் சின்னமும் அவர் களுக்கே சொந்தம் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து 1994-ஆம் ஆண்டில் வைகோ தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க) என்ற புதிய அரசியல் கட்சி உருவானது. 

ஈழத்தமிழர் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாடு, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தொடர்ச்சியான ஆதரவு, தமிழீழம் ஒன்றே ஈழத் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பனவற்றில் ம.தி.மு.க உறுதியாக இருந்து வருகிறது. முல்லைப்பெரியாறு, கூடன்குளம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் போன்றவற்றிற்காக தொடர் போராட்டங்களை வைகோ நடத்தி  வருகிறார். அவர் மீது லஞ்ச-ஊழல் புகார்கள் கிடையாது. அவருடைய பேச்சாற்றல் இளைய தலைமுறையினரை பெருமளவு ஈர்த்துள்ளது. இத்தகைய நிறைவான அம்சங்கள் இருந்தாலும், தேர்தல் அரசியல் களத்தில் ம.தி.மு.க எடுத்த கூட்டணி முடிவுகளால் அக்கட்சிக்கு பெரியளவில் மக்கள் செல்வாக்கு கிடைக்கவில்லை. தி.மு.க, அ.தி.மு.க என இருகட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைப்பதும், குறைவான அளவிலேயே வாக்குவங்கியை வைத்திருப்பதும் தமிழக அரசியல் களத்தில் ம.தி.மு.கவின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டன. வைகோவுடன் சென்ற முன்னணித் தலைவர்களும் காலப்போக்கில் பிரிந்துவிட்டனர்.

அதே நேரத்தில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் தமிழகத்தில் தங்கள் வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொண்டே இருப்பதால் மாநிலத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் அக்கட்சிகள் முக்கிய இடத்தை வகித்து வருகின்றன. 1989, 1996, 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் மத்தியில் அமைந்த அரசில் தி.மு.கவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 1991, 1998 ஆகிய ஆண்டுகளில் அமைந்த மத்திய அரசில் அ.தி.மு.கவின் ஆதரவு முக்கியமானதாக இருந்தது. இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். குறிப்பாக, தி.மு.க கடந்த 1999 முதல் தொடர்ச்சியாக 13 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்து வருகின்ற கட்சியாகும். 

1989-இல் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு (ஞஇஈ) 27% இடஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப் படுத்துவதற்கு தூண்டு கோலாகவும் உறுதுணையாகவும் இருந்த அரசியல் இயக்கம் தி.மு.கவே. இதன்காரணமாக, தமிழகத்தில்  திராவிட இயக்கத்தால் வலுப்பெற்ற சமூக நீதிக் கொள்கை இந்திய அரசியலின் கொள்கையாக பேருருவம் எடுத்தது. இன்று, சமூக நீதியைப் பற்றிப் பேசாமல் இந்தியாவில் எந்த கட்சியும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. அதுபோலவே, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் முடிவு மேற்கொள்ளப்பட்ட பிறகு மாநிலக் கட்சிகளின் எழுச்சியும் வளர்ச்சியும் அதிகமாயின. தேசிய முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என தி.மு.க பங்கேற்ற மத்திய அரசின் கூட்டணி ஆட்சிகளும் இதற்குக் காரணமாயின. மத்தியில், ஒரு கட்சி ஆட்சி என்கிற ஏகபோகம் முடிவுக்கு வந்து, மாநில நலன்களை வலியுறுத்தும் கட்சிகளும் முக்கிய இடம் பெறும் காலம் உருவாகியுள்ளது. இதன் மூலமாக அந்தந்த மாநிலங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசின் திட்டங்கள் மூலம் விரைந்து நிறைவேற்றும் சூழல் வாய்த்துள்ளது.

