புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2013




         மீபத்தில் இலங்கையைச் சேர்ந்த ரிஸானா நபீக் என்ற இளம் பெண்ணிற்கு சவுதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை உலகத்தின் மனசாட்சியை உலுக்கிகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி 9-ம் தேதி சவுதி அரசாங்கம் ஒரு மைதானத்தில் ரிஸானாவை வெள்ளை ஆடை உடுத்தி, கைவிலங்கிட்டு, மண்டியிடவைத்து பொதுமக்கள் முன்னிலையில் அவள் தலையை சீவி எறிந்தது. 

நக்கீரன்
கடந்த 2005-ம் ஆண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சவுதிக்கு சென்ற ரிஸானா தனது எஜமானரின் குழந்தையை கொலை செய்தாள் என்பதே ரிஸானா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும். இந்தக் குற்றச் சாட்டு விசாரிக்கப்பட்டு ரிஸானா குறிப்பிட்ட குழந்தையை கொலை செய்தார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசு அறிவித்தது.அதனைத் தொடர்ந்து சவுதி தவாமி நீதி மன்றம் ரிஸானாவுக்கு மரண தண்டனை விதித்து 2007-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. தவாமி நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம், ஹாங்காங்கில் உள்ள ஆசிய மனித உரிமைகள் அமைப்பின் உதவியுடன் ரியாத் உயர் நீதி மன்றத்தில் ரிஸானாவுக்கு ஆதரவாக வழக்குத் தாக்கல் செய்தது.

ஆனால் மேல் முறையீட்டிலும் ரிஸானாவின் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. ரிஸானா அனுப்பிய கருணை மனுவும் சவுதி அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. சவுதி ஷரியத் சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவர் விரும்பினால் குற்ற வாளியை மன்னிக்கலாம். ஆனால் இறந்துபோன குழந்தையின் பெற் றோர் ரிஸானாவை கடைசிவரை  மன்னிக்கத் தயாராக இல்லை. இலங்கையிலிருந்து வேலைக்கு வந்த சில நாட்களிலேயே இந்த துயரம் நடந்தது. பாலூட்டும்போது குழந்தை மூச்சுத்திணறி இறந்ததே ஒழிய நாலுமாதக் குழந்தையைக் கொல்ல தனக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்ற ரிஸானாவின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. சவுதி அரசாங்கத்திற்கு ரிஸானா அனுப்பிய கருணை மனுவில் தன் துயரக் கதையை அவளே சொல்கிறாள். 

"நான் 01.04.2005-ல் சவுதி அரேபியாவுக்கு வந்தேன். நான் சவுதி அரேபியாவில் ஒன்றரை மாதங்கள் வீட்டில் வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், கழுவுதல், 4 மாதக் குழந்தையை பார்த்தல் ஆகியவற்றை செய்து கொண்டு இருந்தேன்.

குறித்த சம்பவ தினம் ஞாபகமில்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12.30 மணியிருக்கும் அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. அங்குள்ள 4 மாதக்குழந்தைக்கு நானே பால் கொடுப் பேன். வழமை போல அன்றும் பாலூட்டிக்கொண்டிருக்கும் போது குழந்தையின் மூக்கின் மூலம் பால் வெளியேவர ஆரம்பித்தது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை மெதுவாக தடவினேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் குழந்தை தூக்கமென நினைத்தேன்.

குழந்தையின் தாய்,  எனது எஜமானி 1.30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு பிள்ளையைப் பார்த்தார். அதன் பின்னர் அந்த எஜமானி என்னை செருப்பால் அடித்துவிட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு போனார். எஜமானி மூக்கிலும் கன்னத்திலும் அடித்த அடியினால் எனக்கு இரத்தம் வந்து கொண்டிருந்தது.

பின்னர் என்னை பொலிசிக்கு கொண்டு போய் அங்கு ஒரு பட்டியால் அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நசித்ததாக கூறுமாறு அடித்து வற்புறுத்தினார்கள். அவ்வாறு கூறும் வரை கரண்ட் பிடிக்கப்போவதாக (எலக்ட்ரிக் ஷாக்) கூறினார்கள்.

