புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2013


அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உட்பட பல நாட்டு தூதரகங்களுக்கு நோர்வே தமிழ் இளையோர் நடுவம் மனு கையளிப்பு

தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களுக்கெதிரான சிறிலங்கா அரசின் ஜனநாயக விரோதப் போக்கும் ,அடக்குமுறைகளும் .தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் ஜனநாயக விரோத போக்கையு
ம் அடக்குமுறைகளையும் கண்டித்து நோர்வே தமிழ் இளையோர் நடுவம் நேற்றைய தினம் (21-01-2013) திங்கள் கிழமை அமெரிக்கா, அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உட்பட பல நாட்டு  தூதரகங்களுக்கு   கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்றை சமர்பித்துள்ளனர். அம்  மனுவின் தமிழ் வடிவம்:
புலம்பெயர் தமிழ் இளையோராகிய நாம் அண்மைக்காலமாக இலங்கைத் தீவின் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மாணவர்கள்,மற்றும் இளையோர்களுக்கெதிராக ,சிறிலங்கா பேரினவாத அரசினாலும் அதன் இராணுவ இயந்திரத்தினாலும் கட்டவிழ்த்து  விடப்படுள்ள  வன்முறைகள் தொடர்பாக தங்கள் கவனத்திற்கு இம்மனுவை சமர்ப்பிக்கின்றோம்.
இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும் 1948 ம் ஆண்டிற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பேரினவாத சிந்தனையுடைய அரசுகளும்  அதன் படைகளும் தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களை இலக்கு வைத்தே தனது அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றது
இப்படியான அடக்குமுறைகளின் உச்சக்கட்ட வெளிப்பாடாகவே தமிழ் மக்கள் ஆயுதமேந்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பது யாவரும் அறிந்த வரலாற்று உண்மை. கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுத வழியிலான அரசியற் போராட்டம் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு  2009 மே  மாதம்   மௌனிக்கப்பட்டபோது ,சிறிலங்கா பேரினவாத அரசு போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்திருந்தது ஆனால் 2009 மே 18 க்குப் பின்னர் இலங்கைத்தீவின் சிறுபான்மையின மக்கள் தமது பேரம் பேசும் சக்தியை இழந்து அரசியல் அனாதைகளாக்கப் பட்டார்கள் என்பதனை நிரூபிக்கும் வகையில் அண்மைக்கால சம்பவங்கள் தொடர்கின்றன.
தமிழர் தாயகத்தில் இருந்து நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் எமக்குக் கிடைத்த தரவுகளின்படி
1/கார்த்திகை 27.2012 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த நூற்றுக்கணக்கான ஆயுதம் தரித்த சிறிலங்கா இராணுவமும் சிவிலுடை தரித்த புலனாய்வாளர்களும் ஆண்  ,பெண் விடுதிகளுக்குள் புகுந்து அங்கிருந்த மாணவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி ,அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தியதுடன் ,மாணவர்களின் கல்விகற்கும் உபகரணங்களையும், சொத்துக்களையும் ,மின்விநியோக அமைப்புக்களையும் சேதப்படுத்தியமை.
2/கார்த்திகை 28.2012 அன்று பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் ,முதல்நாள் நடைபெற்ற சம்பாவத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து ,அமைதிவழியில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் .அவ்வேளை பல்கலைக்கழக சுற்றாடலில் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் ,பொலிசாரும் எந்தவொரு முன்னறிவித்தலோ ,எச்சரிக்கையோ விடுக்காமல் ,பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்து தடிகள்,பொல்லுகள்,துப்பாக்கி அடிப்பாகம் போன்றவற்றால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் பல மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
3/இதனைத்தொடர்ந்து வந்த நாட்களில் இதுவரையில் ஐந்து பல்கலைக்கழக  மாணவர்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளதுடன் ,மாணவிகள் உட்பட பெருமளவானோர் வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு  செயலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.இச்சம்பவங்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுற்றாடலில் அளவுக்கதிகமான படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் ,உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலங்களில் யாழ்ப்பாண  வீதிகளில் நடமாடிய பாணியில் இராணுவத்தினர் கறுப்புத்துணியால் முகத்தை மறைத்துக்கட்டி மாணவர்களையும் ,மக்களையும் அச்சுறுத்தும் வகையில் நடமாடி வருகின்றனர்
5/யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்டுள்ள இளையோர்களுக்கு அனாமேதய தொலைபேசி உரையாடல்கள் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது .
6/யாழ்குடாநாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த ,இளையோர்கள் 45 பேர் வரையானோர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பூசா வதைமுகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் ;அப்பாவிகளான இவ்விளையோர்மீது அரசும் அரச ஊடகங்களும் பயங்கரவாத சாயம் பூசி வருகின்றது.
அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்கள் ,பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மனதாபிமான மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு முறையிட முயன்றபோது இராணுவத்தினரால் தடுக்கப்பட்டுள்ளனர் ,குறிப்பாக  ஐ .நா அமைப்புக்களிடம் முறையிடக்கூடாது என அச்சுறுத்தப் பட்டுள்ளனர்.
8/    மே  மாதம் உள்நாட்டுப்போர் நிறைவடைந்தபோது கைதுசெய்யப்பட்டவர்கள் ,தடுத்துவைக்கப்பட்டு அவர்கள் மீதான விசாரணைகள் நடத்தப்பட்டு ,புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாக கூறி நீண்டகால இடைவெளியில் பலர் விடுவிக்கப்பட்டிருந்தனர் .இப்படியானவர்கள் தமது குடும்பத்தினருடன் இணைந்து இயல்பு வாழ்வுக்குள் திரும்பிக் கொண்டிருந்தபோது சரியான காரணமெதுவுமின்றி  மீளவும் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.
காலம் காலமாக தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் பறித்து ,அவர்களின் உயிர்வாழும் உரிமையைக்கூட மிச்சம் விடாமல் பறித்தெடுத்த சிறிலங்கா பேரினவாத அரசின் உச்சக்கட்ட இனவழிப்பான 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பாக  பொறுப்புச் சொல்வதற்கு இனங்காணப்பட்ட சிறிலங்கா அரச தலைவர்களும் ,படையதிகாரிகளும் சர்வதேச சமூகத்தால் இதுவரை தட்டிக் கேட்கப்படாத நிலையில் ,தமிழ் மக்கள் மீதான சகல அடக்குமுறைகளும் தொடர்ந்து வருகின்றன.
ஒரு தனி மனிதனின் பிரப்புரிமையான  கருத்துச் சுதந்திரம் ,நடமாடும் சுதந்திரம் அமைதியாக ஒன்றுகூடும் உரிமை ஆகியவை தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றமையே மேற்கூறிய சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.இவ்வகையான
சிறிலங்கா அரசினதும் ,அதன் படைகளினதும் சனநாயக விரோதப்போக்கை மிகவும்  வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எமது கோரிக்கைகள்
1:  பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உடன் விடுதலை செய்யப்படவேணும்.
2:தமிழர் தாயகப் பகுதிகளில்      படையினர் விலக்கப்பட்டு,குடிசார் நிர்வாகம் ஏற்படுத்தப் படவேண்டும்
3:தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள மாணவர்களின் சுதந்திரமான கல்விக்கும்,அவர்களின் உயிர் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வழங்கப்படவேண்டும்.
4:இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியற் தீர்வு வழங்கப்படவேண்டும்.
எனவே இம்மனுவின் ஊடாக இலங்கைத்தீவில் சிறுபான்மையின தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும்  நெருக்கடிகளை புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறோம் பொருத்தமான இராஜதந்திர வழிகளில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து ,தமிழ் ,மக்களுக்கு  நிம்மதியான எதிகாலத்தை ஏற்படுத்தி தரவேண்டுமென கேட்டுக்கொள்வதுடன் ,தங்கள் சாதகமான பதிலுக்காக  காத்திருக்கின்றோம்.
தமிழ் இளையோர் நடுவம் – நோர்வே

ad

ad