புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2012


தமிழர் பகுதிகளிலிருந்து சிங்கள ஆக்கிரமிப்புப் படை முற்றாக வெளியேற்றப்படுவதே ஒரே வழி!– பிரதமர் உருத்திரகுமாரன்
தமிழர் தாயகத்தில் சிங்களப் படையினர் நிலைகொண்டிருக்கும் வரை தமிழ் மக்களுக்கு ஜனநாயகவெளியோ பாதுகாப்புணர்வோ கிடைக்கப்போவதில்லை. சிங்களப் படையினர் தமிழர் தாயகப் பகுதியில் இருந்து முற்றாக வெளியேறல் அவசியமானதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
சிங்களப் படைகள் வெளியேறும் வரை இடைக்கால ஏற்பாடாக அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். இதற்கான அனைத்துலக மட்ட ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலைக்காக வட தமிழீழத்தின் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த உண்ணாநிலைப் போராட்டத்திற்கு வலுவூட்டவும் தாயக மக்களுக்கு புலம்பெயர் மக்களின் தோழமையினை வெளிப்படுத்தவும் லண்டனில் பிரித்தானியப் பிரதமர் பணிமனையின் முன்னால் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
காலை 8மணி முதல் இரவு 8 மணி வரை இடம்பெற்றிருந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் கோரிக்கையடங்கிய மனுவொன்றும் பிரத்தானிய பிரதமர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இக்கவனயீர்ப்பு அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தினை மையப்படுத்தி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறிலங்கா படையினரானல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து அவர்களை விடுதலை செய்யக் கோரியும் சிங்கள ஆக்கிரமிப்புப் படையினரைத் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து முற்றாக வெளியேறக் கோரியும் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் குறித்து அமைந்த அறிக்கையின் முழுவிபரம்:
தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்களப்படையினர் நிலை கொண்டிருக்கும்வரை தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு எதுவித உத்தரவாதமுமில்லை என்பதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கைது விவகாரம் மீண்டுமொருமுறை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் சிங்களம் தமிழ் மக்கள் மீது நடாத்திய இனஅழிப்புக்கு உலக அரங்கில் நாம் நீதி கோரி வரும் இக்காலகட்டத்தில் சிங்களத்தின் தமிழர் தேசம்மீதான இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
பல்கலைக்கழக மாணவர்கைதும் விடுவிக்கப்பட்ட போராளிகளின் மீள்கைது நடவடிக்கைகளும் ஈழத் தமிழர் தேசத்தின் மீதான இராணுவ ஒடுக்குமுறையினை சிங்களம் தீவிரப்படுத்துவதை வெளிப்படுத்தி வருகின்றன.
முள்ளிவாய்க்காலில் சிங்களம் நிகழ்த்திய இன அழிப்புக்கும் தற்போதய காலகட்டத்து சிங்களத்தின் இனஅழிப்புத் திட்டத்துக்கும் இடையே அணுகுமுறை வேறுபாடு இருக்கிறது. ஆனால் இலங்கைத்தீவில் ஈழத் தமிழர் தேசத்தை இல்லாதொழித்தல் என்பதுதான் இந்த இனஅழிப்புத் திட்டத்தின் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது.
முள்ளிவாய்க்காலில் போரைச் சாக்காக வைத்து பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்களைக் கொன்று தள்ளிய சிங்களம் இப் படுகொலைகளின் ஊடாக தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்தும் வேட்கையினை இல்லாதொழிக்க முயன்றது. தமக்கென ஒரு தனியரசினை அமைத்துக் கொள்ளும் பெருவிருப்பினை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அகற்றிவிட முனைந்தது.
தமிழர் அடையாள அரசியலை தமிழர் மத்தியில் இல்லாதொழித்து சிங்கள பெரும் சமூக அரசியலுக்குள் தமிழர் அரசியலைக் கரைக்க முனைந்தது. இருந்த போதும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வை சிங்களத்தால் ஆட்டம் காணச் செய்யமுடியவில்லை.
தற்போது தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்றவாறு சிங்களம் மேற்கொள்ளும் இனஅழிப்புத் திட்டத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு. ஒன்று, ஈழத் தமிழர் தேசத்தின் தேசத் தகைமையினை அவர்களிடமிருந்து உரித்தெடுத்து அவர்களை உதிரித் தமிழர்கள் ஆக்குவது.
