புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2013





        காங்கிரசிற்கும் பா.ஜ.க.விற்கும் நடந்து வரும் பழைய யுத்தமொன்று மறுபடி முன்னிலைக்கு வந்திருக்கிறது. பாரதிய ஜனதா மதவாத பிற்போக்கு சக்திகளின் கூடாரமாகவும் காங்கிரஸ் மதசார்பற்ற மற்றும்  சிறுபான்மை சக்திகளின் பாதுகாவலனாகவும் ஒரு அரசியல் பிம்பம் நீண்டகாலமாக  இருந்து வந்திருக்கிறது. பிரமாண்டமான ஊழல் குற்றச்சாட்டு களில் காங்கிரஸ் மட்டுமல்ல, பா.ஜ.க.வும் சிக்கித் திணறிய கடந்த சில ஆண்டுகளாக இந்த மதவாத அரசியல் சற்றே பின்னுக்கு நகர்ந்திருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே சமீபத்தில் , "இந்தியாவில் நடந்த முக்கியமான சில பயங்கரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் சம்பந்தப் பட்டிருக்கின்றனர்' என்று கூறிய குற்றச்சாட்டு இந்துத்வா அரசியல் சக்திகளின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

சுஷில்குமார் ஷிண்டே : "ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா ஆகியவை இந்துத்வா தீவிரவாதத்தை உருவாக்குகின்றன. சில குண்டு வெடிப்பு சம்பவங் களின் விசாரணைக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பாரதிய ஜனதா கட்சி தங்களது முகாம்களில் இந்துத்வா தீவிரவாதத்திற்கு பயிற்சி அளித்து வருகின்றன என்பது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது. சமாஜ்வுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா மற்றும் மாலேகான் குண்டு வெடிப்புக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் காரணம்'’என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். 

சுஷில்குமார் ஷிண்டேவின் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்றும் "ராஜினாமா செய்ய வேண்டும்' என்றும் கூக்குரல்கள் வலுத்து வருகின்றன.

இந்த எதிர்ப்பிற்கு பா.ஜ.க. காட்டும் ஆதாரம் என்ன தெரியுமா? சுஷில்குமார் தெரிவித்த  கருத்தை லஷ்கர்-இ- தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையத் ஆதரித் திருப்பதுதான். இது தொடர்பாக தனது ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ஹபீஸ் சையத், "இந்திய உள்துறை அமைச்சர் இந்து தீவிரவாதம் குறித்து அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை உலக நாடுகள் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்தியாவை- அதன் சொந்த மண்ணில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக உலக நாடுகள் பிரகடனப்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.

உடனே "பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போரை காங்கிரஸ் பலவீனப்படுத்தி விட்டது' என்று பா.ஜ.க. பெரும் கூச்சல் போடுகிறது. அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு இஸ்லாமிய பயங்கரவாதியை தூக்கில் போட்டால்  அது இந்திய தேச பக்தி, அதே சமயம் ஒரு இந்து பயங்கரவாதியை பயங்கரவாதி என்று சொன்னாலே அது தேசத் துரோகம் என்பதுதான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு. உண்மையில் பயங்கரவாதம் குறித்துப் பேச எந்த அருகதையும் பா.ஜ.க.வுக்கு இல்லை என்பதையே  மேற்படி எதிர்வினைகள் காட்டுகின்றன.  பயங்கரவாதம் என்பது எல்லா முனைகளிலிருந்தும் எதிர்த்துப் போராட வேண்டிய பெரும் தீமை என்று பா.ஜ.க. கருதவில்லை. மாறாக அது இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்த வேண்டிய  யுத்தம் என்றே  அவர்கள் கருதுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. 

கசாப்பை தூக்கில் போட்டதை பெரும் வெற்றியாக கொண்டாடியவர்கள், அப்ஸல் குருவை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்று கூக்குரலிடுபவர்கள் இந்தியாவில் முக்கியமான பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர்களின் பெயர்களைக்கூட சொல்வதை அனுமதிக்க மறுக்கிறார்கள். பயங்கரவாதத்தை இஸ்லாமியர்களின் தனிச் சொத்தாக மாற்றியவர்களின் காதுகள் இந்து பயங்கரவாதம் என்ற சொல்லைக் கேட்கவே கூசுகின்றன.

பா.ஜ.க.வின் தமிழ் மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் இது தொடர்பாக கூறியிருக்கும் கருத்துதான் மிகவும் சுவாரசியமானது. "பொறுமையின் இருப்பிடமாக திகழும் இந்துக்களை பயங்கரவாதிகள் என்று கூறுவதும், துறவுக்கு அடையாளமான காவியை பயங்கரவாதத்திற்கு அடையாளமாகப் புனைவதும் நாட்டிற்கு செய்யும் துரோகம்'’என்று கூறியுள்ளார். அதாவது சில இந்து தீவிரவாத அமைப்புகள் குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்டதாகக் கூறினால் ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கே இழைக்கப்பட்ட அவமானம் மட்டுமல்ல, இந்த தேசத்திற்கே இழைக்கப்பட்ட துரோகம் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் இந்து அடையாளம் என்பதை அப்பழுக்கற்ற தேசிய அடையாளமாக முன்னிறுத்த விரும்புகிறார்கள்.

