புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2013



அன்று இரவு உண்மையில் என்ன நடந்தது ?


பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து, இரண்டு ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று, அதில் ஒருவரின் தலையை துண்டித்து சென்ற, சம்பவத்தை அடுத்து, எல்லை பகுதியில் கடும் பதட்டம் நிலவுகிறது. எல்லையோர இந்தி

ய ராணுவத்தினர், கொந்தளித்த வண்ணம் உள்ளார்கள். அடுத்த நடவடிக்கை என்ன என்று ஒரு பக்கமாக ராஜதந்திர வட்டாரங்களில் ஆலோசனை நடக்கிறது. மறு பக்கத்தில், ராணுவத் தலைமையகத்தில் ஆலோசனை நடக்கிறது. ஆனால், களத்தில் உள்ள இந்திய ராணுவ படையணியினர், “பதிலடி கொடுக்க வேண்டும்” என்ற துடிப்பில் உள்ளார்கள். தமது இரு சக ராணுவ வீரர்களும் கொல்லப்பட்ட விதம், இவர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

இந்த சம்பவம் நடந்தபோது, பூஞ்ச் பகுதியில் உள்ள மெந்ஹார் செக்டர் 8 காவல் அரண்களில், அதிகாலை 2 மணி வரை துப்பாக்கிச் சத்தம் கேட்டவண்ணம் இருந்தது.இப்போது, துப்பாக்கிச் சத்தம் இல்லை. ஆனால், இரவு நேரங்களில் எதுவும் நடக்கலாம் என இரு தரப்பு ராணுவமும் தயாராக உள்ளது. காரணம், இரவில் எதிரே சில மீட்டருக்கு அப்பால் எதுவுமே தெரியாத அளவில் அங்கு மூடுபனி காணப்படுகிறது. இந்த மூடுபனி மறைவில்தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள், 100 மீட்டர் தூரம் வரை ஊடுருவி, இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்கிறார்கள் அங்கிருந்த இந்திய ராணுவ வீரர்கள். கீழேயுள்ள போட்டோவில், பூஞ்ச் பகுதியில் உள்ள மெந்ஹார் செக்டர் காவல் அரண்கள், மூடுபனி நேரத்தில்.

நேற்று முன்தினம், காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள, மெந்ஹார் செக்டர் எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். இந்திய ரோந்துப் படையில் இருந்த ஒருவர் பின்னர் அளித்த பேட்டியில், “அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்டோம். நாம் கவர் எடுத்துக் கொள்ளுமுன், அவர்கள் (பாகிஸ்தான் ராணுவம்) துப்பாக்கி ரேஞ்சுக்குள் வந்துவிட்டதை உணர்ந்தோம்” என்றார்.பாகிஸ்தான் படையினர், இந்தியப் படையினரை நோக்கி சுடத் தொடங்கினர்.

தாக்குதல் முடிந்தபின், பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர், “இந்திய வீரர்களை, நாம் தாக்கியதாக வெளியான தகவல் உண்மை அல்ல. பாகிஸ்தான் தரப்பில் இது போன்ற தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என, இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து முறையாக விசாரித்து, உறுதி செய்யும்படியும், இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக, இந்திய அதிகாரிகள், பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்” என்றார். ஆனால், அங்கேயிருந்த இந்திய ராணுவத்தினர், தாக்குதல் நடத்தியவர்கள் பற்றிய தகவல்களை வைத்திருக்கிறார்கள். 

பாகிஸ்தான் இது பற்றி எதுவும் தெரியாது என்று கூறுவதை மறுக்கும் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை), “இந்திய எல்லைக்குள் சுமார் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஊடுருவினர். உள்ளே வந்தவர்கள் எந்த படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என்பது எமக்கு தெரியும். அவர்கள், பாகிஸ்தானின் 29-வது பலோச் ரெஜிமென்டை சேர்ந்தவர்கள். இப்போது, தமது படைக்கும், இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்வது, வடிகட்டிய பொய். அந்தப் படைப்பிரிவின் தளபதியை அழைத்து சர்வதேச விசாரணை செய்தால், விஷயம் அம்பலமாகும்” என்கிறார், ஆத்திரத்துடன். சம்பவ நேரத்தில், இந்திய ராணுவ தரப்பில் அந்தப் பகுதியில் ரோந்து சென்றவர்கள், 13-வது ராஜ்புத்தன ரைஃபிள் படைப்பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களில் 6 பேர் கொண்ட குழு ஒன்றுதான், ரோந்து சென்றிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் திடீரென சுட்டபோது, இவர்கள் திருப்பி சுடுவதற்குமுன் முன்னே சென்ற ஹேம்ராஜ், சுதாகர் சிங் என்ற இரண்டு இந்திய வீரர்கள் பலியாகினர்.

உடனடியாக மற்றைய நான்கு இந்திய வீரர்களும் கவர் எடுத்து சுடத் தொடங்கிய நேரத்தில், அதிக எண்ணிக்கையில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரால் முதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட இருவரில் ஒரு வீரரது தலையை வெட்ட முடிந்துள்ளது.பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த இரக்கமற்ற நடவடிக்கை, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், எல்லை பகுதியில் இந்திய ராணுவத்தினர் மத்தியில் கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கீழேயுள்ள போட்டோ, கொல்லப்பட்ட இந்திய வீரர் ஹேம்ராஜின் உடலை அவரது ராணுவ சகாக்கள் தோளில் தூக்கிவரும் காட்சி. இதையடுத்து, டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீருக்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி, அவரை நேரில் வரவழைத்தது. அவரிடம், பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூர செயலுக்கு, கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசின் கண்டனத்தை தமது அரசுக்கு அனுப்பி வைப்பதாக அவர் தெரிவித்துவிட்டு சென்றார்.



ad

ad