புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2012


க.பொ.த விஞ்ஞான பாட வினாத்தாள் வெளியாகியமை உண்மையே

19 வினாக்களுக்கும் புள்ளிகள்

* எழுத முடியாத மாணவருக்கு பெப்.9, 10இல் விசேட பரீட்சை
* சிலாபத்தில் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்கள் தொடர்பில் வெள்ளி முடிவு

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை விஞ்ஞான பாடத்தின் முதலாவது பகுதியில் 19 வினாக்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பிலேயே அனைத்து மாணவர்களுக்கும் 19 புள்ளிகள் வழங்கப்படவுள்ளன. கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், வெள்ளம் மற்றும் கடும்மழை காரணமாக கடந்த 17, 18ஆம் திகதிகளில் பரீட்சை எழுதமுடியாதுபோன மாணவர்களுக்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் விசேட பரீட்சைகளை நடத்த பரீட்சைத் திணைக்களம் முடிவுசெய்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மோசமான காலநிலை காரணமாக கணித மற்றும் அழகியற்கலை பரீட்சைகளுக்கு அன்றையதினம் தோற்றமுடியாது போனது. இவ்விரு பரீட்சைகளுமே குறித்த தினத்தில் நடத்தப்படவுள்ளன.
இதேபோன்று, கடும் வெள்ளம் காரணமாக சிலாபம் கல்வி வலயத்தில் பரீட்சைக்குத் தோற்றமுடியாதுபோனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக விசேட கூட்டமொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை பரீட்சைத் திணைக்களத்தில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் அப்பகுதி மாணவர்களுக்கு பரீட்சை வைப்பதற்கான திகதி தீர்மானிக் கப்படும்.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் விஞ்ஞான வினாத்தாளின் முதலாவது பகுதி வெளியானதை பரீட்சைத் திணைக்களம் நேற்று ஏற்றுக்கொண்டது. இரகசியப் பொலிஸாரின் தீவிர விசாரணையின் போது இது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜீ.புஷ்பகுமார தெரிவித்தார். இரகசியப் பொலிஸார் நேற்றும் பரீட்சைத் திணைக்களத்தில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். பரீட்சைத் திணைக்களத்தின் இரகசிய அச்சகப் பிரிவின் லித்தோ ஒப்பரேட்டர் ஒருவரே இந்த வினாத்தாளை வெளியே கொண்டுசென்றிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 17 வருடங்கள் கடமையாற்றிய இவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கான பரிந்துரைகளையும் பரீட்சைத் திணைக்களம் செய்துள்ளதாக புஷ்பகுமார தெரிவித்தார். இவருடன் தொடர்புடைய மேலும் நான்குபேர் கைதுசெய்யப்பட்டு விசாரணை க்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றுக்கூடிய பரீட்சைத் திணைக்களத்தின் கல்வியாளர் சபை குறித்த வினாத்தாளுக்குரிய பரீட்சையை மீண்டும் நடத்துவதா அல்லது புள்ளிகள் மட்டும் வழங்குவதா என்பது குறித்து நீண்டநேரம் ஆய்வு செய்ததாகவும், பரீட்சையை மீண்டும் வைப்பதானால் 5 இலட்சத்து 42 ஆயிரம் பேருக்கும் பரீட்சை நடத்த நேரிடும் என்ற காரணத்தினாலும், புள்ளிகள் மட்டும் வழங்குவதென்ற தீர்மானத்துக்கு வந்ததாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
வினாத்தாள் வெளியானமை குறித்து உடனடியாக தகவல்களை வழங்கியவர் களுக்கும், துரிதமாக விசாரணைகளை ஆரம்பித்து சந்தேகநபர்களை கைதுசெய்தமை குறித்து பொலிஸ் மா அதிபருக்கும், இரகசியப் பொலிஸாருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாகாண கல்விப் பணிப்பாளர்கள் அனைவருக்கும் பரீட்சைத் திணைக்களத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், நடந்து முடிந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் அமைச்சருடன் பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜீ புஸ்பகுமார, அமைச்சின் செயலாளர் கோட்டபாய ஜயரட்ண ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ad

ad