புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2012


கைதான பல்கலை. மாணவர்களை துணைவேந்தர் நேரில் பார்வையிட்டார்! பெற்றோர்களும் உடன் சென்றிருந்தனர்
யாழ். பொலிசாரால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
வவுனியாவில் பயங்கரவாத தடுப்பு குற்றப்பிரிவில் தடுத்து வைக் கப்பட்டுள்ள மேற்படி நான்கு மாணவர்களையும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையிலான குழுவினர் நேற்றுக் காலை நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போது மாணவர்களின் பெற்றோர்களும் உடன் சென்றிருந்தனர்.
விவசாயத்துறை பீடாதிபதி பேராசிரியர் கு. மிகுந்தன், தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் கி. விசாகரூபன் அடங்கிய குழுவினர் நேற்று வவுனியாவுக்குச் சென்று சந்தித்து உரையாடினர். இச் சந்திப்பின் போது குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் உடனிருந்தனர்.
கடந்த நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினத்தில் யாழ் பல்கலைக் கழகத்தில் தீபம் ஏற்றியமை மற்றும் மாவீரர் தினச் சுவர் ஒட்டிகள் ஒட்டப் பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக விடுதிக்குள் படையினர் சென்றதை யடுத்து, நவம்பர் 28ம் திகதி யாழ் பல் கலைக்கழக மாணவர்கள் பல் கலைக்கழக வளாகத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாண வர்கள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே வரமுற்பட்டபோது, அங்கு நின்ற பொலிசாரும் இராணுவத்தினரும் மாணவர்களை தாக்கினர். இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த் (வயது 24) -  மருத்துவபீட மாணவனான கணேசமூர்த்தி சுதர்சன் (வயது 22) - கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான கனகசுந்தரசுவாமி ஜெனமேஜெயன் (வயது 24),  விஞ்ஞான பீட மாணவனான சண்முகம் சொலமன் (வயது 24) ஆகிய நான்கு மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், மூன்று தொடக்கம் ஏழு நாட்களுக்குள் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் துணைவேந்தரிடம் உறுதியளித்தனர்.
பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்து பல்கலைக்கழக செயற்பாடுகள் ஒழுங்காக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைவேந்தர் தலைமையிலான குழுவினர் அங்கு கோரிக்கை விடுத்தனர்.
அதேவேளை மாவீரர் தினத்தில் பல்கலைக்கழகத்தில், அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad