www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

வெள்ளி, ஜனவரி 18, 2013


மகாராணி இல்லாத பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாடா? 

இலங்கையில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டை வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பதற்கு இலங்கை வரவிருந்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவரும், பிரிட்டனின் மகாராணியுமான எலிசபெத் தனது பயணத்தை ரத்துச் செய்வார் என்று இராஜ தந்திர தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, இந்த மாநாட்டை புறக்கணிப்பதற்கு கனடா, பிரிட்டன் உள்ளிட்ட முக்கிய சில நாடுகள் தீர்மானித்துள்ளன என்றும் அந்த வட்டாரங்களிலிருந்து நம்பகரமாக அறியமுடிகின்றது.
இதனால் இனிவரும் காலங்களில் இலங்கை அரசு அரசியல், பொருளாதார ரீதியில் பல நெருக்கடிகளைச் சந்திக்குமென எச்சரிக்கைப்பட்டுள்ளது.
இலங்கையில் மோசமாக இடம் பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறை, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசின் அசமந்தப் போக்கு ஆகியவை உட்பட மேலும் சில காரணங்களைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே மேற்படி நாடுகள் இலங்கையில் நடைபெறும் மாநாட்டைப் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளன என்று தெரிய வருகிறது.
அத்துடன், பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்ட விவகாரத்தையும் பொதுநலவாய நாடுகள் தற்போது கையிலெடுத்து இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன.
இலங்கையில் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் தாம் அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பார்கள் எனப் பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூனும், கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹர்பரும் முன்னதாகப் பல தடவைகள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் கொழும்பில் வைத்தே மேற்படி கருத்தைக் காட்டமாகத் தெரிவித்துவிட்டு நாடு திரும்பினார் என்பதும் தெரிந்ததே.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசு முழுமையாக அமுல்படுத்துவதற்குக் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவதாலும் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது குறித்துத் தீவிரமாகப் பரிசீலிக்கவேண்டியுள்ளது என ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாடு நடைபெறுவதற்கு முன்னர் அதில் அங்கம் வகிக்கும் 54 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய மாநாடொன்று நடைபெறும்.
அவ்வேளை தமது நிலைப்பாட்டைப் கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் பகிரங்கமாக அறிவிக்கும் என்றும், இதர நாடுகளும் தத்தமது தீர்மானங்களை அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
கொழும்பில் நடைபெறும் மாநாட்டை பகிஷ்கரிக்குமாறு மலேசியாவிடம் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தாலும், இது விடயத்தில் தமது முடிவை மலேசியா இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதற்கிடையில், சிங்கப்பூர், இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, பங்களாதேஷ் உள்ளிட்ட இலங்கை சார்பான நாடுகள் கொழும்பில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளும் என்று தெரியவருகிறது.
பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள அதன் செயலாளர் கமலேஷ் சர்மாவிடம் இலங்கை அரசு தமது நியாயாதிக்கங்கள் தொடர்பில் விளக்கமளித்தாலும், தமக்கு நேரடியாகக் கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டே கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் இலங்கை விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவை அறிவிக்கவுள்ளன.
அதேவேளை, இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் பொதுநலவாய மாநாட்டை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துவருகின்றது. 1976ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்குப் பின்னர் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் முக்கிய மாநாடு இதுவாகும்.
எனினும், பலம்பொருந்திய நாடுகள் மாநாட்டைப் புறக்கணிக்கவுள்ளதால், இலங்கைக்கு எதிர்காலத்தில் அரசியல், பொருளாதார ரீதியில் சிக்கல்கள் ஏற்படும் நிலை உருவாகும் என எதிர்வு கூறப்படுகின்றது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவராகச் செயற்படும் பிரிட்டன் மகாராணிதான் இந்த மாநாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.
அதன்பொருட்டு அவர் 2013ல் இலங்கை வருவார் எனக் கூறப்பட்டிருந்தாலும், அது தற்போது தலைகீழாக மாறியுள்ளது.