புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2012


அலரி மாளிகையில் இருந்து வந்த அவசர அழைப்பின் மர்மம் என்ன?
ஒரு கட்டத்தில் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அரசாங்கத்திற்கு அவசியமாகவே இருக்கும். அவசர சந்திப்புக்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமிருந்து கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது
.

கடந்த 2ம் திகதி அனுப்பப்பட்ட இந்த அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த புதன்கிழமை இந்தச் சந்திப்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கொழும்புக்கு வெளியே இருந்த காரணத்தினால் உடனடியாக சந்திப்புக்கு செல்ல முடியவில்லை என்று காரணம் கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த அவசர சந்திப்பின் அடிப்படை நோக்கத்தை தெரிந்து கொள்வதற்கான கால அவகாசத்தைப் பெறுவதற்காகவே இந்தச் சந்திப்பை கூட்டமைப்பு தவிர்த்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.
எனினும் இந்த வாரம் சந்திப்புக்கான ஒரு திகதி குறிக்கப்பட்டு சந்திப்பு இடம்பெறும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அவசரமாக சந்திக்க வேண்டிய தேவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஏன் ஏற்பட்டது என்பதே இப்போதுள்ள முக்கியமான வினாவாகும்.
கடந்த மாதம் முதல் வாரம் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார் ஜனாதிபதி.
அதன்பின்னர் நடைபெற்ற தேனீர் விருந்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. சம்பந்தன், சுமந்திரன், பொன். செல்வராசா ஆகியோர் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உங்களுடன் ஆறுதலாகப் பேசவேண்டியுள்ளது. நேரம் வரும்போது அழைப்பு விடுக்கின்றேன் என்று கூறிவிட்டுச் சென்றிருந்தார். ஆனால் எதைப்பற்றிப் பேசவேண்டும் என்பதை ஜனாதிபதி கூறியிருக்கவில்லை.
அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் என்ன கூறினார் என்பதனை முற்றாகவே மறைத்து விட்டன பெரும்பாலான ஊடகங்கள் .
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மகிழ்ச்சியுடன் உரையாடுவது போன்ற படத்தை மட்டும் அவை முன்பக்கத்தில் பெரிதாகப் பிரசுரித்திருந்தன.
அது ஒரு வகையில் அரசியர் இராஜதந்திரமாகவே பார்க்கப்படுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அவசரமாகப் பேசுவதற்கு அப்போது ஜனாதிபதியிடம் ஒன்றும் இருக்கவில்லை என்பது தான் ஆச்சரியமானது.
ஆறுதலாகப் பேச வேண்டிய விடயங்களாகவே நாட்டின் பிரதான பிரச்சினைகள் எல்லாம் அப்போது அவர் முன் தெரிந்துள்ளன.
போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத தமிழரின் பிரச்சினைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு குரல் எழுப்பி வருகிறது.
நின்று போன பேச்சுக்களை மீளத் தொடங்கி நிரந்தர அரசியல் தீர்வைக் காணுமாறு வலியுறுத்தி வருகிறது.
வடக்கை இராணுவ நெருக்குவாரங்களில் இருந்து விடுவித்து ஜனநாயக ரீதியில் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அது கோரி வருகிறது.
இடம்பெயளர்ந்த மக்களின் பிரச்சனைகள், உயர் பாதுகாப்புவலய பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் விடுதலை என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் குறித்து பேசவேண்டிய நிலை இருந்தபோதும் ஆறுதலாகப் பேச வேண்டியுள்ளதாக கூறிவிட்டுப் போயிருந்தார் ஜனாதிபதி.
கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்தே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பேசுவதற்கான அழைப்பு வந்தது. அது ஆறுதலான அழைப்பு அல்ல. அவசர அழைப்பு.
எதைப்பற்றி பேசுவதென்றே தெரிவிக்கப்படாத அழைப்பே அது.
ஆனாலும் இந்த அழைப்பு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளைச் சார்ந்ததாக இருக்கும் என்'று மட்டும் முற்றிலும் நம்பிவிட முடியாத சூழலே தற்போது உள்ளது.
ஏனென்றால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து பேசுவதற்காக கிடைத்த சந்தர்ப்பங்களை அரசாங்கம் தவற விட்டதே வரலாறு.
தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பேச்சுக்களை எல்லாம் இடைநிறுத்திவிட்டு தெரிவுக்குழுவுக்கு வந்தால் பேசலாம் என்று நிபந்தனை விதித்த அரசாங்கத்துக்கு இப்போது திடீரென தமிழர் பிரச்சினைகளின் மீது திடீர் கரிசனை ஏற்பட்டிருக்கும் என்று நம்புவது கடினமானது.
எப்போதெல்லாம் நெருக்கடிகள் ஏற்படுகின்றனவோ அப்போதெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசுகிறோம் என்று காட்டிக்கொண்டு தப்பிக்கொள்ள அரசாங்கம் முயன்றிருக்கிறது.
அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா செல்வதற்கு முன்னதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை அழைத்துப் பேசியிருந்தார்.
கடைசியாக இந்தியப் பயணத்துக்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அலரி மாளிகைக்குச் சென்றபோதும் புதிதாக எந்தத் திருப்பமும் ஏற்பட்டு விடவில்லை.
அதை வைத்து இந்தியாவில் தனது நெருக்கடியைச் சமாளித்துக் கொண்டார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
அதேவேளை, அந்தச் சந்திப்பால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு புகைச்சல் ஏற்பட்டது தான் மிச்சம்.
இப்போது மீண்டும் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பின்னாலும் அரசாங்கத்தின் நலன் ஏதாவது இருக்குமே தவிர தமிழர் பிரச்சினை சார்ந்த ஒன்றாக இருக்குமா? என்பது சந்தேகம் தான்.
இப்போது அரசாங்கம் பல பக்க நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
நீதித்துறை விவகாரத்திலும் சரி அரசியல் தீர்வு மனித உரிமைகள் பொறுப்புக் கூறல் என்று அரசின் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அமெரிக்காவில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது.
அடுத்த ஆண்டு அரசாங்கத்துக்கு கடினமானதொன்றாக அமைவதற்கு வாய்ப்புள்ள சூழலில் சாட்சிக்காரன் காலில் வீழ்வதை விட சண்டைக்காரன் காலில் விழ அது திட்டமிடலாம்.
அதற்காக அரசாங்கம் இறங்கி வரப் போகிறது என்று அர்த்தமல்ல.
தனது சிக்கல்களைத் தீர்ப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை அது பயன்படுத்திக் கொள்ள எத்தனிக்கலாம். இது ஒரு அனுமானமே தவிர இறுதியானதல்ல.
ஒரு கட்டத்தில் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  ஆதரவு அரசாங்கத்துக்கு அவசியமாகவே இருக்கும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலரி மாளிகையில் தமிழரின் நலனை விலைபேசும் ஒரு முடிவை எடுக்காது என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் வலுவாகவே உள்ளது.
இத்தகைய பின்னணியில் அரசாங்கம் தனது நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்தச் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தால் அதற்கான வாய்ப்பு கடந்த காலங்களைப் போல இலகுவானதாகக் கிடைத்து விடாது.
ஹரிகரன்

ad

ad