புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2012


பந்தல் சேதமாக்கப்பட்ட போதிலும்,அடக்குமுறைக்கு எதிராக த.தே.கூட்டமைப்பின் உண்ணாவிரதம் ஆரம்பம்
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் அப்பாவி பொதுமக்களை காரணமின்றி கைது செய்து, தடுத்து வைத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று காலை 7 மணியளவில் இவ் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியது.
பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் அப்பாவித் தமிழர்கள் கைது செய்யப்படுதல் உடன் நிறுத்தப்பட்டு தமிழர் பகுதி எங்கும் இயல்பு நிலை உருவாக்கப்பட வேண்டும்,
தமிழர் பிரதேசத்தில் இராணுவ பிரசன்னம் நீக்கப்பட வேண்டும்,
சிவில் நடவடிக்கைகளில் இராணுவ படைகளின் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும்,
நில ஆக்கிரமிப்புக்களும் அபகரிப்புக்களும் நிறுத்தப்பட வேண்டும்.
தமிழர் பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்,
தமிழ் மக்களுக்கு கெளரமான ரீதியான அரசியல் தீர்வு உடன் முன்னெடுக்கப்பட வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அந்த இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையினை இனந்தெரியாதோர் நேற்றிரவு சேதப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், பந்தலின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களை கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்து, குறித்த இடமெல்லாம் கழிவு நீரை ஊற்றியுள்ளனர். எனினும் மீண்டும் இடத்தை சுத்தம் செய்து உண்ணாவிரதப் போராட்டதை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சீ.வீ.கே. சிவஞானம் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் இவ் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு-
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களையும், பொதுமக்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பொலிஸாரினதும், படைப்புலனாய்வாளர்களினதும் அடாவடிகள் தொடர்கின்றன.
ஏற்கனவே உண்ணாவிரதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தகரப் பந்தலை இரவோடு இரவாக இராணுவத்தினர் பிடுங்கி கழிவு வாய்க்காலில் வீசிவிட்டனர்.
இந்நிலையில் மீளவும் உண்ணாவிரதத்திற்கான பந்தலை அமைப்பதற்கு முயற்சிக்கப்பட்ட போது, அங்கிருந்த பொலிஸார் பந்தல் அமைக்கக் கூடாதெனவும், பந்தல் அமைப்பதற்கு முன் அனுமதி பெறப்படவேண்டும் எனவும் வாதிட்டுக் கொண்டிருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு, விடயம் தொடர்பில் தெரியப்படுத்திவிட்டு பந்தலை அமைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இதேபோல் படைப்புலனாய்வாளர்களும் புகைப்படக் கருவிகளுடன் அந்தப் பிரதேசத்தை பருந்துகள்போல் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் முழுதான அடக்குமுறைக்கு கீழேயே இந்த உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகவுள்ளது.

ad

ad