ஆனால் இதே சக்திகள்தான் இந்தியாவில் சில இஸ்லாமிய பயங்கரவாதிகள் செய்த கொடும் செயல் களுக்காக ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையுமே குற்றப்பரம்பரையினராக்கினர். பயங்கரவாதம் என்ற சொல்லும் இஸ்லாம் என்ற சொல்லும் பிரிக்கவே முடியாதபடி ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டது. நாடு முழுக்க பயங்கரவாத சந்தேகத்தின் பெயரிலும் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரிலும் ஏராளமான அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் வாடி வருகின்றனர். பலர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்என்று நீதிமன்றத்தில் நிரூபணமாகி  நீண்ட சிறைக் கொடுமைகளுக்குப் பிறகு விடுதலையாகியிருக்கின்றனர். இன்னும் ஏராளமானோர் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர். இது நாடு முழுக்க இஸ்லாமி யர்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப் பின்மையையும் விதைத்துள்ளது. சொந்த நாட்டில் இப்படி எந்தக் குற்றமும் செய்யாமல் பயங்கரவாதி என்ற அவச்சொல்லை ஒரு சமூகமே சுமந்து கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் இன்று எல்லா இடங்களிலும் சந்தேகத்திற்குரியவர்களாக, ஆபத்தானவர்களாக பார்க் கப்படும் பெரும் அவலத்தைக் காண்கிறோம். அதைப்பற்றி என்றைக்காவது இவர்கள் கவலைப் பட்டதுண்டா? மாறாக சில இந்துக்கள் குற்றமிழைத் தார்கள் என்று சொன்னாலே அது இந்து சமூகத்திற்கும், இந்து தர்மத்திற்கும், இந்திய தேசியத்திற்கும் விடப்பட்ட சவால் என்ற அளவிற்குப் போகிறார்கள்.

இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்துக்களின் வன்முறையை கண்டு மனம் வெதும்பி காந்தி உண்ணாவிரதம் இருந்தாரே. அதே காவி பயங்கர வாதத்தினால்தானே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாபர் மசூதி இடிப்பின்போது தலைமை தாங்கிச்  சென்றவர்கள் இதே காவிப்படையினர்தானே. மும்பையிலும், குஜராத்திலும் நடந்த இந்து -முஸ்லிம் கலவரங்களில் இஸ்லாமியர் களை பெருமளவு கொலை செய்தவர்களும், பெண்களை மானபங்கப்படுத்தியவர்களும், சொத்துக்களை சூறையாடி யவர்களும் யார்? பொன்.ராதா கிருஷ்ணன் சொல்லும் துறவும் சாந்தமும் கொண்ட இதே காவிப்படைகள்தானே, அந்த  குற்றங்களை இழைத்தன. 

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த  சிலர் இந்தியாவில் செய்த கொடிய பயங்கரவாத செயல்களுக்கு நிகராகவும் அதைவிடக் கடுமையாகவும் பயங்கரவாத செயல்களில் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் இனிக்கிறது. இந்து பயங்கரவாதம் என்ற சொல் கசக்கிறது. 

சுஷில்குமார் ஷிண்டே குறிப்பிட்டிருக்கும் வழக்குகள் ஏற்கனவே எல்லோரும்  அறிந்தவை. இந்துத்வா பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களைக் கண்டுபிடித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்திய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே, 26/ 11 மும்பை தாக்குதலின் போது மர்மமான சூழலில் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் யார் என்ற விவாதம் இன்றும் நீடித்து வருகிறது. 

சுஷில்குமாரின் கருத்தை மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் ஆத ரித்துள்ளார். "சமாஜ்வுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு மற்றும் மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு  சம்பவங் களில் சம்பந்தப்பட்ட, ஆர். எஸ்.எஸ்.ஸோடு தொடர்புடைய பத்து நபர்களின் பெயரை அரசாங்கம் கண்டறிந்துள்ளது' என்று அவர் கூறியிருக்கிறார்.  

லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர், சுசில்குமாரின் கருத்துக்களை மேற்கோள் காட்டுவதாலேயே சுஷில்குமாரின் குற்றச்சாட்டுகள் பொய்யானதாகவோ தேச விரோத தன்மை கொண்டதாகவோ மாறிவிடாது. பிரச்சினையை திசை திருப்புவதற்காகவே இந்துத்வா சக்திகள் இதை ஒரு வாதமாக பயன்படுத்து கின்றன. அதேபோல காங்கிரஸ் "சுஷில்குமார் ஷிண்டே ஒரு தலித் என்பதால்தான் அவரை இந்துத்வா சக்திகள் தாக்குகின்றன' என்பதும்  ஒரு அர்த்தமற்ற வாதம். அதற்கு காங்  கிரஸ் சொல்லும் காரணம்... முன்பு ப.சிதம்பரம் இதே கருத்தை சொன்னபோது இந்துத்வா அமைப்புகள் அதைக் கண்டுகொள்ளவில்லையாம். வேடிக்கை!

வரும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடியை முன்னிறுத்த பா.ஜ.க. தன் அதிகார வேட்டையில் இறங்கவிருக்கிறது. மோடியின் இந்துத்வா முகத்திற்கு எதிராக காங்கிரஸ் தனது மதச்சார்பற்ற முகம் என்ற அடையாளத்தை முன்னிறுத்தவே இந்த விவாதத்தை தொடங்கியுள்ளது. மதவெறியை எதிர்க்கும் இந்துக்கள், தலித்துகள், சிறுபான்மையினர் ஆதரவைத் திரட்டவே காங்கிரஸ், இந்துத்வா பயங்கர வாதம் பற்றி பேசுகிறதே ஒழிய உண்மையில் அதற்கு காவி பயங்கர வாதத்தை எதிர்த்துப் போராடும் எந்த மனத்துணிவும் இல்லை என்பதுதான் உண்மை.

இஸ்லாமிய பயங்கர வாதமும் சரி, இந்து பயங்கரவாதமும் சரி... இந்தியாவை படுகுழிக்கு அழைத்துச் செல்லும் இரு பெரும் நாசகார சக்திகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ad

ad