தமிழுக்குச் செம்மொழித் தகுதி, சேது சமுத்திரத் திட்டத் தொடக்கம், காவிரி பிரச்சினைக்குத் தீர்வுகாண நடுவர் மன்றம்-காவிரி ஆணையம், நான்குவழி நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவேற்றம், தமிழகத்தில் அதிக முதலீட்டிலான தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி  உள்ளிட்டவை மத்திய அரசில் மாநிலக் கட்சியான தி.மு.க பங்கேற்றதன் விளைவுகளாகும். தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் தனிப்பட்ட ஆளுமையினால் இந்திய அரசியலில் பல பிரதமர்களும் ஜனாதிபதி களும் தேர்வு பெற்றுள்ளனர். வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், மன்மோகன்சிங் உள்ளிட்ட பிரதமர்களின் தேர்வில் கலைஞரின் பங்கு முக்கியமானது.  வாஜ்பாய் தலைமையிலான ஐந்தாண்டுகால ஆட்சியிலும் தி.மு.க.வின் பங்கு முக்கியமானது. வி.வி.கிரி, நீலம் சஞ்சீவரெட்டி, ஜெயில்சிங், இந்தியாவின் முதல் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன், முதல் பெண் குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல் உள்ளிட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்விலும் கலைஞரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும், தமிழகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றில் தி.மு.க பெரியளவில் எதையும் சாதிக்க முடியவில்லை.


காவிரி நதி நீர் விவகாரம், முல்லைப்பெரியாறு  அணைப் பிரச்சினை, தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள், கச்சத்தீவில் தமிழகத்திற்கான உரிமை, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தும் தாக்குதல், ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு இவற்றில் தேவையான மாற்றங்களும் நிரந்தரத் தீர்வு களும் ஏற்பட தி.மு.கவால் பெரியளவில் ஏதும் செய்ய முடியவில்லை. மத்திய அரசில் அ.தி.மு.க பங்கு வகித்த காலத்திலும், ஆதரவளித்த காலத்திலும் தன் சொந்த விருப்பு- வெறுப்புகளின் அடிப்படையிலேயே செல்வி. ஜெயலலிதா கவனம் செலுத்தினார். தமிழக நலன்கள் எதுவும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. தேசிய  அரசியலில் முக்கிய இடத்தைப் பெற வேண்டும் என தற்போது செயல்பட்டு வரும் செல்வி.ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, கச்சத்தீவை இலங்கை யிடமிருந்து மீட்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தி.மு.கவும் அ.தி.மு.கவுமே மாற்றி மாற்றி தமிழக அரசியலில் தங்களின் செல்வாக்கை நிலைநாட்டுவதால் அவற்றிற்கிடையிலான போட்டி மட்டுமே முன்னிலை பெறுகிறது. ஊடகங்களின் கவனமும் அதன் மீதே குவிகிறது. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தமிழகத்தில் தனிப்பட்ட செல்வாக்குடன் இல்லாததால் இரு பெரும் கழகங்களுக்கு சவாலான போட்டிகள் உருவாகவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தி.மு.க நடத்திய போராட்டங்கள் கொள்கைப் பூர்வமானதாகவும் இயக்கத்தின் அடித் தளத்தை பலப்படுத்தி வளர்ச்சி பெறக்கூடியதாகவும் அமைந்திருந்தது. தற்போது நடைபெறும் போராட்டங்கள் அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவிலேயே அமைந்துள்ளன. 

தேர்தல்-வாக்குவங்கி அரசியலில் ஈடுபடாத அமைப்பு, பெரியார் தொடங்கிய திராவிடர் கழகம். ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் தற்போது அது இயங்கி வருகிறது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துதல், 69% இடஒதுக்கீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்திருத்தம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற் கான சட்டம் உள்ளிட்டவற்றில் அதன் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஈழத்தமிழர் நலனுக்கான போராட்டங்கள், டெசோ அமைப்பு மறு உருவாக்கம், சாதி மறுப்பு-சுயமரியாதை திருமணங்களுக்கு ஊக்கம், பகுத்தறிவுப் பிரச்சாரம், நவீன ஊடகங்கள்-புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக திராவிட இயக்கக்  கொள்கைகளைப் பரவச் செய்தல் என திராவிடர் கழகம் (தி.க) செயல்பட்டு  வருகிறது. இக்கழகத்திலும் கருத்து மாறுபாடுகள்-தனி நபர் பிரச்சினைகள் காரணமாக பிளவுகள் ஏற்பட்டன.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த கருஞ்சட்டை   யினர் உருவாக்கியுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகம் (த.பெ.தி.க), திராவிடர் விடுதலைக் கழகம் (தி.வி.க) ஆகியவை பெரியார் கொள்கைகளை பரப்பும் பணியை செய்து வருகின்றன. கோவை ராமகிருஷ்ணன், ஆனூர் ஜெகதீசன், கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன் போன்றவர்கள் இந்த அமைப்புகளை வழிநடத்துகின்றனர். தீண்டாமைக் கொடுமையை நிலைநிறுத்தும் இரட்டைக் குவளை முறைகளுக்கு எதிரானப் போராட்டங்கள், ஈழத்தமிழர் நலனுக்கான ஆர்ப்பாட்டங்கள், தமிழகத்தின் உரிமைகளை முன்னிறுத்தும் செயல்பாடுகள் என இந்த அமைப்புகளின் பணி தொடர்ந்து வருகிறது. அரசியலில் பங்கேற்காக- பெரியார் வழியிலான தி.க., த.பெ.தி.க, தி.வி.க பேராசிரியர் சுப.வீ. தலைமையிலான திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் சிறிய அளவில் இருந்தாலும் அவற்றின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். 