இரண்டாவது இவ்வாறு உதிரிகளாக்கப்பட்ட தமிழர்களைச் சிங்கள மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வைத்து இனக் கபளீகரம் செய்வது. இவை ஈழத் தமிழர் தேசத்தை இலங்கைத்தீவில் இல்லாது அழிக்கும் நோக்கத்தை தன்னகத்தே கொண்டு வடிவமைக்கப்பட்ட இனஅழிப்புத் திட்டங்களாகும்.
இந்த இனஅழிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழர் தாயகத்தின் ஜனநாயகவெளியினை முற்றாக இல்லாதொழித்தல் சிங்களத்துக்கு அவசியமாக இருக்கிறது. இந்த அவசியத்தின் பாற்பட்டுத்தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலும் கைதுகளும் இடம்பெறுகின்றது என்றே நாம் கருதுகிறோம்.
ஒரு சமூகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனநாயகத்துக்காகவும் உரிமைகளுக்காகவும் துணிச்சலாக முன்னின்று போராடி வருகின்றமையினை நாம் உலகளாவிய ரீதியில் காண்கிறோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்துக்கும் இந்த வரலாறு இருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வௌ;வேறு காலகட்டங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ சமூகம் தமிழீழ மக்களின் உரிமைக் குரலைப் பிரதிபலித்து நின்று போராடி வந்திருக்கிறது.
ஈழத் தமிழர் தேசத்தின் போராட்டக் குரலின் தார்மீகக் குறியீடாக வெளிப்பட்ட 'பொங்குதமிழ்' எழுச்சியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்திடமிருந்து இராணுவ ஆக்கிரமிப்புக்கு மத்தியில் இருந்துதான் எழுந்தது.
தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் மீதான சிங்களத்தின் தாக்குதல் தமிழர் தாயகத்தில் ஜனநாயகவெளியினை முற்றாக இல்லாதொழித்து, தமது இனஅழிப்புத் திட்டத்துக்கு எழக்கூடிய எதிர்ப்பை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற முனைப்பை கொண்டதாகத் தெரிகிறது.
இதனால் தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் சிங்களத்தின் இத்தகைய ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகைளுக்கு எதிராகத் தீவிரமாகப் போராட வேண்டியது அத்தியாவசியமாகும்.
இப் போராட்டம் அடிப்படையில் ஜனநாயகக் கோரிக்கையின் பாற்பட்டதால் சிங்கள மக்கள் உட்பட இவ் ஜனநாயக  வழியிலான போராட்டங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய உலக சிவில் சமூகத்தின் ஆதரவினையும் பெற்று நாம் போராட்டங்களை முன்னெடுத்தல் அவசியமானதாகும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் மீதான சிங்களத்தின் தாக்குதலைக் கண்டித்து புலத்தில் தமிழ் மக்களால் நடாத்தப்படும் போராட்டங்கள் தாங்கள் தனித்து விடப்படவில்லை என்ற எண்ணத்தையும் புலத்தின் தோழமை உணர்வையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்துக்கும் தாயக மக்களுக்கும் வழங்கும்.
புலத்தில் இத்தகைய போராட்டங்களை முன்னின்று முன்னெடுக்கும் தமிழ் இளையோர் அமைப்பினை இத் தருணத்தில் பாராட்டுவதுடன் இப் போராட்டங்களுக்கு தனது முழுமையான ஆதரவினையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இப் போராட்டங்களை மேலுமொரு மட்டத்தில் விரிவுபடுத்தும் முகமாக சமூக ஊடகங்களின் ஊடாக இப் போராட்டங்களை முன்னெடுக்கும் பல்வேறு வழிமுறைகளையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்க இளையோர் அணி மேற்கொண்டு வருகிறது. இதனை தமிழ் இளையோர் அமைப்புடன் இணைந்தவாறு மேற்கொள்வதற்கான முயற்சிகளையும் இளையோர் அணி மேற்கோண்டு வருகிறது.
தமிழர் தாயகத்தில் சிங்களப் படையினர் நிலைகொண்டிருக்கும்வரை தமிழ் மக்களுக்கு ஜனநாயகவெளியோ பாதுகாப்புணர்வோ கிடைக்கப் போவதில்லை. ஓநாய்களிடமிருந்து ஆடுகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கப் போவதில்லை. ஓநாய்கள் சூழ நிற்கும் போது ஆடுகள் எவ்வாறு பாதுகாப்பை உணரமுடியும்? இதனால் சிங்களப்படையினர் தமிழர் தாயகப்பகுதியில் இருந்து முற்றாக வெளியேறல் அவசியமானது.
சிங்களப்படைகள் வெளியேறும் வரை இடைக்கால ஏற்பாடாக அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். இதற்கான அனைத்துலகமட்ட ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்கும்.
இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad