புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2013



புதிய பிரதம நீதியரசரால் தொடர்ந்து நிலைக்க முடியுமா?

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எதைச் செய்ய நினைத்ததோ, அதைச் செய்துவிட்டது.பிரதம நீதியரசர் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவுக்குப் பதிலாக, முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவி நீக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஆரம்பமானபோதே, அது எங்குபோய் முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஏனென்றால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்ட ஓர் அரசாங்கத்துக்கு முன்னால்- ஆண் ஒருவரைப் பெண் ஆக்குவதைத் தவிர மற்றெல்லாவற்றையும் தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் செய்ய முடியும் என்று கூறிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை விடவும், மிகையான அதிகாரங்களைக் கொண்டுள்ள தற்போதைய ஜனாதிபதிக்கு முன்னால்- எந்த நீதியும் எடுபடாது என்பது சிறுபிள்ளைக்குக் கூட விளங்கக் கூடியதொன்று தான்.

அரசாங்கத்தின் சொற்படி தலையாட்ட முடியாத எவரும், பிரதம நீதியரசர் பதவியில் இருக்கக் கூடாது என்ற கொள்கை, இப்போது வெளிப்படையாக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் கடுந்தொனியில் பேசப்பட்ட போதும், இதற்கு எதிராக குரல் கொடுக்கப்பட்ட போதும், பிரதம நீதியரசரைத் தூக்கியெறியும் முடிவை அரசாங்கம் கடைசிவரை மாற்றிக்கொள்ளவேயில்லை. ஒரு கட்டத்துக்கு மேல், அரசாங்கத்தினால் கூட அந்த முடிவில் இருந்து பின்வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

அதை இதற்கு முந்திய பத்தியில் விரிவாகப் பார்த்திருந்ததால், இங்கு விபரிக்கத் தேவையில்லை.

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்கவை நீக்குவது எப்போதோ தீர்மானிக்கப்பட்டு விட்ட விவகாரம் என்ற நிலையில், இந்தச் சர்ச்சைகள் அதனுடன் முடிவுக்கு வந்துவிடக் கூடும் என்றே பலரும் நம்பினர்.

அதாவது, ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவி நீக்குவதுடன் அரசாங்கம் நின்றுகொள்ளும் என்ற நம்பிக்கை அரசதரப்பிலேயே பலருக்கு இருந்தது. ஆனால், அதற்கு அப்பாலும் இந்தச் சர்ச்சைகள் நீண்டு செல்லப்போகின்றன என்பது இப்போது உறுதியாகிவிட்டது.

அதாவது, பிரதம நீதியரசர் பதவிக்கு - முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டது தான் இப்போதைய சர்ச்சைகளின் மூலம். இப்போது தொடங்கியுள்ளது அதிகாரச் சண்டையின் இரண்டாவது கட்டம்.

ஷிராணி பண்டாரநாயக்க, தனது அதிகாரபூர்வ வசிப்பிடத்தில் இருந்து வெளியேறும் போது, இன்னமும் தானே சட்டபூர்வமான பிரதம நீதியரசர் என்று குறிப்பிட்டிருந்தார். அவர், தனது பதவிநீக்கம் முறைப்படியானது அல்ல என்பதை குறிக்கும் வகையில் அவ்வாறு கூறியிருந்தாலும், இன்னொரு வகையில், மொஹான் பீரிசின் நியமனம் சட்டபூர்வமானது அல்ல என்பதை வெளிப்படுத்துவதாகவும் கருதிக்கொள்ளலாம்.

மொஹான் பீரிஸ் தவிர்ந்த வேறொருவர்- அதாவது உயர்நீதிமன்றத்தின் மற்றொரு நீதியரசரை பிரதம நீதியரசர் பதவிக்கு நியமித்திருந்தால் கூட, இப்போதைய பல சிக்கல்கள் ஓரளவுக்கேனும் சுமுக நிலையை எட்டியிருக்கக் கூடும். ஆனால், அதற்கான ஒட்டுமொத்த வாய்ப்புகளையுமே, இந்த ஒரு நியமனம் கெடுத்துவிட்டுள்ளது.

ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்க முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே, மொஹான் பீரிஸ் தான் அடுத்து பிரதம நீதியரசராக நியமிக்கப்படப்போகிறார் என்ற பேச்சு அடிபடத் தொடங்கிவிட்டது. அப்போது அதை முற்றிலுமாக நிராகரித்திருந்தார் அவர். கடைசியில் அவரே அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார்.

ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கம் தவறானது - அதற்காக கையாளப்பட்ட வழிமுறைகள் அரசியலமைப்புக்கு முரணானது என்றெல்லாம் கண்டனம் தெரிவித்து வந்த சர்வதேசம், இப்போது புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டது முறையற்றது என்று குரல் எழுப்பத் தொடங்கியுள்ளது.

ஷிராணி பண்டாரநாயக்கவை அரசாங்கம் பதவி நீக்குவதற்குக் காரணம், அரசியல் காழ்ப்புணர்வே என்ற கருத்து சர்வதேச அளவில் மேலோங்கியிருந்தது. இப்போது, அதற்குக் காரணம், நீதித்துறையை அரசாங்கம் முற்றிலுமாகத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதே என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நீதிபதிகள் பக்கச்சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது நியதி. அதுவும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் விடயத்தில் கூடுதல் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. அவர்களை விடவும் உயர்ந்த பொறுப்புணர்வில் இருக்க வேண்டியவர் தான் பிரதம நீதியரசர்.

பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்குவதற்காக அரசாங்கம் கேலிக்கூத்தான பல காரியங்களை செய்து, பிரதமர் நீதியரசர் பதவிக்குரிய கௌரவத்தை கெடுத்துவிட்டது. இப்போது மொஹான் பீரிஸை அந்தப் பதவிக்கு நியமித்துள்ளதன் மூலம், பிரதம நீதியரசர் பதவியின் மீதான சர்ச்சைகள் இன்னும் வளர்வதற்கே இடமளிக்கப்பட்டுள்ளது. மொஹான் பீரிஸ் முன்னர் சட்டமா அதிபராக இருந்தவர். இதே அரசாங்கத் தரப்பின் சார்பில் வழக்குகளை நடத்தியவர். ஓய்வுபெற்ற பின்னர், அரசாங்கத்துக்காகவே பணியாற்றி வருபவர். ஐ.நாவின் அமர்வுகளில் அரசாங்கத்தரப்பு பிரதிநிதியாக பங்கேற்றவர். ஜனாதிபதியினதும் அமைச்சரவையினதும் சட்ட ஆலோசகராக இருப்பவர். அதுமட்டுமன்றி, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் இருப்பவர்.

இவ்வாறு பலதரப்பட்ட அரசு சார்ந்த பணிகளில் ஈடுபட்ட ஒருவரால், பிரதம நீதியரசர் பதவியில் எவ்வாறு பக்கச்சார்பின்றிச் செயற்பட முடியும் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி. பிரதம நீதியரசரான பின்னர், இந்தப் பதவிகளை விட்டு ஒதுங்கிக் கொண்டாலும் கூட, மொஹான் பீரிஸ் வழங்கப்போகும் தீர்ப்புகளின் மீது அது நிச்சயம் கேள்விகளை எழுப்பவே செய்யும். நீதிமன்றத் தீர்ப்புகளை வெளியில் எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது என்ற மரபை ஏற்கனவே அரசாங்கம் தனது வசதிக்காக உடைத்துவிட்டது. இந்தநிலையில், மொஹான் பீரிஸ் அளிக்கப் போகும் தீர்ப்புகள் கடுமையான கவனிப்புக்கும் விமர்சனப் பார்வைகளுக்கும் உட்படுவதையும் எவராலும் தடுக்க முடியாது.

ஏற்கனவே, இவர் அரசுத்தரப்பில் வழக்குகளை நடத்தியிருக்கும் போது, அதுசார்ந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்துக்கு வரும்போது, இவரது தீர்ப்புகளில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்த்தரப்பினால் எவ்வாறு நம்பமுடியும்?

மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டதும், சர்வதேச ஊடகங்கள் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்குச் சார்பானவரை பிரதம நீதியரசராக நியமித்துள்ளதாக செய்திகளை வெளியிட்டனவே தவிர, புதிய பிரதம நீதியரசர் நியமனம் என்று முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள், அவர்களின் பதவி மூப்பு வரிசை எல்லாமே இருந்தபோதிலும், முன்னொருபோதும் நீதியரசராகவே பணியாற்றியிராத மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராகவே நியமிக்கப்பட்டுள்ளது உச்சக்கட்ட கேலிக் கூத்து என்ற விமர்சனங்கள் உள்ளன.

ஷிராணி பண்டாரநாயக்க சட்டத்தரணியாகவே பணியாற்றாமல் - சட்டப்பீட விரிவுரையாளராக இருந்து நேரடியாக உயர்நீதிமன்ற நீதியரசரானவர். அந்தப் பதவியில் இருந்து தான், பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

மொஹான் பீரிஸ் சட்டத்தரணியாகப் பணியாற்றினாலும், நீதிபதியாகப் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டிராதவர். ஷிராணி பண்டாரநாயக்கவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, உயர்நீதிமன்ற நீதியரசராக நியமித்தபோது, எத்தகைய விமர்சனங்கள் எழுந்தனவோ, அதே விமர்சனங்களுக்கு மொஹான் பீரிசும் விதிவிலக்கானவராக இருக்க முடியாது. மொஹான் பீரிஸின் நியமனத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற சட்டத்தரணிகளின் போராட்டமும் சிக்கலுக்குரியதே.

இதுமட்டுமன்றி, இவரது நியமனத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவும், இவருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடும் அடுத்த கட்ட சிக்கலுக்கான அத்திவாரங்கள்.

எனவே மொஹான் பீரிஸினால், பிரதம நீதியரசர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதானால், தொடர்ச்சியான பல சர்ச்சைகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். இன்னொரு பக்கத்தில், மொஹான் பீரிஸின் நியமனத்துக்கு எதிராக, வெளிநாடுகளில் இருந்து எழுந்துள்ள கண்டனக் குரல்கள் எதிர்காலத்தில் எத்தகைய நகர்வுகளுக்கு வழிசமைக்கப் போகிறது என்ற கேள்வியும் உள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தமக்குச் சார்பாகச் செயற்படக் கூடிய ஒருவரை, பிரதம நீதியரசர் பதவியில் அமர்த்திவிட்டது. இது இலங்கையின் நீதித்துறைச் சுதந்திரத்தை வருங்காலத்தில் பெரும் கேள்விக்குள்ளாக்கி விடப்போகிறது. ஏனென்றால், அரசியல் கலப்பற்ற நீதித்துறைக் கட்டமைப்பு என்ற பாரம்பரியத்தை ஒட்டுமொத்தமாக இது சீர்குலைத்துவிட்டது.

ad

ad