ஒரு நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் நிலவிய சாதி ஏற்றத்தாழ்வு, உயர்சாதி ஆதிக்கம், ஒடுக்கப் பட்டோருக்கான உரிமை மறுப்பு, கல்வி மறுப்பு, வேலை வாய்ப்புகளில் பாரபட்சம், பெண்ணடிமைத்தனம் போன்ற பலவும் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பிறகு பெருமளவில் மாறியுள்ளன. சமூக நீதிப் பயணத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் பிறமாநிலங் களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சமூக சமத்துவம், மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், அரசியல் உரிமை, பெண்களுக்கான வாய்ப்புகள்-உரிமைகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, தனிநபர் வருமான உயர்வு ஆகியவை வளர்ச்சிப்பாதையிலேயே உள்ளன. இதில் திராவிட இயக்கத்தின் பங்கும் பணியும் அதிகம். அத்துடன் அரசியல் காழ்ப்புணர்வு, அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள், லஞ்ச-ஊழல் குற்றச் சாட்டுகள், சுயநல அரசியல் ஆகியவையும் திராவிட அரசியல் இயக்கத்தினால் வளர்க்கப்பட்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. 

பெரியார் போட்ட சமூக நீதிக்கான அடித்தளம், அண்ணா அமைத்துக் கொடுத்த அரசியல் பாதை இவற்றின் மீதான பயணம் எந்தளவில் இருக்கிறது என்பதே திராவிட இயக்கங்களை மதிப்பீடு செய்வதற்கான  அளவு கோலாகும். அதிலிருந்து அடிக்கடி விலகுவதும், வெகுதூரம் செல்வதும் தொடர்கதையாகிறது. இந்த நிலை மாறி, திராவிட இயக்கக் கொள்கைகளின் அடிப்படையிலான செயல்பாடுகளை திராவிட அரசியல் இயக்கங்கள் மேற்கொள்ளவேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகியவையெல்லாம் பெயருக்கு திராவிட என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு திராவிடக் கொள்கைக்கு நேரெதிராக செயல்பட்டு வருகின்றன. எனவே திராவிட  அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில் தி.மு.கவே திராவிடக் கொள்கைகளைப் பலப்படுத்தும் செயல்பாடுகளை வேகமாகவும் ஆழமாகவும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கொள்கை அடிப்படையில் ம.தி.மு.கவும் இதனைச் செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளது.

உலகளாவிலான அரசியல் பார்வை, புதிய தொழில் நுட்பங்கள் மூலமாகக்  கொள்கைப் பிரச்சாரம், நவீன ஊடகங்களை இயக்க வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல், சுயநலமில்லாத-சொந்த லாபம் தவிர்த்த அரசியல்  செயல்பாடு, தேர்தல் வெற்றிக்கு அப்பாற்பட்ட சமுதாய சீர்திருத்தப் பணி, கட்சியின் செயல்பாடுகள் குறித்த மறு ஆய்வுகள்-சுயபரிசோதனைகள், தவறுகளிலிருந்து பாடம் பெற்று சரியான பாதையில் பயணித்தல், பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளில் ஒருங்கிணைந்த செயல்பாடு இவை திராவிட இயக்கங்களின் எதிர்காலத் திட்டங்களாக அமையுமானால், நூறாண்டு கால  திராவிட இயக்கத்தின் அருமையும் பெருமையும் அடுத்த நூற்றாண்டிலும் தொடரும்.

(திராவிட இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடர் நிறைவடைகிறது)  

ad

ad