இந்த நிலையில்தான் அவர்கள் எழுதிய பேப்பரில் கையொப்பம் வைத்தேன். அப்போது எனக்கு பயங்கரமாக இருந்தது. ஞாபக சக்தி அப்போது எனக்கிருக்கவில்லை. அல்லாஹ் மீது சத்தியமாக குழந்தையை கொல்ல நான் கழுத்தை நசிக்கவில்லை. மேற்படி எனது வாக்கு மூலம் வாசித்து விளங்கிய பின்னர் உறுதியென உணர்ந்து கையொப்பமிடுகின்றேன்.'’’’

ரிஸானா சித்ரவதை செய்யப்பட்டு வாக்குமூலம் வாங்கப்பட்டாள் என்பது தெளிவாக இந்தக் கடிதத்தில் இருக்கிறது. இந்த சம்பவம் நடந்த போது ரிஸானாவின் உண்மையான வயது 17 தான். பாஸ்போர்ட்டில் அவளுக்கு கூடுதல் வயது குறிப்பிடப்பட்டு வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறாள்.  சர்வதேச மனித உரிமை சாசனத்தின்படி மைனர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது. 

ரிஸானா கடைசி வரை தன் வீட்டுக்கு- சொந்த நாட்டிற்கு திரும்பிவிடுவோம் என்று நம்பிக்கொண்டிருந்தாள். மரண தண்டனை நிறைவேற்றப்படும் அன்றுகூட அவள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தாள். ரிஸானாவை அவள் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் சந்தித்த மௌலவி ஏ.ஜே.எம். மக்தூம் ரிஸானாவின் பெற்றோருக்கு எழுதிய கடிதம் யாருடைய இதயத்தையும் உடையச் செய்து விடும். அந்தக் கடிதத்திலிருந்து சில பகுதிகள்:

""...சவுதி அராபியாவில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு பின் சென்ற புதன்கிழமை (09.01.2013) 11 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட உங்கள் மகள் ரிஸானாவை அவ ருக்கு அத்தண்டனை நிறை வேற்றப்படுவதற்கு ஓரிரு மணித் தியாலங்களுக்கு முன் சந்தித்தோம். அவரை சந்தித்ததும் அவரிடம் "இறுதி ஆசைகள் மற்றும் மரண சாசனம் ஏதும் இருக்கிறதா?' என்று வினவினேன். அவருக்குப் புரிய வில்லை, விளங்கப் படுத்தினேன். அதற்கு பதில் சொல்லாது "ஊருக்கு நான் எப்போது செல்வது?' என்று வினவினார். அப்போது அவர் ஊருக்கு சென்று விடலாம் எனும் எதிர்பார்ப்பிலேயே இங்கு வந்துள்ளார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.


"சரி, என்ன தீர்ப்பு உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது' என்று வினவிய போது, அவரின் முழு கதையையும் சொல்லி விட்டு பின் "மரண தண்டனை இப்போது விதிக்கப்பட்டுள்ளது' என்று கூறினார். அந்த இறுதி நேரத்திலும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றத்தை அவர் மறுத்தார்.
"உங்களுக்கு மரண தண்டனை இன்றுதான் நிறைவேற்றப்படப் போகிறது' என்று தடுமாற்றத்துடன் கூறினேன். அதற்கு அவர் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். அப்போது "நான் உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதும் சொல்ல வேண்டுமா?' என்று கேட்டேன். என்ன சொல்வது? என்று பதற்றத் துடன் என்னிடம் தாழ்ந்த குரலில் வினவினார்.

"என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானா?' என்று கெஞ் சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கி விட்டது "அப் படி அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டால், உங்கள் மரண தண்டனை இன்று நிறைவேற்றப்படும். உங்க ளிடம் ஏதாவது பணம், பொருட்கள் இருந்தால் அதனை என்ன செய்வது?' என்று வினவிய போது, மொத்தம் ஐநூறு சவுதி ரியால்கள் சொச்சம் இருப்பதாகவும், அதனை சதகா (தானம்)செய்திடுமாறும் வேண்டிக் கொண்டார்.

இறந்த குழந்தையின் உறவினர்களுடன் நீண்ட நேரம் பேசியும் பலனில்லாமல் போய்விட்டது. அதன் பிறகு அவருக்கு நியமிக்கப்பட்டிருந்தது போன்றே சென்ற புதன்கிழமை காலை 11 மணியளவில் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இறுதி பேச்சுவார்த் தையும் தோல்வியில் முடிவடைந்த பிறகு அவரை தண்டனை நிறைவேற்ற கொண்டு செல்லும் போது ’"இறைவா! இவர் அநியாயமாக தண்டிக்கப்படுகிறார் என்றால் அநியாயக்காரர்கள் மீது உனது தண்டனையை உடனே இறக்கிவிடுவாயாக' என்று கூட பிரார்த்தித்தேன்''’ என்று அந்தக் கடிதம் செல்கிறது. 

