பேச்சுவார்த்தை ஒன்றுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அவசர அழைப்பு ஒன்றை அனுப்பியிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள்
தெரிவித்தன. நாளைய தினம் இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பின் ஆறு பேர் கொண்ட பிரதிநிதிகள் இதில் பங்குகொள்வார்கள் எனவும் தெரிகின்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ள நிலையில், அதே தினத்திலேயே இந்தச் சந்திப்புக்கு மகிந்த அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இந்தப் பேச்சுக்களில் கலந்துகொள்ளவிருக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பெயர்களைத் தருமாறும் சிறீலங்கா ஜனாதிபதி செயலகம் சம்பந்தனிடம் கேட்டிருந்ததாகத் தெரிகின்றது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ஏ.எம்.சுமந்திரன் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.செல்வராஜா ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்குகொள்வார்கள் எனத் தெரிகின்றது.

வழமையாக சம்பந்தனை தனியாகவே சந்தித்துப் பேச்சுக்களை நடத்தும் மகிந்தர், இம்முறை கூட்டமைப்பின் தூதுக்குழுவை அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் பாரிய அளவிலான எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.