யாழ். பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் தாக்கப்பட்டதை கண்டித்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், உதயன் ஊடகவியாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும் எதிர்வரும் திங்கட்கிழ
மை (03) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்தவிருந்த போராட்டத்தை அடுத்த நாள் 4ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நடாத்தவுள்ள போராட்டத்துடன் இணைந்து நடாத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்

இன்று (01) காலை 11.30 மணியளவில் தமிழரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரே நோக்கத்துக்காக இரு கட்சிகள் தனித்தனியே செய்யும் போராட்டத்தை விட ஒரே நாளில் ஒருங்கிணைந்து நடாத்துவதே சிறந்ததும் தாக்கமுடையதாகவும் இருக்கும் என கருதப்படுவதனால் எல்லோரும் சேர்ந்து 4ம் திகதியே நாடாத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே கட்சி மற்றும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சகல பொது நிறுவனங்களும், பொது அமைப்புக்களும், இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டு யாழ். பல்கலைக்கழக செயற்பாடுகளில் இராணுவமும் பொலிசாரும் தலையிட்டதை கண்டிப்பதுடன் மாணவர்களினதும், பல்கலைக்கழகத்தினதும், சிவில் சமூகத்தினரதும், ஜனநாயக செயற்பாடுகளில் இராணுவமும் பொலிசாரும் தலையிடக்கூடாது என கோரி நாம் ஒன்று சேர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டிக்கொள்வதாக அவர் கூறினார்.

அதே நேரம் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளரையும் இரு மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.