புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2013




           "அவரது உடலை எரித்த தீ... அணையாது; அணையக்கூடாது. அது ஒரு புதிய தொடக்கத்திற்குக் காரணமாக இருக்கவேண்டும்' என்றார் ஜந்தர்மந்தர் பகுதியில் கையில் மெழுகுவர்த்தி ஏற்றியிருந்த சாஜிதா. அவரது குரலும் மனமும் அந்த 23 வயது மருத்துவ மாணவியின் நினைவாகவே இருப்பதைக் காண முடிந்தது. சாஜிதாவைப் போலவே அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் உணர்வுகளும் ஒருங்கிணைந்திருந்தன. 

நிர்பயா, அமனத் என்ற பெயரில் அழைத் தாலும், டெல்லிப் பேருந்தில் பாலியல் கொடூரத் திற்குள்ளாகி, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர்விட்ட அந்த இளம் பெண்ணை இந்தியாவின் மகள் என்றுதான் ஊடகத்தினரும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியோரும் குறிப்பிடுகின்றனர். அந்தப் பெண்ணின் உடலை ஏற்றி வரும் ஸ்பெஷல் விமானத்தை உறவினர்கள், நண்பர்கள் உள்பட எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அரசுத் தரப்பின் நடவடிக்கைகள் வேறுமாதிரியாக அமைந்துவிட்டன.

அந்த பெண் படித்த கல்லூரியில் படித்த சக மாணவி தன் பெயரைத் தவிர்த்துவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார். ""கடைசியாக அவளுக்கு அஞ்சலி செலுத்தணும்னு நினைச்சித்தான் காத்துக்கிட்டி ருக்கோம். ஆனா, எல்லா நடவடிக்கைகளும் ரகசியமாகவே இருக்குது. ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் இவங்களில்கூட ஒரு சிலர்தான் இறுதிக்காரியத்தில் கலந்துக்க முடியும் போலிருக்குது. ஏன் இப்படி செய்றாங்கன்னு தெரியலை'' என்றார் விரக்தியாக. 

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்லியாதான், இந்தியாவின் மகள் எனப்படும் அந்தப் பெண்ணின் சொந்த ஊர். அங்கே ஒரே கோபமும் ஆத்திரமுமாக மக்கள் இருப்பதைக் காண முடிந்தது. பெண்ணின் பாட்டிக்கு 80 வயது. அவரை யாராலும் ஆறுதல்படுத்த முடியவில்லை. ஊர்க்காரர்களும் உறவினர்களும், ""உயிரோடுதான் காப்பாற்ற முடியலை. இறந்த உடலைக்கூட பார்க்க முடியுமான்னு தெரி யலையே'' என்றனர் வேதனையுடன். 

இறுதி ஊர்வலத்தில் கூட்டம் சேர்ந்தால் அது பெரும் பதட்டமாக மாறி, அரசுக்கு எதிரான வன்முறையாகக்கூட ஆகிவிடலாம் என்பதுதான் மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசின் பயமாக இருந்தது. அதைத் தவிர்ப்பதற்காக, பெண்ணின் குடும்பத் தினரிடம் அரசு இயந்திரங்கள் தொடர்ந்து பேசி வந்தன. சனிக்கிழமை (டிசம்பர் 29) இரவி லிருந்தே டெல்லியின் பாலம் விமான நிலைய  டெக்னிக்கல் ஏரியாவிலிருந்து அவரது வீடு உள்ள மகாதேவ் என்க்ளேவ் வரை 200-க்கும் அதிகமான போலீசாரும், எல்லை பாதுகாப்பு படை ஜவான்களும் குவிக்கப்பட்டிருந்ததை நாம் காண முடிந்தது. 

மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்துவோர் ஜந்தர் மந்தர் பகுதியிலேயே இருக்கும்படி செய்யப்பட்டதால், அவர்களிடம் உணர்ச்சியலை மோதியது. தன் பங்குக்கு அஞ்சலி  செலுத்த அங்கு வந்த முதல்வர் ஷீலா தீட்சித்தைக் கடுமை       யாகக் கேள்வி கேட்டு திருப்பி அனுப்பியது திரண்டிருந்த கூட்டம். பாதுகாப்புடன் அவர் திரும்பிச் சென்றார். அதே நேரத்தில், சிங்கப்பூர் ஃப்ளைட்டின் வருகையையும் எதிர்பார்த்தபடியே இருந்தது.