மரண தண்டனைக்கு எதிராக உலகமே போராடிக்கொண்டிருக்கும்போது ஒரு குழந்தையை கொல்வதற்கு எந்த காரணமும் இல்லாத ஒரு பெண் சிரச்சேதம் செய்யப்பட்டிருக்கிறாள். மேற்படி கடிதத்தை படிக்கும்போது அவளது தரப்பை அவள் சொல்வதற் குக் கூட முறையான மொழிபெயர்ப்பு வசதிகள் இல்லை என்று தெரிகிறது. ஒரு சிறுமியாக அவள் இருந்த போது நடந்த இந்த சம்பவத்திற்காக ரிஸானா சிரத்சேதம் செய்யப்பட்டிருப்பது உலகின் மனித நீதிக்கும் அறத்திற்கும் விடப்பட்ட மிகப்பெரிய சவால்.

இஸ்லாம் கருணையையும் மன்னிப்பையும் வரலாறு முழுக்க போதித்திருக்கிறது. ஷரியத் என்பது ஒரு வாழ்க்கை முறை தத்துவம். ஆனால் இன்று அது கொடிய தண்டனைகளுக்கான வெறும் சட்ட புத்தகமாக சுருக்கப்பட்டுவிட்டது. சவுதி ஊடகங்களும் பொது மக்களும் கூட ரிஸானா மன்னிக்கப்படவேண்டும் என்றே விரும்பினர். சவுதி இளவரசர் பெரும் தொகையை நஷ்ட ஈடாக வழங்க முன் வந்தும் அந்தக் குழந்தையின் பெற்றோர் மன்னிக்க மறுத்துவிட்டனர். 

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்ற பழிவாங்கும்  தண்டனைகள் நாகரிக சமூகத்தின் நியதிகளை அவமதிக்கின்றன. போர்வெறிகொண்ட பழங்கால இனக்குழு சமூகங்களின் தண்டனை  முறைகளை அப்படியே இன்று பின்பற்ற விரும்புவது என்ன நியாயம்? திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகளுக்காக பெண்களை கல்லால் அடித்துக்கொல்வது, திருட்டுக் குற்றங்      களுக்கு கையை வெட்டுவது, கசையடி, பிரம்படி, பொது இடத்தில் தலையை வெட்டுவது போன்ற கொடிய தண்ட னைகளை சவுதி அரேபியா, மலேசியா, பாகிஸ்தான் போன்ற சில இஸ்லாமிய நாடுகளே பின்பற்றுகின்றன. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இந்த தண்டனை முறைகளை கைவிட்டு விட்டன. சவுதி அரேபியா போன்ற நாடுகளில் அதிகாரத்தில் இருக்கும் ஜனநாயக விரோத மன்ன ராட்சியினர் பழமைவாத மத குருக்களின் துணையுடன் இத்தகைய கொடிய தண்டனைகளை தங்கள் அதிகாரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

வீட்டு வேலைகளுக்காக 15 இலட்சத் திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பெண்கள் சவுதியில் பணிபுரி கின்றனர். 

பெரும்பா லானோர் ஆசிய நாட்டவர்கள். அவர்கள் கடுமை யான பாலியல் சுரண்டலுக்கும் உழைப்புச் சுரண்ட லுக்கும் ஆளா கின்றனர். தங்கள் எஜமானர்களின் கருணையைத் தவிர அவர்களுக்கு எந்த சட்டப் பாதுகாப் பும் இல்லை. பாலியல் ரீதியாக துன் புறுத்தப்படும் பெண்கள் கள்ளக் காதல் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. சவுதி போன்ற நாடுகளில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக  குருதிப் பணம் கொடுத்து தண் டனையிலிருந்து தப்பிக்கும் வழக்கமும் இருக்கிறது. இந்த வகையில் பெரும் தொகை வசூலிக்கப்படுகிறது. பணம் கொடுக்க முடியாதவர்கள் தண்டனைக்கு ஆளாகிறார்கள்.

இந்தக் கொடிய தண்டனைமுறைகள் இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கே பெரும் அவமானம்.

ad

ad