தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அன்று தொட்டு இன்று வரை பக்கபலமாக இருந்துவரும் பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்து சிங்கள கைக்கூலிகளும் ராணுவ புலனாய்வுப்பிரிவினரும் செயற்பட்டு வருகின்றனர்.
தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வை யாழ்.பல்கலைக்கழகத்தில் ராணுவத்தினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அனுஸ்டித்து தேசிய கடமையை மாணவர்கள் செய்திருந்தனர்.
இதன் பின் மாணவர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல்களை நடத்தியதோடு பெண்கள் விடுதிக்குள் நுழைந்து மாணவிகளின் நெற்றியில் துப்பாக்கியை வைத்தும் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.இதை கண்டித்து மாணவர்கள் கடந்த 28ஆம் திகதி கண்டன போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்த போது ஆயுதம் தரித்த ராணுவத்தினருடன்,பொலீசாரும்,புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து கொடூரமான தாக்குதலை மாணவர்கள் மீது நடத்தியிருந்தனர் இதில் பல மாணவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
இதையடுத்து இது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களிலும், மனிதநேய அமைப்புக்களின் காதுகளுக்கும் சென்றிருந்தபோது அமெரிக்கா உட்பட்ட பல நாடுகளும், தூதரகங்களும் தமது கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.இதையடுத்து தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் முகமாக முக்கியமான சில மாணவர்கள் மீது ரெலோ அமைப்பின் அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி நான்கு மாணவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தனர். பெற்றோல் குண்டு வீசப்பட்டது தொடர்பான விசாரணைக்கே இவர்களை தாம் கைது செய்வதாகவும் கோப்பாய் நீதிபதியிடம் இவர்களை கூட்டிச்சென்று விசாரித்த பிறகு இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பொலீசாரால் கூறப்பட்டிருந்த போதும் இதுவரையில் அந்த மாணவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்று ஈழதேசம் இணைய யாழ்.பல்கலைக்கழக செய்தி சேகரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மாணவர்களின் தேசிய செயற்பாடுகளை சிதைக்கும் முகமாகவே ராணுவத்தினருடன் சேர்ந்தியங்கிவரும் சிறி ரெலோ அமைப்பினர் தமது அலுவலகத்தின் மீது கடந்த 29.11.2012 நல்லிரவில் பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டை கொடுத்துள்ளனர்.இதில் சம்பந்தப்பட்டதாக முன்னர் மாணவ ஒன்றியத்தில் இருந்துள்ள மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,அவர்கள் தற்போது கல்வியை முடித்து பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிவிட்டனர்.
மற்றைய நால்வரும் தற்போது பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் க.ஜனமேயன்(கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்), தர்சானந்(கலைப்பீட மாணவன்,யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய செயலாளர்), சுதர்சன்(மருத்துவபீட மாணவன்), பரந்தாமன் விஞ்ஞான பீட மாணவன்) ஆகிய நான்கு மாணவர்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நான்காம் வருட மாணவர்கள்.
அத்தோடு குற்றம் சுமத்தப்பட்டுள்ள 7 பேரில் பலர் சம்பவ தினத்தன்று யாழில் இருக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.