ஞாயிறு(டிச.30) அதிகாலை 3.30 மணிக்கு இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அந்த ஸ்பெஷல் ஃப்ளைட் தரையிறங்கிய சிறிது நேரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அஞ்சலி செலுத்தினர். 30 நிமிட நேரம் அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் தெரிவித்தனர். அங்கிருந்து, ஆம்புலன்ஸில் எடுத்துச்செல்லப்பட்ட உடல், பலத்த பாதுகாப்புடன் அதிகாலை 4.30 மணிக்கு மகாதேவ் என்க்ளேவில் உள்ள வீட்டை அடைந்தது. லோக்கல் பா.ஜ.க.வினர் உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் காத்திருந்தனர். மற்றபடி, நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இருந்தனர். இறுதிச் சடங்குகள் வேகவேகமாக நடந்தன. பிறகு, அந்த உடல் மீண்டும் ஆம்புலன்ஸில் ஏற்றப் பட்டது. அருகில் உள்ள துவாரகா மயானத்தில் காலை 6.45 மணிக்கு எரியூட்டப்பட்டது.  மகளுக்கு ஏற்பட்ட நிலையால், தாயார் மயங்கி விழ, அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். 

அரசு மற்றும் அதிகாரிகளின் நெருக்கடியால் இறுதிச்சடங்கைக்கூட முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றும் ஏன் இந்த அவசரம் என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. பெண்ணின் பெற்றோருக்கோ குடும்பத்தினருக்கோ சங்கடம் ஏற்படுத்த மாட்டோம் என்ற உத்தரவாதத்துடன், இறுதி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில்லை என ஊடகங்கள் முடிவெடுத்து சனிக்கிழமையே அறிவித்தன. ஆனால், ஞாயிற்றுக்கிழமையில் பொதுமக்களும் இளைஞர்களும் கூடினால், அது அரசுக்கு நெருக்கடியாக மாறும் என்ற அச்சமே, இந்த அவசர இறுதிக்காரியத்திற்குக் காரணம் என வெளிப் படையாகவே சொன்னார் மூத்த அதிகாரி ஒருவர்.

டெல்லியில் தொடங்கி தமிழகத்தின் பல மாநிலங்களிலும் அந்தப் பெண்ணுக்காக அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எல்லோருடைய கோரிக்கை யும், அந்தப் பெண்ணின் உடல் போலவே உண்மை களும் எரிந்துவிடக்கூடாது என்பதுதான். இனி, எந்தப் பெண்ணுக்கும் இத்தகைய கொடூரம் நிகழ்ந்து விடக்கூடாது என உரத்த குரல்கள் கேட்கின்றன. பாலியல் கொடுமை செய்த 6 பேரும், திகார் சிறையில் பாதுகாப்பான ப்ளாக்கிற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கும் பதிவாகிவிட்டது. விரைவில் குற்றப்பத்திரிகை, விசாரணை, தண்டனை அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்தியாவின் குரலாக இருக்கிறது.

ஞாயிறு மாலையில் சோனியா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாலியல் குற்றம் புரிவோருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரசாயன முறையிலான ஆண்மை நீக்கமும் செய்யப் படவேண்டும் என்பது பற்றி ஆலோசித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம்பெண்ணுக்கு நேர்ந்த  கொடூரத்தின் முழு விவரங்களுடன், சிங் கப்பூருக்குக் கொண்டு சென்றதன் பின்னணி-இந்தியா வின் பிற பகுதிகளிலும் முன்பும் பின்புமாகத் தொடரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தையும் வெளிப்படையாக்க வேண் டும். இதைத்தான் கண்ணீர் கோரிக்கையாக வைத்து உருகிக்கொண்டிருக்கின்றன அந்த இளம்பெண்ணுக் காக ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள்.

-டெல்லியிலிருந்து அக்பர்

ad

ad